Published : 11,Jan 2023 04:26 PM

”எவ்ளோ பிரச்னைகள் இருக்கு; அஜித் படமா, விஜய் படமா என்ற விவாதம் தேவையா?” - அன்புமணி வேதனை

”ஒரு விஷயத்தைக் கையில் எடுத்தால் முடிக்காமல் விடமாட்டேன்” என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

பசுமைத் தாயகம் அமைப்பு சார்பில், ’நொய்யல் ஆற்றை மீட்போம்’ என்ற தலைப்பிலான கருத்தரங்கு, கோவையில் இன்று (ஜனவரி 11) நடைபெற்றது. இதில் பாமக தலைவரும் எம்.பியுமான மருத்துவர் அன்புமணி ராமதாஸ் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார்.

கோவை பீளமேடு பகுதியில் உள்ள தனியார் அரங்கில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் சிறுதுளி அமைப்பின் நிர்வாக அறங்காவலர் வனிதா மோகன், தமிழ்நாடு விவசாய சங்கங்களின் கூட்டு இயக்கத் தலைவர் தெய்வசிகாமணி, பன்னாட்டு வேளாண்மை மற்றும் நீரியல் வல்லுநர் பழனிசாமி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

நிகழ்ச்சியில் ’நொய்யல் மீளட்டும்... கொங்கு செழிக்கட்டும்’ என்ற லட்சினை (லோகோ) வெளியிடப்பட்டது. 

இதில் சிறப்புரையாற்றிய அன்புமணி ராமதாஸ், “ ‘கொங்கு செழித்தால் எங்கும் செழிக்கும்’ என்ற கருத்து உள்ளது. நொய்யலை மீட்க இந்த கருத்தரங்கம் நடைபெறுவது மகிழ்ச்சி. பசுமைத் தாயகத்தின் செயலாளர் அருள் எனக்கும், மருத்துவர் ராமதாஸுக்கும் பல தகவல்களைக் கொடுப்பார். தமிழகத்திற்கு மிக முக்கிய ஆறு காவிரி. அதனால்தான் அதை, காவிரித் தாய் என்கிறோம். தமிழ்நாட்டில் 5 கோடி மக்களுக்கு பயன்படுவது காவிரி.

image

இந்தக் காவிரியின் கிளை நதிகளில் ஒன்று, நொய்யல். 40 ஆண்டுகளுக்கு முன்னர் இந்த நொய்யலில் இருந்து அப்படியே நீரை எடுத்து அருந்தலாம். சேர, சோழ, பாண்டியர்கள் சேர்ந்து நொய்யலை பாதுகாத்தனர். நீர்மேலாண்மை செய்யப்பட்ட ஆறு, நொய்யல். சினிமாவில் இருப்பவர்கள் எளிதாகப் பேசுபொருளாகின்றனர். அவர்கள், இளைஞர்கள் மத்தியில் எளிதில் சென்றடைகின்றனர். ஆனால், நாங்கள் சினிமாவில் இல்லை. மன்னர்கள் ஆட்சிக் காலத்தில் இருந்த மொத்த ஏரிகளில் மக்களாட்சியில் 5 ஆயிரம் எரிகளைக் காணவில்லை. மாசு ஏற்படுத்துவதில் உலகின் மிகப்பெரிய வில்லனாக அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது.

தமிழ்நாட்டில் ஏரி, குளங்கள் முறையான பராமரிப்பில் இல்லை. ’பொன்னியின் செல்வன்’ படத்தில் வரும் ஆதித்ய கரிகாலன், நொய்யலில் சிறப்பான மேலாண்மை செய்தார் என்று சொன்னால்தான் அந்தக் கருத்து மக்கள் மத்தியில் போய்ச் சேரும். வெள்ளியங்கிரியில் உள்ள மரங்களை வெட்டித்தான் தொழில் நிறுவனங்கள் பல கோவையில் உருவாகின. அப்போதே நொய்யலின் அழிவு தொடங்கிவிட்டது. கூவத்தைச் சரி செய்ய எத்தனையோ கோடி ரூபாயைச் செலவு செய்கின்றனர். விளம்பரத்துக்கும் அடையாளத்திற்கும் அரசியல் செய்பவன் நான் அல்ல. பொது இடங்களில் புகைபிடிக்கக் கூடாது என்பதைக் கொண்டு வந்தவன் நான். போதைப் பொருள்களை ஒழிக்க இந்திய அளவில் போராடியவன். புகையிலை மற்றும் போதைப் பொருட்களின் பாககெட்களில் எச்சரிக்கை விழிப்புணர்வு வாசகம் கொண்டுவர போராடியவன் நான்.

