Published : 12,Sep 2022 11:09 AM

ஜெர்மனிக்கு நெருக்கடி கொடுக்கும் ரஷ்யா... இந்தியாவுக்கு காத்திருக்கும் ஆபத்துகள் என்னென்ன?

Germany-Prepared-for-Russia-Gas-Halt-and-to-face-winter

குளிர்காலம் நெருங்கி வரும் சூழலில் ஐரோப்பா தற்போது கடுமையான எரிசக்தி நெருக்கடியைச் சந்திக்கத் தயாராகி வருகிறது. குறிப்பாக ஐரோப்பாவின் மிகப்பெரிய பொருளாதார நாடாக விளங்கும் ஜெர்மனியில் தான்  எரிவாயு நெருக்கடி அதிகம் எதிரொலிக்க இருக்கிறது. தற்போது ரஷ்யாவிலிருந்து செல்லும் நார்ட்ஸ்ட்ரோம் ஒன் பைப்லைன் மூலம் ஜெர்மனிக்கான அனைத்து எரிவாயு விநியோகத்தையும், ரஷ்யா மூடியுள்ளது. இதன் பின்னணியையும், விளைவுகள் பற்றியும் பார்ப்போம்.

image

 நீடிக்கும் உக்ரைன் போர்

 ரஷ்யா – உக்ரைன் போர் காரணமாகச் சர்வதேச அளவில் எரிபொருள் ஏற்றுமதி வர்த்தகம் ஏற்கனவே பாதிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது மேலும் ரஷ்யாவிடமிருந்து இறக்குமதி செய்யப்படும் எரிபொருள் மட்டுமில்லாது உணவுப் பொருட்கள் உள்ளிட்ட பொருட்களையும் சார்ந்து இருக்கும் ஐரோப்பிய நாடுகளுக்கு, ரஷ்யாவின் இந்த முடிவால் பெரிய சிக்கலில் தவித்து வருகிறது.

நார்ட்ஸ்ட்ரோம் பைப்லைனை வழியாகத் தான் ரஷ்யாவிலிருந்து ஜெர்மனிக்கு இயற்கை எரிவாயு செல்கிறது. பின் ஜெர்மனியிலிருந்து மற்ற ஐரோப்பிய நாடுகளுக்கு இந்த எரிவாயு செல்லும். முதலில் பராமரிப்பு பணிக்காக எரிவாயு விநியோகங்கள் மூன்று  நாட்களுக்கு மூடப்படும் என்று நார்ட்ஸ்ட்ரோம் பைப்லைனை மூடிய ரஷ்யா, மூன்று நாட்களுக்கு பிறகும் தொழில்நுட்ப காரணங்களை கூறி பைப்லைனை திறக்கவில்லை. 

’ மேற்கத்தியப் பொருளாதாரத் தடைக்குப் பழிவாங்கும் வகையில் தான் எரிபொருள் விநியோகத்தை நிறுத்தியுள்ளதாக அனைவரால் விமர்சிக்கப்பட்டது. உடனே இதற்கு பதிளித்த ரஷ்யா, எங்களுக்கும் எரிவாயு தேவை அதிகமாக இருக்கிறது , சேமிப்பு குறைவாக உள்ளது” எனவே நார்ட்ஸ்ட்ரோம் பைப்லைனை திறப்பதில் சிமரம் இருக்கிறது எனக் கூறிவந்த நிலையில் தற்போது, ’தங்கள் மீது இருக்கும் பொருளாதாரத் தடையை நீக்கும் வரை எரிவாயு வழங்கமாட்டோம்’ என்று ரஷ்யா திட்டவட்டமாக அறிவித்துள்ளது.

image

பொருளாதார நெருக்கடியில் தவிக்கும் ரஷ்யா..

ரஷ்யா- உக்ரைன் போரின் விளைவாக, ரஷ்யாவின் மீது மேற்கத்திய நாடுகள் பொருளாதாரத் தடையை விதித்தது. இதன் காரணமாக, ரஷ்யா இறக்குமதி நெருக்கடியை பெருமளவில் எதிர்கொள்கிறது. மேலும், ரஷ்யாவிலிருந்து வெளிநாட்டு நிறுவனங்கள் வெளியேறியும் வருகிறன. ஆயிரத்துக்கு மேற்பட்ட நிறுவனங்கள் ரஷ்யாவிலிருந்து தங்களது செயல்பாடுகளைக் குறைத்துள்ளன. இதனால் ரஷ்யாவின் பொருளாதாரம் கேள்விக்குறியாகிள்ளது. இந்நிலையில் தான், ஐரோப்பிய நாடுகளை பணயம் வைத்து அமெரிக்காவை மிரட்டுகிறது ரஷ்யா.

