Published : 19,Jan 2023 05:06 PM
‘எங்களுக்கு மட்டும் ஏன் பாகுபாடு?’ - சனம் ஷெட்டி புகார்! கோவை ஏர்போர்ட்டில் நடந்தது என்ன?

கோவை விமான நிலையத்தில் பரிசோதனை செய்வதில் பாகுபாடு காண்பிக்கப்படுவதாக, நடிகை சனம் ஷெட்டி ட்விட்டரில் வீடியோ வெளியிட்டு இருந்த நிலையில், சோதனை தொடர்பாக பாகுபாடு காட்டப்படுவதில்லை எனவும், குடியரசுத் தின விழாவையொட்டி அனைவரும் சோதனைக்கு உட்படுத்தபடுவதாக விமான நிலைய நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.
நடிகை சனம் ஷெட்டி கோவையில் இருந்து சென்னை செல்வதற்காக, கோவை விமான நிலையத்திற்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு வந்துள்ளார். அப்போது அவரது உடைமைகளையும், பயணிகள் சிலரது உடமைகளையும் அதிகாரிகள் சோதனை செய்துள்ளனர். இந்நிலையில் நடிகை சனம் ஷெட்டி டிவிட்டரில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் சென்னை செல்வதற்காக கோவை விமான நிலையம் சென்றதாகவும், விமானத்தில் ஏறும் முன் அங்கிருந்த பெண் அதிகாரி ஒருவர் எனது கைப்பை மற்றும் குறிப்பிட்ட மதத்தை சேர்ந்த 2 பேரின் பைகளை சோதனை செய்தார் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் இதுகுறித்து கேட்டபோது அந்த அதிகாரி, குடியரசுத் தின விழாவை முன்னிட்டு பாதுகாப்பிற்காக சோதனை நடத்தப்படுகிறது என்று தெரிவித்தாகவும், சோதனை செய்த இடத்தில் எந்த ஸ்கேனர் கருவியும் இல்லை, வெறும் கண்களால் ஒரு நபரை பார்த்து சந்தேகத்தின் பேரில் சோதனை நடத்துவது மன வேதனை தருகிறது எனவும், விமானத்தில் 190 பேர் பயணம் செய்த நிலையில் மற்றவர்கள் பைகளை ஏன் சோதனை செய்யவில்லை எனவும் அவர் தெரிவித்து இருந்தார்.
Stop discriminating based on religion, name, dress code @airindiain .
— Sanam Shetty (@ungalsanam) January 15, 2023
What's your criteria for random checks? #airindia#securityexcusepic.twitter.com/JHcOAEQ2N8
குறிப்பிட்ட சிலரை மட்டும் சோதனை செய்வது கஷ்டமாக உள்ளது, சோதனை செய்தால் அனைவரின் உடைமைகளையும் சோதனை செய்ய வேண்டும் என அந்த வீடியோவில் பேசியுள்ளார். நடிகை சனம் ஷெட்டியின் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகின்றது.
இது குறித்து விமான நிலைய அதிகாரிகளிடம் கேட்ட போது, வருகிற 26-ம் தேதி நாடு முழுவதும் குடியரசுத் தின விழா கொண்டாடப்படுவதை முன்னிட்டு, நாடு முழுவதும் உள்ள அனைத்து விமான நிலையங்களுக்கும் பாதுகாப்பு தொடர்பான எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது எனவும், இதன்படி கோவை விமான நிலையத்தில் பயணிகள் 2 கட்டமாக சோதனை செய்யப்படுகின்றனர், விமான நிலையத்தின் உள்ளே செல்லும் போது ஒரு முறையும், விமானத்தில் ஏறும் முன் ஒரு முறையும் சோதனை செய்யப்படுகிறது எனவும், குறிப்பிட்ட நபர்களை தேர்வு செய்து சோதனை செய்யப்படவில்லை, அனைவரும் சோதனைக்கு உட்படுத்தப்படுவதாக தெரிவித்தனர்.
சமீபத்தில் மதுரை விமான நிலையத்தில் தங்களது குடும்பத்தினரிடம் சி.ஐ.எஸ்.எஃப் வீரர்கள் கடுமையாக நடந்து கொண்டதாக நடிகர் சித்தார்த் சமூக வலைதளத்தில் பதிவுசெய்து இருந்தார். இந்நிலையில், சனம் ஷெட்டி இவ்வாறு ஒரு குற்றச்சாட்டை பதிவுசெய்துள்ளார்.