Published : 20,Jan 2023 01:56 PM
காலை, மாலை, ராத்திரினு எல்லா நேரமும் டீதான்! - மேற்கு வங்க பெண்ணின் நூதன பழக்கம்!

பெரும்பாலான இளைஞர்களுக்கு புத்துணர்ச்சி ஊட்டக்கூடிய ஒரே பாணமாக இருப்பது டீதான். டீ குடிப்பதையே வழக்கமாக கொண்டிருப்பவர்கள் ஏராளமானோர் இருப்பதை, உங்களை சுற்றியிருப்பவர்கள் மூலமே நீங்கள் அறிந்திருப்பீர்கள். ஆனால், வாழ்நாள் முழுவதும் டீ, ஜூஸ் போன்றவற்றை மட்டுமே குடித்து எந்த நோய்நொடியும் அண்டாமல் ஒரு பெண்மணி வாழ்ந்து வருகிறார் என்றால் நம்ப முடிகிறதா? அதுவும் இந்தியாவின் மேற்கு வங்கத்தில் உள்ள கிராமத்தில் அவர் வசிக்கிறாரென்றால்...!
ஹூக்ளி மாவட்டத்தின் கோஹட் ஊரில் உள்ள ஷ்யாம்பஜார் பஞ்சாயத்துக்குட்பட்ட பெல்திஹா கிராமத்தைச் சேர்ந்த அனிமா சக்ரபூர்த்தி என்பவர்தான் அவர். கிட்டத்தட்ட 50 ஆண்டுகளாக திட பொருட்களால் ஆன உணவுகளை தவிர்த்து வெறும் டீ மற்றும் ஹெல்த் ட்ரிங் போன்றவற்றை குடித்து உயிர் வாழ்கிறார் இப்பெண். இவருக்கு வயது 76.
இது குறித்து பேசியிருக்கும் அனிமா சக்கரபூர்த்தியின் மகன், “எங்கள் குடும்பம் முன்பு ஏழ்மையான நிலையிலேயே இருந்தது. அப்போது எங்கள் அம்மா வீட்டு வேலைகளுக்கு செல்வார். அங்கு கிடைக்கும் உணவுகளை எங்களுக்கு கொடுத்துவிட்டு வெறும் தண்ணீர், டீ , ஜூஸ் போன்றவற்றையே எங்கள் அம்மா குடிப்பார். அப்படித்தான் இது தொடங்கியது” என்றிருக்கிறார்.
அனிமா சக்கரபூர்த்தியின் இந்த பழக்கம் குறித்து பேசியிருக்கும் ஹூக்ளியைச் சேர்ந்த மருத்துவர் பிலேஸ்வர் பல்லவ், “உயிர் வாழ்வதற்கு நம் உடலில் கலோரிகள், ஊட்டச்சத்துகள் மற்றும் ஆற்றல் தேவை. அது அசைபோட்டு சாப்பிடும் உணவாகவோ அல்லது நீராகாரமாகவோ இருக்கலாம். எந்த வடிவில் சாப்பிடுகிறோம் என்பதில் எந்த குறையும் இல்லை. அதில் ஊட்டச்சத்து இருக்கிறதா இல்லையா என்பதே கேள்வி.
குடிக்கும் வகையிலான உணவை எடுத்துக்கொள்வதால் எந்த பாதிப்பும் இல்லை. டீ மற்றும் ஜூஸ் போன்றவற்றை குடிப்பதன் மூலம் அனிமா ஆரோக்கியமாகவே இருக்கிறார். கோமா மற்றும் நீண்ட நாள் படுக்கையிலேயே இருக்கும் நோயாளிகள் திரவ உணவுகளையே ட்யூப் மூலம் எடுத்துக்கொள்கிறார்கள்” என்று கூறியிருக்கிறார்.
அனிமா சக்கரபூர்த்தி எதையும் சாப்பிடாமல் ஆரோக்கியமாக வாழ்வதை அறிந்து பெரும் ஆச்சர்யத்திற்கும் அதிர்ச்சிக்கும் ஆளாகியிருக்கிறார்கள் பெல்திஹா கிராமத்தினர். அதிலும் சிலர் “எங்களால் சாப்பாடு சாப்பிடாமல் இருக்கவே முடியாது. ஆனால் அனிமா பல ஆண்டுகளாக அப்படிதான் இருக்கிறார்” எனச் சொல்லி புருவத்தை உயர்த்துகிறார்கள் அக்கிராமத்தினர். தன் கிராமத்தினரை மட்டுமன்றி நெட்டிசன்கள் பலரையும் கூட ஆச்சர்யப்படுத்தி வருகிறார் அனிமா.