Published : 04,Nov 2022 01:54 PM

25 டன் எடையுடன் பூமியில் விழப்போகும் சீன ராக்கெட்... 10 மாடி கட்டிட உயரம் இருக்குமாம்!

Chinese-rocket-stage-predicted-to-make-an-uncontrolled-reentry-into-Earth-s-atmosphere

25 டன் எடையுடன் சீன ராக்கெட்டொன்று பூமியில் விழப்போவதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. இது சுமார் 10 மாடி கட்டிட உயரம் இருக்குமென்று சொல்லப்படுகிறது.

பூமியின் சுற்று வட்டப் பாதையில் தனக்கென தனி விண்வெளி ஆய்வு மையம் ஒன்றை உருவாக்கும் பணியில் சீனா ஈடுபட்டு வருகிறது. விண்வெளி மையத்துக்குத் தேவைப்படும் பொருள்களை ராக்கெட் மூலமாக அவ்வப்போது சீனா அனுப்பி வைக்கும். அப்படி கடந்த மாதம் 31-ம் தேதி லாங் மார்ச் 5B எனப்படும் ராக்கெட் மூலமாகப் பரிசோதனைக் கூடத்தின் ஒரு பகுதியை விண்வெளிக்கு அனுப்பியது சீனா. ராக்கெட் விண்ணில் ஏவப்பட்டு ஒரு வாரம் கடந்த நிலையில், லாங் மார்ச் 5B ராக்கெட்டின் மிகப்பெரிய ஒரு பகுதியானது இன்றோ அல்லது 5-ம் தேதியோ பூமியின் வளிமண்டலத்துக்குள் நுழையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

image

லாங் மார்ச் 5B மிக அதிகளவிலான எடையைச் சுமந்து செல்லும் என்பதால் சற்று பெரிதாகவே வடிவமைக்கப்பட்டிருக்கும். இப்போது பூமியில் விழும் ராக்கெட்டின் பகுதி சுமார் 25 டன் எடையும் 10 மாடிக் கட்டடத்தின் உயரமும் கொண்டதாகவும் இருக்கிறது. சீனாவின் அலட்சியத்தால் கடந்த 2 வருடங்களில் மட்டும் இதே போன்று 3 தடவைகள் ராக்கெட் பாகம் பூமியில் விழும் நிகழ்வு நடந்திருக்கிறது. கடந்த முறை ராக்கெட் வளிமண்டலத்தில் நுழையும் போது தீப்பிழம்பாய் எரிவதை ஐவரி கோஸ்ட் கிராமத்தினரால் பார்க்க முடிந்தது குறிப்பிடத்தக்கது.

image

ராக்கெட்டின் பாகங்கள் இந்தியப் பெருங்கடலிலும், இந்தோனேசியாவுக்கு அருகிலுள்ள பொரேனோ தீவுப்பகுதியின் அருகிலும் விழுந்தன. பொதுவாக மற்ற நாடுகள் ராக்கெட்டை ஏவும் பொழுது அதன் பூஸ்டர் பகுதிகள் பூமிக்குள் மீண்டும் நுழையும் போது கடலில் விழுமாறு கட்டுப்படுத்தப்படும். ஆனால் சீன ராக்கெட்டில் அந்த வசதி இல்லை. ஆகவே லாங் மார்ச் 5B ராக்கெட்டின் பாகங்கள் துல்லியமாக எந்தெந்தப் பகுதிகளில் விழும் என்பது யாருக்கும் தெரியாத விஷயம்.

image

அது தற்போது சுற்றி வரும் இடத்தை வைத்துப் பார்க்கையில் மத்திய, தெற்கு அமெரிக்கா, ஆப்ரிக்கா, தென்கிழக்கு ஆசியா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய பகுதிகளில் எரிந்த பாகங்கள் விழக்கூடும் என எதிர்பார்க்கப்படுவதாக அமெரிக்காவைச் சேர்ந்த ஏரோஸ்பேஸ் கார்ப்பரேஷன் என்ற ஆய்வு அமைப்பு தெரிவித்திருக்கிறது. ராக்கெட் வளிமண்டலத்துக்குள் நுழையும் போது எரியத் தொடங்கும் என்றாலும் 20 முதல் 40 சதவிகித பாகங்கள் நிலத்தில் விழக்கூடும். அதன்படி பார்த்தால் லாங் மார்ச் 5B-யில் இருந்து 5 முதல் 9 டன் பாகங்கள் நிலத்தில் விழும் என எதிர்பார்க்கலாம் என்றும் ஏரோஸ்பேஸ் கார்ப்பரேஷன் அமைப்பு தகவல் தெரிவித்திருக்கிறது.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்