Published : 16,Sep 2022 09:11 PM

சொல்லவந்த கருத்து சரி.. கதையை கவனமாக செதுக்கியிருந்தால் ‘சினம்’ சீற்றமாக இருந்திருக்கும்!

Arun-Vijay-s-sinam-movie-review

ஒரு காவல் அதிகாரி தன் குடும்பத்தில் ஒருவரை இழக்க, அதற்கு காரணமானவர்களைத் தேடும் விசாரணை படலமே படத்தின் ஒன்லைன்.

சப் இன்ஸ்பெக்டர் பாரி வெங்கட் (அருண் விஜய்). தன் மனைவி மகள், நேர்மையான போலீஸ் வேலை என வாழ்கிறார். ஒரு குற்றவாளியைப் பிடிக்க அருண் விஜய் பிஸியாக இருக்கும் நேரத்தில் நடக்கும் ஒரு கொலை அவருக்கு பர்சனலான இழப்பை ஏற்படுத்துகிறது. அந்த கொலையை விசாரிக்கும் பொறுப்பு அவருக்கே வருகிறது. தன் மீதுள்ள பகை காரணமாக இது நடந்திருக்குமா? அல்லது வேறு காரணமா என விசாரிக்க துவங்குகிறார் அருண். எதனால் இந்தக் கொலை நடந்தது? எப்படி நடந்தது? யாரால் நடத்தப்பட்டது? என எப்படிக் கண்டுபிடித்தார் என்பதே மீதிக்கதை.

இந்தப் படத்தின் இறுதியில் சொல்லப்பட்டிருக்கும் கருத்து முக்கியமானது, அதைப் படத்தில் பேசியிருப்பது பாராட்டுக்குரியது. ஒரு கொலை வழக்கை சுற்றிய படம் என்பதால் அதை ஒட்டி நடக்கும் விசாரணைகள், கிடைக்கும் க்ளூ என பரபரப்பான கதையை சொல்ல முயன்றிருக்கிறார் இயக்குநர் குமரவேலன்.

image

நடிகர் அருண் விஜய், மிடுக்கான போலீஸ் அதிகாரியாக விறைப்புடன் படம் முழுக்க வருகிறார். தனக்கு ஏற்பட்ட இழப்புக்காக வருந்துவது, எந்த க்ளூவும் கிடைக்காமல் குழம்புவது என டீசண்டான பர்ஃபாமென்ஸை வழங்கியிருக்கிறார். அருண் விஜயுடன் வரும் உதவியாளர் கதாபாத்திரத்தில் காளி வெங்கட் நிறைவாக நடித்திருக்கிறார். நாயகியாக வரும் பாலக் லால்வானி நடிப்பில் நிறையவே தடுமாறுகிறார். மற்ற பாத்திரங்களில் வருபவர்களும் மிக செயற்கையான நடிப்பையே கொடுத்திருக்கிறார்கள்.

கோபிநாத்தின் ஒளிப்பதிவு படத்துக்கு பலம் சேர்க்கிறது. ஷபீர் இசையில் நெஞ்சமெல்லாம் பாடல் மட்டும் ரசிக்கும்படி இருக்கிறது. மற்ற பாடல்கள் ஏற்கனவே திசை தெரியாமல் நகரும் படத்தில் வேகத்தடையாக வருகிறது. பின்னணி இசையும் படத்திற்கு சுவாரஸ்யம் சேர்க்கவில்லை.

image

பொதுவாக போலீஸ் குற்றவாளியைத் தேடும் படங்களில் இரண்டு வகை இருக்கும். நாயகன் யாரோ ஒருவர் இறந்து போன வழக்கை விசாரிப்பது, மற்றொன்று தன்னுடைய குடும்பத்தினரை இழந்துவிட்டு அது பற்றி விசாரிப்பது மற்றொன்று. இந்தப் படத்தில் இரண்டாவது வகையை கையில் எடுத்திருக்கிறார்கள். இந்த மாதிரி களத்தில் கதை சொல்வது சற்று சிரமமான ஒன்று. எந்த இடத்திலும் பார்வையாளர்களுக்கு சுவாரஸ்யம் குறையலாம். அப்படி படம் நிறைய இடங்களில் படம் தடுமாறுகிறது. சரவணன் எழுதியிருக்கும் கதை வெறுமனே ஒரு சம்பவமாக இருக்கிறதே தவிர, சுவாரஸ்யமான திரைவடிவமாக மாறாமல் தேங்கிவிடுகிறது.

அதில் முக்கிய பிரச்சனையே, படத்தின் மையமாக என்ன சொல்லப்படுகிறது என்பதே க்ளைமாக்ஸை நெருங்கும் வரை நமக்குப் புரியவே இல்லை. குற்றவாளிகளைத் தேடுவது, அவர்களைப் பற்றி விசாரிப்பதிலும் பெரிதாக சுவாரஸ்யம் எதுவும் இல்லை. தொடர்ந்து சேரியில் வசிக்கும் மக்களை, இளைஞர்களை குற்றப் பின்னணி உள்ளவர்களாக காட்டுவது இந்தப் படத்திலும் தொடர்வது சற்று உறுத்தலாக இருக்கிறது.

image

கொலை விசாரணையில் முதல் படியிலேயே சிசிடிவி வைத்து ஆராயாமல், வொய்ட் போர்டு முன் நின்று கொண்டு, இந்தக் கொலை எதற்காக நடந்திருக்கும் என உதவியாளரைக் கேட்டுக் கொண்டிருக்கிறார் அருண் விஜய். குற்றவாளி யார் என தெளிவாக தெரிந்த பின்னும் வளவளவென கதையை நகர்த்திக் கொண்டிருக்கிறார்கள். இதெல்லாம் கொஞ்சம் அதிகமாகவே பொறுமையை சோதிக்கிறது.

பாலியல் குற்றங்களை தடுக்க என்ன செய்ய வேண்டும் என்று படத்தின் இறுதியில் சொல்லும் கருத்து மிக முக்கியமாக சொல்லப்பட வேண்டியது. ஆனாலும், அதை ஒரு விழிப்புணர்வு படம் போல் வாய்ஸ் ஓவரில் சொல்லி முடிப்பது எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை.

சொல்ல வந்த கருத்தைப் போல படத்தையும் கவனமாக உருவாக்கியிருந்தால், இந்த சினம் பார்வையாளர்களுக்கும் கடத்தப்பட்டிருக்கும்.

- பா. ஜான்சன்

சற்று முன்எடிட்டர் சாய்ஸ்