Published : 14,Nov 2022 03:20 PM

புதிய பயிற்சியாளருடன் புதிய அத்தியாயம்! போலந்து அணியின் நம்பிக்கை நாயகன் லெவண்டோஸ்கி!

The-Poland-football-team-will-start-a-new-chapter-with-a-new-coach

புதிய பயிற்சியாளரோடு புதிய அத்தியாத்தைத் தொடங்க போலந்து கால்பந்து அணி காத்திருக்கிறது.

போலந்து - தரமான வீரர்கள் பலர் இருந்தும் மிகப்பெரிய அரங்கில் இன்னும் தடுமாறிக்கொண்டிருக்கும் ஒரு அணி. கடந்த சில ஆண்டுகளில் பெரும் வீழ்ச்சி கண்டிருக்கும் அந்த அணி, புதிய பயிற்சியாளரோடு புதிய அத்தியாத்தைத் தொடங்கக் காத்திருக்கிறது. இந்தத் தொடரில் அந்த அணிக்கு இருக்கும் வாய்ப்புகள், பலம், பலவீனம் என்ன? அந்த அணியின் நம்பிக்கை யார்? என்பது குறித்து பார்க்கலாம்.

பயிற்சியாளர்: ஷெலா மிச்னீவிஷ்
FIFA ரேங்கிங்: 26
2022 உலகக் கோப்பை பிரிவு: சி
பிரிவில் இருக்கும் அணிகள்: அர்ஜென்டினா, மெக்சிகோ, சவூதி அரேபியா

உலகக் கோப்பையில் இதுவரை...

போலந்து அணி பங்கேற்க போகும் ஒன்பதாவது உலகக்கோப்பை தொடர் இது. முதல்முறையாக 1938ஆம் ஆண்டு உலகக் கோப்பையில் அந்த அணி விளையாடியது. எழுபது, எண்பதுகளில் கோலோச்சிய அந்த அணி, 1974 மற்றும் 1982 உலகக் கோப்பைகளில் மூன்றாவது இடம் பிடித்தது. அதன்பிறகு உலகக்கோப்பைக்கு தகுதி பெறுவதே அவர்களுக்குக் குதிரைக் கொம்பானது. 2018 உலகக்கோப்பையில் பெரும் எதிர்பார்ப்போடு களமிறங்கிய அந்த அணி, குரூப் சுற்றோடு வெளியேறியது. தரநிலையில் ஆறாவது இடத்தில் இருந்திருந்தாலும், செனகல் மற்றும் கொலம்பியா அணிகளுக்கு எதிராக தோல்வியடைந்து வெளியேறியது போலந்து. கடைசியாகப் பங்கேற்ற 3 உலகக் கோப்பைகளிலுமே (2002, 2006, 2018) முதல் சுற்றோடு வெளியேறியிருக்கிறது அந்த அணி.

image

தகுதிச் சுற்று செயல்பாடு:

முந்தைய உலகக்கோப்பை தகுதிச்சுற்றைப் போல் போலந்துக்கு இந்த தகுதிச்சுற்று எளிதாக இருந்துவிடவில்லை. இங்கிலாந்தின் பிரிவில் இடம் பெற்றதால், அந்தப் பிரிவில் இரண்டாவது இடமே பிடித்தது அந்த அணி. 10 போட்டிகளில் 6 வெற்றி, 2 டிரா, 2 தோல்வி என 20 புள்ளிகள் பெற்றது போலந்து. பிளே ஆஃப் போட்டியின் முதல் சுற்றில் ரஷ்யாவுடன் அந்த அணி விளையாடுவதாக இருந்தது. ஆனால் ரஷ்யாவை FIFA தடை செய்ததால், அடுத்த சுற்றுக்கு நேராக முன்னேறியது போலந்து. இறுதிச் சுற்றில் ஸ்வீடனை 2-0 என வென்று உலகக்கோப்பைக்குள் நுழைந்தது. அந்த அணியின் நட்சத்திர வீரர் ராபர்ட் லெவண்டோஸ்கி 9 கோல்கள் அடித்தார்.

பயிற்சியாளர்:

இந்த ஜனவரி மாதமே போலந்து அணியின் பயிற்சியாளராகப் பதவியேற்றார் ஷெலா மிச்னீவிஷ். அதற்கு முன் பயிற்சியாளராக இருந்த பாலோ சூசா, ஃபிளமெங்கோ அணியின் பயிற்சியாளராகப் பொறுப்பேற்றுவிட்டதால், கடைசி கட்டத்தில் வேறொரு பயிற்சியாளரைத் தேட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டது போலாந்து. அந்நாட்டின் பல்வேறு கிளப்களை வழிநடத்திய அனுபவம் கொண்டவரான மிச்னீவிஷ், போலாந்தின் அண்டர் 21 அணிக்கும் பயிற்சியாளராக இருந்திருக்கிறார்.

image

பலம்:

