Published : 05,Jan 2023 09:38 AM
உத்திரமேரூர்: துக்க நிகழ்ச்சியில் நிகழ்ந்த துயரச் சம்பவம் - முன்பகையால் பிரிந்த உயிர்!

காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் காவல் குடியிருப்பு பின்புறம் உள்ள நரசிம்மன் நகரைச் சேர்ந்த செல்வராஜ் என்பவரின் மகன் பார்த்திபன் (30). கூலி வேலை செய்து வந்த இவருக்கு மதுப்பழக்கமும் இருந்துள்ளது.
இந்நிலையில், உத்திரமேரூர் பேரூராட்சி அருகே உள்ள மேட்டுத் தெருவில் வசித்து வந்த பார்த்திபனின் மாமனார் வரதன் என்பவர் நேற்று முன்தினம் மரணம் அடைந்தார். அவரது துக்க நிகழ்ச்சிக்கு பார்த்திபனும், எம்ஜிஆர் நகர் பகுதியைச் சேர்ந்த பாண்டியன் என்ற ராஜி (28) என்பவரும் சென்றுள்ளனர்.
சகலைகளான இவர்கள் துக்க நிகழ்வில் பங்கேற்றப்போது ராஜி அங்கு மறைத்து வைத்திருந்த இரும்புக் கம்பியால் பார்த்திபனின் கழுத்து பகுதியில் குத்திக் கொலை செய்து விட்டு சென்றதாக கூறப்படுகிறது. இது குறித்து தகவல் அறிந்த உத்திரமேரூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்திபனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதைத் தொடர்ந்து ராஜியை கைது செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், சில தினங்களுக்கு முன்பு, உத்திரமேரூர் அரசு மதுபானக் கடையில் இருவருக்கும் இடையே சண்டையும், வாக்குவாதமும் ஏற்பட்டதாகவும், அந்த முன்விரோதம் காரணமாக ராஜி, தனது சகலையான பார்த்திபனை கொலை செய்தது தெரியவந்தது. இந்த கொலை சம்பவம் உத்திரமேரூர் பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.