Published : 08,Nov 2022 04:05 PM

பிரியாணி கேட்டதற்காக தீவைத்து கொளுத்திய கணவரை எரியும் நிலையில் கட்டிபிடித்த மனைவி!

Husband-said-wife-on-fire-who-asked-him-to-buy-biryani--wife-died

பிரியாணி கேட்ட மனைவியை தீவைத்த கணவரை எரியும் நிலையில் மனைவி கட்டிபிடித்ததால் இருவருக்கும் பலத்த தீக்காயம் ஏற்பட்டது. கணவன் மனைவி இருவரும் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மனைவி உயிர் இழந்தார்.

சென்னை அயனாவரம் தாகூர் நகர் 3வது தெருவில் வசிப்பவர் கருணாகரன்(75). ஓய்வுபெற்ற ரயில்வே ஊழியரான இவருக்கு பத்மாவதி(66) என்ற மனைவியும், மகேஸ்வரி(50), குமார்(46), ஷகிலா(44), கார்த்திக் (40) என 4 பிள்ளைகளும் உள்ளனர். பிள்ளைகள் நால்வரும் திருமணமாகி தனியாக வசித்துவரும் நிலையில் கருணாகரன், பத்மாவதி தம்பதியும் தனியாக வசித்து வருகின்றனர். வயது முதிர்வின் காரணமாகவும், தனியாக வசித்து வந்ததாலும் கடந்த சில மாதங்களாக பத்மாவதி சற்று மனநலம் பாதிக்கப்பட்டதால் பிள்ளைகள் வீட்டில் தங்க வைத்தாலும் அவர்களுடன் சண்டை போட்டுக்கொண்டு வீட்டிற்கு வந்துவிடுவது வழக்கம் எனக் கூறப்படுகிறது. இதே போல் கணவன், மனைவி இடையே அடிக்கடி சிறுசிறு தகராறு ஏற்படுவதும், இதனால் இருவரும் அடிக்கடி பேசாமலும் இருந்து வந்துள்ளனர்.

image

இந்நிலையில், கருணாகரன் தனது மனைவி பத்மாவதிக்கு சரியாக சாப்பாடு வாங்கி கொடுப்பதில்லை எனக் கூறப்படுகிறது. நேற்று இரவு பிரியாணி வாங்கி வந்து கருணாகரன் மட்டும் தனியாக சாப்பிட்டுள்ளார். அப்போது பத்மாவதி தனது கணவரிடம் தனக்கும் பிரியாணி வேண்டும் எனக் கேட்டுள்ளார். இதனால் கணவன் மனைவி இடையே தகராறு ஏற்பட்டதால் ஆத்திரமடைந்த கருணாகரன் உடனே வீட்டில் இருந்த மண்ணெண்ணெயை பத்மாவதி மீது ஊற்றி தீவைத்துள்ளார். உடனே பத்மாவதி தீயுடன் ஓடிவந்து கணவர் கருணாகரனை கட்டி பிடித்து கொண்டதால் இருவரும் தீயில் எரிந்து காயமடைந்தனர். இவர்களது வீட்டில் இருந்து புகை வருவதை பாரத்த அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது இருவரும் தீயில் எரிவதை கண்டு பதறிபோய் தண்ணீரை ஊற்றி தீயை அணைத்தனர்.

image

பின்னர் போலீசாருக்கு தகவல் தெரிவித்ததை அடுத்து அயனாவரம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீக்காயமடைந்த இருவரையும் மீட்டு ஒரே ஆம்புலன்சில் சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பத்மாவதி 40% தீக்காயங்களுடனும், கருணாகரன் 20% தீக்காயங்களுடனும் கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தனர்.

இந்நிலையில் சிகிச்சை பெற்றுவந்த பத்மாவதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கருணாகரனும் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இச்சம்பவம் குறித்து அயனாவரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்