Published : 22,Aug 2022 09:39 PM
ஜிம்பாப்வே வீரரை மன்ஹட்டன் அவுட் செய்து ரிவியூ கேட்க மறுத்த தீபக் சாஹர்! வைரல் வீடியோ!

இந்தியா- ஜிம்பாப்வே இடையிலான 3வது ஒருநாள் போட்டியில் தீபக் சஹார் நான் - ஸ்டிரைக்கர் முடிவில் இருந்த இன்னசெண்ட் கையாவை மன்ஹட்டன் முறையில் அவுட் செய்துவிட்டு நடுவரிடம் ரிவியூ கேட்காமல் சென்றதால், அந்த பந்து “டெத் பாலாக” அறிவிக்கப்பட்ட விநோத சம்பவம் அரங்கேறியுள்ளது.
இந்தியா மற்றும் ஜிம்பாப்வே இடையிலான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி இன்று ஹராரேயில் தொடங்கியது. முதல் இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்ற இந்திய அணி ஏற்கனவே தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது. இந்நிலையில், மூன்றாவது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. சுப்மான் கில்லின் அபார சதத்தால் 8 விக்கெட் இழப்புக்கு 289 ரன்கள் குவித்தது.
இதையடுத்து 290 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்கை நோக்கி களமிறங்கினர் ஜிம்பாப்வேயின் ஓப்பனர்கள் தகுட்ஸ்வானாஷே கைடானோ மற்றும் இன்னசெண்ட் கையா. இன்னிங்ஸின் முதல் பந்தை வீச தீபக் சாஹர் ஓடிவர, பந்து வீசும் முன்னரே இன்னசெண்ட் கையா கிரீஸை விட்டு பல அடிகள் முன்னே சென்றிருப்பதை கவனித்தார். இதனால் பந்தை வீசமால் மன்ஹட்டன் முறையில் அவுட் செய்துவிட்டு கிரிஸை விட்டு தாண்டிச் சென்றிருப்பதை கையாவிற்கு சுட்டிக்காட்டினார்.
Deepak Chahar didn't Appeal on Mankad pic.twitter.com/4ihfnljbMl
— Keshav Bhardwaj (@keshxv1999) August 22, 2022
ஆனால் நடுவரிடம் மன்ஹட்டன் ரிவியூ அவர் கேட்காத நிலையில், களத்தில் இருந்த கேப்டன் கே.எல்.ராகுலும் நடுவரிடம் ரிவியூ கேட்காமல் மௌனம் காத்தார். இதையடுத்து இந்திய தரப்பிலிருந்து மேல்முறையீடு எதுவும் செய்யப்படாததால், நடுவர்கள் அந்த பந்தை “டெத் பாலாக” அறிவித்தனர். இன்னசென்ட் கையாவை தொடர்ந்து பேட்டிங் செய்ய அனுமதித்தனர்.
பெரிய மனதுடன் தீபக் சாஹர் நடந்து கொண்டதாக இணையத்தில் பலரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர். “Spirit of Cricket" என்று குறிப்பிட்டு தீபக் சாஹருக்கு பாராட்டு தெரிவித்து வருகிறார்கள். இருப்பினும் தீபக் சாஹர் வழங்கிய இந்த பொன்னான வாய்ப்பை கையா பயன்படுத்த தவறிவிட்டார் என்றே சொல்லலாம். அதே தீபக் சாஹர் வீசிய பந்தில் வெறும் 9 ரன்கள் எடுத்த நிலையில் எல்.பி.டபுள்யூ ஆகி களத்தை விட்டு வெளியேறினார் இன்னசெண்ட் கையா.
இந்தப் போட்டியில் ஜிம்பாப்வே அணி கடைசி வரை வெற்றிக்காக போராடியது. கடைசி ஓவர் வரை சென்ற ஆட்டத்தில் 49.3வது ஓவரில் 276 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. கடந்த போட்டியில் சிறப்பாக பந்துவீச்சு குறைவான ரன்களை விட்டுக் கொடுத்த தீபக் சாஹர் இந்தப் போட்டியில் இரண்டு விக்கெட் எடுத்தாலும் 75 ரன்கள் வாரி வழங்கினார்.
இதையும் படிக்கலாமே: கடைசி 6 போட்டிகளில் மூன்றாவது சதம்.. தோற்றாலும் இந்திய அணிக்கு பயம் காட்டிய ரஸா!