Published : 19,Sep 2022 07:13 PM
ஈரோடு: சுவரொட்டியில் இருந்த பெரியார் படத்தின் மீது காவி சாயம் ஊற்றிய மர்ம நபர்கள்

பெரியார் பட சுவரொட்டி மீது காவி சாயம் பூசிய மர்ம நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி திமுக சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் பகுதியில் பெரியார் பிறந்த நாளை முன்னிட்டு திராவிடர் விடுதலை கழகம் சார்பில் பல்வேறு இடங்களில் பெரியார் படத்துடன் கூடிய சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்தது. இந்த நிலையில் சத்தியமங்கலம் பேருந்து நிலைய வளாகத்தில் உள்ள ஆவின் பால் பூத் பக்கவாட்டு சுவற்றில் ஒட்டப்பட்டிருந்த சுவரொட்டியில் இருந்த பெரியார் படத்தின் மீது காவி சாயம் பூசப்பட்டிருந்ததை கண்டு திமுகவினர் அதிர்ச்சி அடைந்தனர்.
இதைத் தொடர்ந்து சத்தியமங்கலம் நகர செயலாளரும், நகராட்சி தலைவருமான ஜானகி ராமசாமி தலைமையில் பெரியார் சுவரொட்டி மீது காவி சாயம் பூசிய மர்ம நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி சத்தியமங்கலம் காவல் நிலையத்தில் திமுகவினர் புகார் அளித்தனர். இதையடுத்து புகாரின் பேரில் காவி சாயம் ஊற்றியவர்கள் யார் என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.