Published : 01,Dec 2022 11:35 AM
டெல்லி ஷ்ரத்தா கொலை வழக்கு: உண்மையை கண்டறிய அஃப்தாப்புக்கு தொடங்கியது நார்கோ சோதனை!

ஷ்ரத்தா கொலைக் குற்றவாளி அஃப்தாப் அமீன் பூனவல்லாவுக்கு நார்கோ சோதனை (உண்மை கண்டறியும் சோதனை) நடத்த அஃப்தாப்பை திகார் சிறையில் இருந்து பலத்த பாதுகாப்புடன் காவல்துறையினர் அழைத்துச் சென்றுள்ளனர். முன்னதாக நடந்த பாலிகிராஃப் சோதனையின் போது அஃப்தாப் குற்றத்தை ஒப்புக்கொண்டார்.
நார்கோ சோதனைக்கு முன் அம்பேத்கர் மருத்துவமனையில் அஃப்தாப்பின் உடல்நிலை பரிசோதிக்கப்பட்டது. ரோகினியின் தடய அறிவியல் ஆய்வகத்தில் பாலிகிராஃப் பரிசோதனையின் போது, தனது காதலி ஷ்ரத்தா வால்கரை கொலை செய்ததை அஃப்தாப் அமின் ஒப்புக்கொண்டார். ஆதாரங்களின்படி, பல அமர்வுகளுக்கு பிறகு பாலிகிராஃப் சோதனை செவ்வாயன்று முடிவடைந்தது. அதில் ஷ்ரத்தாவை கொன்று அவரது உடலை துண்டு துண்டாக வெட்டி பல பகுதிகளில் வீசியதையும் ஒப்புக்கொண்டிருந்தார் அஃப்தாப்.
முன்னதாக திங்கட்கிழமை குற்றவாளியை பாலிகிராபிக் சோதனைக்காக தடய அறிவியல் ஆய்வகத்திற்கு அழைத்து சென்றபோது வெளியே ஆயுதம் ஏந்திய சிலர் அஃப்தாப்பை ஏற்றிச் சென்ற போலீஸ் வேன் மீது தாக்குதல் நடத்தியதை கருத்தில் கொண்டு தற்போது பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு நார்கோ சோதனைக்கு அழைத்துச்செல்லப்பட்டு சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.