Published : 27,Jan 2023 05:50 PM

2 நாளில் ரூ.200 கோடி வசூலை தட்டித்தூக்கிய ‘பதான்’ - ஷாருக்கானை பார்த்து வியக்கும் பாலிவுட்

Shahrukh-Khan-s-Pathaan-Is-Bollywood-s-Biggest-Box-Office-Opener-Ever-200-crore-rupees-collection-in-2-days

ஷாருக்கானின் ‘பதான்’ படம் இதுவரை இல்லாத அளவுக்கு பாலிவுட் பாக்ஸ் ஆபீஸில் கல்லா கட்டி வருவது, திரையுலகினரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

கொரோனா ஊரடங்கு காலத்தில் கடந்த 2020-ம் ஆண்டு இளம் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட் இறப்புக்குப் பிறகு, பாலிவுட்டில் அமீர்கான், ரன்வீர் சிங், ரன்வீர் கபூர், அக்ஷய் குமார் உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் படங்கள் வெளியானப் போதெல்லாம் #BoycottBollywood என்ற ஹேஷ்டேக்கை ரசிகர்கள் ட்ரெண்ட்டாக்கி வந்தனர். ஏனெனில், பாலிவுட் திரையுலகில் இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள், நடிகர்களின் வாரிசுகள் தான் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன எனவும், அவர்களுக்கே அதிக வாய்ப்புகள் கிடைப்பதாகவும், சினிமா பின்புலம் இல்லாதவர்கள் நடிக்க வந்தால் வாய்ப்புகள் மறுக்கப்படுவதுடன், பொது விழாக்களில் அவமானப்படுத்தப்படுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.

மேலும், தென்னிந்தியாவில் இருந்து வெளிவந்த ராஜமௌலியின் ‘பாகுபலி’, ‘ஆர்.ஆர்.ஆர்.’, அல்லு அர்ஜூனின் ‘புஷ்பா’, யஷ்ஷின் ‘கே.ஜி.எஃப்.’ படங்களுக்குப் பிறகு பாலிவுட் ரசிகர்கள் தென்னிந்தியப் படங்களை பார்ப்பதில் தான் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதனால் இந்தப் படங்களுக்கெல்லாம் நல்ல மார்க்கெட் அங்கு நிலவுவதால், எதிர்பார்த்தைவிட வசூலிலும் சாதனைகள் புரிந்து வந்தது. ரன்பீர் கபூர் - ஆலியாவின் நடிப்பில் உருவான ‘பிரம்மாஸ்திரா’ படம் மட்டுமே அங்கு ஓரளவுக்கு வசூலை பெற்றது.

image

கடந்த இரண்டு ஆண்டுகளாக அங்கு வெளிவந்தப் படங்கள் எல்லாம் படுதோல்வியை சந்தித்தன. இந்நிலையில், பாடல் சர்ச்சைக்கு இடையே, நேற்று முன்தினம் வெளியான, ஷாருக்கானின் ‘பதான்’ திரைப்படம் இரண்டு நாட்களில் 219.6 கோடி ரூபாய் வசூலித்து சாதனை புரிந்துள்ளது. உலகம் முழுவதும் 8000 ஸ்கிரீன்களில் (இந்தியா -5,500, வெளிநாடு - 2500) வெளியான இந்தப் படம் வசூலை வாரிக் குவித்து வருகிறது.

இந்தியில், ‘கே.ஜி.எஃப். 2’ வின் முதல்நாள் வசூல் சாதனையான ரூ. 53.95 கோடியை முந்தி, ரூ. 55 கோடி வசூலித்திருந்தது. மேலும், முதல்நாளிலேயே ரூ.106 கோடி கலெக்ஷன் செய்திருந்ததை தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டு இருந்தது. இதனால் பாலிவுட் திரையுலகமே மறுக்கமுடியாத வியப்பில் ஆழ்ந்துள்ளது.

‘பதான்’ படத்தை யாஷ் ராஜ் ஃபிலிம்ஸ் தயாரித்திருந்தது. சித்தார்த் ஆனந்த் கதை மற்றும் இயக்கியிருந்தார். அப்பாஸ் டயர்வாலா மற்றும் ஸ்ரீதர் ராகவன் திரைக்கதை அமைத்திருந்தனர். சஞ்சித் பால்ஹரா, அங்கீத் பால்ஹரா பின்னணி இசை அமைத்திருந்தனர். விஷால் -சேகர் பாடல்கள் செய்திருந்தனர். ஆரிஃப் ஷேக் படத்தொகுப்பு பணிகளை மேற்கொண்டிருந்தார். இந்தப் படத்தில், ஷாருக்கான் ‘ரா’ உளவுத்துறை அதிகாரியாக நடித்துள்ளார்.

அவருடன் தீபிகா படுகோனே முன்னாள் ஐஎஸ்ஐ ஏஜெண்டாக நடித்துள்ளார். ஜான் ஆப்ரஹாம் வில்லனாகவும், டிம்பிள் கபாடியா, அஷூதோஷ் ராணா, ஷாஜி சௌத்ரி உள்ளிட்ட பலர் இந்தப் படத்தில் நடித்துள்ளனர். சல்மான் கான் கேமியோ ரோலில் வந்துள்ளார். உலகம் முழுவதும் நேற்றுமுன்தினம் வெளியான இந்தப் படம் இந்தியில் பல்வேறு சாதனைகளை படைத்துள்ளது.

சற்று முன்எடிட்டர் சாய்ஸ்