இதற்கிடையில் பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மக்ரோன், ஜெர்மனிக்கு உதவ தாங்கள் தயாராக இருப்பதாகவும், தேவைப்பட்டால் மின்சாரம் அனுப்பவும் தயாராக இருப்பதாக அறிவித்துள்ளார். எனினும் பிரான்ஸ் அனுப்பும் மின்சார விநியோகம், மொத்த ஐரோப்பிய நாடுகளின் குளிர்கால தேவையைப் பூர்த்திசெய்ய போதாது என்ற கருத்தும் நிலவி வருகிறது.

மீண்டும் திறக்கப்படும் அணு உலை !

ரஷ்யா கொடுத்திருக்கும் இந்த நெருக்கடியால், ஜெர்மனியில் 10 ஆண்டுகளாக நடைமுறையிலிருந்து வந்த ஒரு முக்கியமான அரசாங்க கொள்கை முடிவுக்கு வந்திருக்கிறது.

2011ல் ஃபுகுஷிமா அணு உலை பேரழிவை நாம மறக்க முடியாது. அந்த பேரழிவுக்குப் பின் 2020-க்குள் ஜெர்மனியில் இருக்கும் 17 அணு உலைகள் மூடப்படும் என்று ஜெர்மனி அறிவித்தது. அதன்படி , 14 உலைகள் மூடிவிட்ட பின்னர் இப்போது 3 அணுஉலைகள் மட்டும் மூடாமல் இருந்துவந்தது. அவையும் இந்த ஆண்டு இறுதிக்குள் மூடப்படும் என்று முன்னர் அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால், இப்போது அவசரக்கால பயன்படிற்காக அந்த மூன்றில் இரண்டு உலைகள் செயல்படப் போகிறது என்று ஜெர்மனி அறிவித்திருக்கிறது. 

ஃபுகுஷிமா பேரழிவுக்குப் பிறகு அணு உலை இயக்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தவர்கள் கூட தற்போது அணு உலை இயங்கப்போவதை வரவேற்கிறார்கள் என்றால் ஐரோப்பாவின் எரிசக்தி பாதுகாப்பு நிலைமை எவ்வளவு மோசமாக மாறியிருக்கிறது என்பதை நாம் உணர முடியும்.

image

மிரட்டிப் பார்த்த ஜெர்மனி ..

ஜெர்மனி அணுசக்தி உலைகளை ஒழிக்க நினைக்கும் போதும் கூட பிரான்ஸ் எதிர்த் திசையில் தான்சென்றது. பிரான்ஸில் நிறைய அணுமின் நிலையங்கள் உள்ளன. மேலும் சில அணு மின் நிலையங்கள் கட்டவும் பிரான்ஸ் விரும்புகிறது. எனவே தேவைக்கு அதிகமாக இருக்கும் அணு சக்தியை, ஜெர்மனிக்கு அனுப்ப பிரான்ஸ் முன்வந்துள்ளது.

ரஷ்யா கொடுத்த இந்த நெருக்கடியைத் தொடர்ந்து, ரஷ்யாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் எண்ணெய் பொருட்களுக்குக் குறைந்தபட்ச விலை நிர்ணயிக்கப்படும் என்று ஜெர்மனிய அரசு ரஷ்யாவை எச்சரித்தது.

உடனே பதிலளித்த ரஷ்யாவோ, ’’அப்படி நீங்கள் செய்தால், அந்த குறைந்தபட்ச விலையில் கூட எங்களுக்கு நஷ்டம் வராது. ஆனால் உங்களுக்கு வரும் எண்ணெய் விநியோகத்தையும் சேர்த்து நிறுத்திவிடுவோம். மேலும் குளிர்காலத்தில் உங்களுக்கு தான் கூடுதல் சிரமமாக இருக்கும்.” என்று ரஷ்யா அதிபர் விளாதிமிர் புடின் மிரட்டியுள்ளார். குளிர்காலத்தில் ஏற்பட்டுள்ள இந்த மின் தடைகள் மற்றும் எரிசக்தி பற்றாக்குறை ஐரோப்பிய நாடுகளுக்குப் பெரிய பாடத்தை கற்றுக் கொடுத்திருகிறது. 

image

 இந்தியாவிற்கு என்ன பாதிப்பு?

ரஷ்யா- உக்ரைன் போர் காரணமாக பெட்ரோல் டீசல் மற்றும் சில உணவுப் பொருட்களின் விலை உயர்ந்த சூழலில் எரிவாயுவின் விலை, ரூபாய் 1120 வரை தற்போது விற்பனையாகுகிறது. இந்நிலையில் ரஷ்யாவின் இந்த எரிவாயு  நெருக்கடி ஐரோப்பிய நாடுகள் மட்டுமின்றி, இந்தியாவிலும் எரிவாயு விலை அதிகரிக்கும் சூழல் உருவாகி உள்ளது.  

எழுத்து - கே. அபிநயா 

சற்று முன்எடிட்டர் சாய்ஸ்