Published : 08,Sep 2022 06:25 PM
'ஆபாச மெசேஜ் அனுப்புங்க' -மனைவியின் வாட்ஸ்அப் எண்ணை நண்பர்களுக்கு பகிர்ந்த கணவர்!

தனது வாட்ஸ்அப் எண்ணுக்கு முன்பின் தெரியாத எண்களில் இருந்து ஆபாசமான மெசேஜ்கள் வருவதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார் அந்த பெண்.
உத்தரப்பிரதேசம் மாநிலம் கான்பூரை சேர்ந்த ஆகாஷ் என்பவர் 2 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு பெண்ணை திருமணம் செய்துள்ளார். இந்நிலையில் ஆகாஷ் வேலையில்லாமல் ஊர் சுற்றி கொண்டிருந்ததால் கணவன் மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால், ஆத்திரமடைந்த ஆகாஷ் தனது மனைவியை அடித்து, உதைத்து வீட்டைவிட்டு விரட்டியுள்ளார். உறவினர்கள் சமரசம் செய்தும் பலன் இல்லை.
இதையடுத்து கணவர் ஆகாஷ் மீது அவரது மனைவி காவல் நிலையத்தில் வரதட்சணை புகார் அளித்தார். அதன்பேரில் ஆகாஷ் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது வரதட்சணை கொடுமை செய்ததாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது. புகாரை வாபஸ் பெறுமாறு மனைவியிடம் ஆகாஷ் கூறியிருக்கிறார். ஆனால் புகாரை வாபஸ் பெற மாட்டேன் என்று அவரது மனைவி உறுதியாக சொல்லிவிட்டார். இதனால் அவமானமும் கோபமும் அடைந்த ஆகாஷ் தனது மனைவியை பழிவாங்க முடிவெடுத்தார்.
அதன்படி மனைவியின் செல்போன் எண்ணை ஆகாஷ் தனது 30 நண்பர்களுக்கு அனுப்பி அந்த எண்ணுக்கு ஆபாச மெசேஜ்கள் அனுப்புமாறு கூறியிருக்கிறார். அதனை ஏற்று சிலர் ஆகாஷ் மனைவியின் வாட்ஸ்அப் எண்ணுக்கு ஆபாசமாக பேசியும், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் அனுப்பியும் வந்துள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த அந்த பெண், தனது வாட்ஸ்அப் எண்ணுக்கு முன்பின் தெரியாத எண்களில் இருந்து ஆபாசமான மெசேஜ்கள் வருவதாக காவல் நிலையத்தில் தெரியப்படுத்தியுள்ளார். ஆனால் அதனை போலீசார் கண்டுகொள்ளவில்லை எனக் கூறப்படுகிறது.
இதையடுத்து அந்த பெண் மாநில மகளிர் ஆணையத்தை அணுகியதைத் தொடர்ந்து, அவரது புகார் குறித்து விசாரணை நடத்துமாறு மகளிர் காவல் உதவி ஆணையருக்கு ஆணையம் உத்தரவிட்டது.
இதையும் படிக்க: நீலகிரி: பெண் காவலர் அளித்த பாலியல் புகார் - சிறப்பு உதவி ஆய்வாளர் கைது