image

எனது பொது நலம் நொய்யல், காவிரியை காக்க வேண்டும். சுயநலம் இங்கு மீட்கப்படும் நீரை நான் வீராணத்தில் குடிக்க வேண்டும். மேகமலை, வெள்ளிமலையில் காட்டை அழித்து டீ எஸ்டேட் ஆக்கிவிட்டனர். ’யானை, புலி ஊருக்குள் வந்து விடுகிறது’ என்கின்றனர். அவற்றின் இடத்தில்தான் நாம் வீடுகளைக் கட்டி உள்ளோம் என்பதை உணர்ந்து காடுகளை வளர்க்க வேண்டும். நொய்யலை மீட்க முதலில் வெள்ளியங்கிரியில் போராட்டத்தைத் தொடங்க வேண்டும். என்னிடம் ஆட்சி அதிகாரம் இருந்தால் ஒரே கையெழுத்தில் நொய்யலை மீட்க நடவடிக்கை எடுத்திருப்பேன். ஆட்சி அதிகாரம் என்னிடம் இல்லை. ஆனால் நாம் ஒன்றாக இணைந்தால் இது சாத்தியம்.

அத்திக்கடவு - அவிநாசி திட்டம் காமராஜர் காலத்தில் தொடங்கியது. அதில் இன்னும் 5 சதவிகித வேலைதான் மீதி உள்ளது. 2015ஆம் ஆண்டிலேயே டெல்டாவை வேளாண் மண்டலமாக அறிவிக்க வலியுறுத்தியவன் நான். திருப்பூரில் சாயக் கழிவுகள் நொய்யலில் கலக்கின்றன என்பது வேதனை. ‘நொய்யலை மீட்போம்’ என்ற திட்டத்துக்கு அரசே நிதி ஒதுக்கி செய்ய வைக்க வேண்டும். ஆனால் அதற்கான பணிகளை, நிதிகளை ஆர்வலர்களிடம் ஒப்படைக்க வேண்டும். கழிவுகளைத் தடுக்கவும், சுத்திகரிக்கவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழ்நாட்டில் ஆர்வம், விழிப்புணர்வு அதிகம் உள்ள பகுதி கொங்குதான். ஒரு விஷயத்தை கையில் எடுத்தால் முடிக்காமல் விட மாட்டேன். அதுபோல் நீர்மேலாண்மைக்கும் அரசே நிதி ஒதுக்க வேண்டும். ’கொங்கு செழிக்கட்டும்... கொங்கு செழித்தால் எங்கும் செழிக்கும்... அதற்கு நொய்யலை மீட்போம். Save River எல்லாம் முடிந்து விட்டது.. அந்த நிலையைக் கடந்துவிட்டோம்... இப்போது Review நொய்யல் என்ற கட்டத்தில் உள்ளோம்" எனப் பேசினார்.

image

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “நொய்யல் மிக மோசமான சூழலில் உள்ளது. பலர் இதை மீட்க முயற்சித்தனர். மத்திய, மாநில அரசுகள் இணைந்து நொய்யலை மீட்க வேண்டும். 30,000 சாயபட்டறை கழிவுகள் நொய்யலில் கலக்கிறது. பருவம் சார்ந்த ஆறு நொய்யல். வரலாறுமிக்க நொய்யல் ஆறு ஐசியூவில் உள்ளது. திடக்கழிவுகளை கலக்கவிடாமல் தடுக்க வேண்டும். 40 ஆண்டுகளுக்கு முன்பு செழிப்பாக இருந்த ஆறு நொய்யல். முதல்வர் நொய்யலை மீட்க அறிவிப்பு வெளியிட்டு, நிதி ஒதுக்கி, உரிய நிர்வாகிகளை நியமிக்க வேண்டும்.

இங்கு உண்டாகும் கழிவு, வீராணம் வரை தாக்கத்தை ஏற்படுத்துகிறது. வைகை, பாலாறு, தாமிரபரணி உள்ளிட்ட ஆறுகளை மீட்க பயணம் மேற்கொண்டு உள்ளேன். ஒரு லட்சம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கி நீர் மேலாண்மை செய்ய வேண்டும். நேர்மையான அதிகாரிகளை நியமிக்க வேண்டும். வேலை வாய்ப்பின்மை உள்ளிட்ட எத்தனையோ பிரச்சினைகள் நாட்டில் இருக்கையில் அஜித் படமா, விஜய் படமா என விவாதம் நடப்பது வேதனை. ஓடாத கிரைண்டர், மிக்சி, டிவி உள்ளிவற்றை கொடுக்க அரசு கடன் பெறுகிறது. ஆனால் மக்கள் பிரச்சினைகளுக்கு கடன் வாங்குவது தவறில்லை. நொய்யலுக்கான அடுத்தகட்டமாக நடைப்பயணம் மேற்கொள்ள உள்ளேன். விளம்பரத்துக்காக நான் இதைச் செய்வதில்லை. உணர்வுப்பூர்வமாக மக்களுக்காகக் களத்திற்குச் செல்கிறேன்” என்றார்.

சற்று முன்எடிட்டர் சாய்ஸ்