மிகவும் திறமையான ஃபார்வேர்டுகள் போலாந்து அணியில் நிறைந்திருக்கிறார்கள். லெவண்டோஸ்கி, ஆர்காடியூஸ் மிலிக், கிரிச்சோவியாக் பியான்டெக் என ஸ்டிரைக்கராக ஆடக்கூடிய 3 வீரர்கள் அந்த அணியில் இருக்கிறார்கள். ஒருவரையே அதிகம் நம்ப வேண்டிய நெருக்கடி போலாந்துக்கு இல்லை. கோல்கீப்பர் வோஸ்னியாக் ஷெஸ்னியின் அனுபவமும் பெரிய பலம். உலகக் கோப்பை போன்ற தொடர்களில் கோல்கீப்பர்கள் பெரும் மாற்றத்தை ஏற்படுத்துவார்கள். அதேபோல், டிஃபன்ஸ், நடுகளம் என அனைத்து ஏரியாக்களிலுமே அனுபவம் வாய்ந்த வீரர்கள் நிறைய இருக்கிறார்கள். ஷெஸ்னி, கமீல் கில்க், மேட்டி கேஷ், யான் பெட்னரெக், பியாடோர் ஜீலின்ஸ்கி, மதியஸ் கிளிக், கரோல் லினெட்டி, லெவண்டோஸ்கி, பியான்டெக், மிலிக் என பெரிய தொடர்களில் பெரிய அணிகளுக்கு ஆடும் பல வீரர்கள் இந்த அணியில் இருக்கிறார்கள்.

பலவீனம்:

என்னதான் திறமையான வீரர்கள் அணியில் நிறைந்திருந்தாலும், ஒரு அணியாக போலாந்து எதிர்பார்ப்புகளை நிறைவு செய்யவே இல்லை. பெரிய அரங்குகளில் அந்த அணி எப்படியாவது சொதப்பிவிடுகிறது. 2020 யூரோ தொடரில்கூட, ஸ்லோவேகியா மற்றும் ஸ்வீடன் அணிகளிடம் தோற்று குரூப் சுற்றோடு வெளியேறியது. அதுமட்டுமல்லாமல் 3 ஸ்டிரைக்கர்கள் இருந்தாலும், இந்த அணியில் குறிப்பிட்டு சொல்லும்படியான விங்கர்கள் இல்லை. அதனால், நடுகளத்தின் மீது அதிக எதிர்பார்ப்பு இருக்கிறது. அந்த நடுகளத்தால் அதை கையாளவும் முடிவதில்லை. அது லெவண்டோஸ்கி மீதான நெருக்கடியை பல மடங்கு அதிகரித்துவிடுகிறது. அதுமட்டுமல்லாமல் உலகக் கோப்பைக்கு 10 மாதங்களே இருக்கும்போது பயிற்சியாளரையும் மாற்றவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டிருக்கிறது. மிச்னீவிஷ் தலைமையில் அந்த அணி 8 போட்டிகளில் மட்டுமே விளையாடியிருக்கிறது. உலகக் கோப்பைக்கு முன்பும் பெரிய அளவு நேரம் இருக்கப்போவதில்லை.

image

நம்பிக்கை நாயகன்:

போலாந்து என்றாலே ராபர்ட் லெவண்டோஸ்கி தானே! அந்த அணியின் டாப் ஸ்கோரரான லெவண்டோஸ்கி இந்த உலகக் கோப்பையில் தன் முதல் கோலை அடிக்க ஆயத்தமாக இருப்பார். ஆம், இதுவரை இந்த கோல் மெஷின் உலகக் கோப்பையில் கோல் அடிக்கவில்லை. பேயர்ன் மூனிச் அணியில் கோல்களாகப் பொழிந்து கொண்டிருந்தவர், இப்போது பார்சிலோனாவிலும் அதைத் தொடர்ந்து கொண்டே இருக்கிறார். இவருக்கு சரியான ஒத்துழைப்பு கிடைக்கும்பட்சத்தில் இந்தத் தொடரிலும் லெவண்டோஸ்கியால் தாக்கம் ஏற்படுத்த முடியும்.

வாய்ப்பு:

பெரிய தொடர்களில் பொதுவாகவே போலாந்து சொதப்பிவிடும். கடந்த உலகக் கோப்பை, 2020 யூரோ அனைத்திலும் வெற்றி பெற வேண்டிய போட்டிகளிலெல்லாம் தோல்வியடைந்து வெளியேறியது அந்த அணி. இம்முறை கடினமான இரு அணிகள் போலாந்தின் பிரிவில் இடம் பெற்றிருக்கின்றன. அர்ஜென்டினா உச்சகட்ட ஃபார்மில் இருக்கிறது. மெக்ஸிகோவோ, போலாந்து நேரெதிர். பெரிய போட்டிகளில் சிறப்பாக செயல்படும் அணி. சவூதி அரேபியாவை போலாந்து வீழ்த்தியே ஆகவேண்டும். அதனால், மெக்ஸிகோ போட்டியின் முடிவே இந்த அணி அணி அடுத்த சுற்றுக்கு முன்னேறுமா என்பதை உணர்த்தும். மீண்டும் முதல் சுற்றோடு வெளியேறுவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன!

சற்று முன்எடிட்டர் சாய்ஸ்