Published : 10,Oct 2022 10:06 AM

உடல் நலக்குறைவால் காலமானார் உ.பி. முன்னாள் முதல்வர் முலாயம் சிங் யாதவ்

Former-UP-CM---Samajwadi-Party-Leader-Mulayam-Singh-Yadav-dies-at-the-age-of-82-years

உத்தர பிரதேச முன்னாள் முதல்வர் முலாயம் சிங் யாதவ், உடல்நலக்குறைவால் இன்று காலமானார். அவருக்கு வயது 82.

1989-91, 1993-95, 2005-07 ஆகிய ஆண்டுகளில் உத்தரப்பிரதேச முதலமைச்சராக இருந்தவர் முலாயம் சிங் யாதவ். 1992இல் முலாயம் சிங் யாதவ் தொடங்கிய சமாஜ்வாதி கட்சி, இன்றுவரை உத்தரப்பிரதேச அரசியலில் பிரதான கட்சிகளில் ஒன்றாக உள்ளது. முலாயம் சிங் யாதவின் மகன் அகிலேஷ் யாதவும் உத்தரப்பிரதேச முதலமைச்சராக பதவி வகித்தவர் ஆவார். இந்நிலையில் உடல்நலக்குறைவு காரணமாக சிகிச்சை பெற்றுவந்த அவர், இன்று காலை காலமானார்.

image

உத்தரபிரதேச மாநில முன்னாள் முதல்வரும், சமாஜ்வாதி கட்சியின் நிறுவனருமான முலாயம் சிங் யாதவ், சமீபத்தில் உடல் நலக்குறைவு காரணமாக அரியானா மாநிலம் குருகிராமில் உள்ள மேதாந்தா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். தொடர்ந்து தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் உடல் நிலையில் எந்தவித முன்னேற்றமும் ஏற்படாமல் இருந்துள்ளது. தேவ கவுடா, ஐகே குஜ்ரால் அமைச்சரவைகளில் பாதுகாப்புத்துறை அமைச்சராக இருந்தவர் முலாயம் சிங் யாதவ்.

இதைத்தொடர்ந்து தற்போதைய மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜநாத்சிங், அரியானா மாநில முதல்வர் மனோகரால் கட்டார் ஆகியோர் நேற்று மருத்துவமனைக்கு நேரடியாக சென்று அவரது உடல்நிலை குறித்து அவரது மகனான அகிலேஷ் யாதவிடம் நலம் விசாரித்தனர். மேலும் அவருக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சைகள் குறித்து மருத்துவர்களிடம் விரிவாக கேட்டு இருந்தனர். ஏற்கனவே பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மூத்த அரசியல் தலைவர்கள் முலாயம் சிங் யாதவியின் உடல்நிலை குறித்து விசாரித்து வரும் நிலையில் அவரது உடல்நிலை குறித்து நேற்றைய தினம் சமாஜ்வாதி கட்சி சார்பில் அதிகாரப்பூர்வ அறிக்கை வெளியாகி இருந்தது.

image

அந்த அறிக்கையில் முலாயம் சிங் யாதவ் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளதாகவும், உயிர்காக்கும் மருந்துகள் மூலம் அவருக்கு ஐ.சி.யூ.வில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. குறிப்பாக சிறப்பு நிபுணர் மருத்துவர் குழுவால் அவரது உடல்நிலை கண்காணிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் மருத்துவமனைக்கு வழியே ஏராளமான சமாஜ்வாதி கட்சியின் தொண்டர்கள் நிர்வாகிகள் ஒன்று கூடினர்.

இப்படியான சூழலில் தான் இன்று அவர் உயிரிழந்திருக்கிறார். அவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்