Published : 18,Aug 2022 02:19 PM

`துரோக சிந்தனை உடைய கும்பல் நல்லதை எப்போதும் ஏற்காது' - இபிஎஸ் மீது தினகரன் விமர்சனம்

TTV-Dhinakaran-supports-OPS-for-his-speech

`அதிமுகவில் நடந்த பொதுக்குழு செல்லாது’ என நேற்றைய தினம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வெளியான தீர்ப்பு குறித்து, இன்றைய தினம் ஓ பன்னீர்செல்வமும், எடப்பாடி பழனிச்சாமி தனித்தனியாக செய்தியாளர்களை சந்தித்தனர். முதலில் ஓ.பன்னீர்செல்வம் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் எடப்பாடி பழனிச்சாமியுடன் இணைந்து செயல்பட உள்ளதாக தெரிவித்தார். எடப்பாடி பழனிச்சாமி மட்டுமன்றி சசிகலா, டிடிவி தினகரன் ஆகியோருடனும் தான் இணைந்து செயல்பட தயாராக இருப்பதாக ஓபிஎஸ் தெரிவித்திருந்தார். இதற்கு டிடிவி தினகரன் வரவேற்பு தெரிவித்துள்ளார்.

ஓபிஎஸ் பேசுகையில் “அதிமுகவினர் அனைவரும் ஒற்றுமையாக செயல்பட வேண்டும் என்பதே எங்கள் விருப்பம். நடந்தவை நடந்தவையாக இருக்கட்டும். நடப்பவை நல்லவையாக இருக்க வேண்டும். இப்போதும், அதிமுக ஒன்றுபட வேண்டும் என்பதே தொண்டர்களின் விருப்பமாக இருப்பதாக தகவல் வந்து கொண்டிருக்கிறது. அதை கருத்தில் கொண்டு, இரட்டை தலைமைக்கு எங்கள் தரப்பிலிருந்து அழைப்பு விடுக்கிறோம். அதிமுகவில் மீண்டும் ஒற்றுமையுடன் இணைந்து செயல்பட வருமாறு எடப்பாடி பழனிசாமிக்கு அழைப்பு விடுப்பதில் தயக்கமேதும் இல்லை. ஏனெனில் எடப்பாடி பழனிசாமியும் நானும் இணைந்து சிறப்பான பணிகள் பலவற்றை செய்தோம்.

image

அதிமுகவில் `இரட்டைத் தலைமை’ என்பதெல்லாம் எனக்கு பிரச்னையில்லை. நாங்கள் கூட்டுத் தலைமையாக செயல்படுவோம். ஆக அன்புச் சகோதரர் எடப்பாடி பழனிசாமியுடன் இணைந்து செயல்பட தயாராகவே உள்ளோம். மனக்கசப்புகளை எல்லாம் மறந்து அதிமுகவின் நலனுக்காக அனைவரும் ஒன்றுபட வேண்டும் என்பதே எங்கள் விருப்பமும் நோக்கமும். எடப்பாடி பழனிச்சாமி மட்டுமல்ல. யாராக இருந்தாலும் சேர்த்துக்கொள்வோம். யாராக என்ற வார்த்தையில் சின்னம்மாவும் இருக்குறாங்க, டிடிவி தினகரனும் இருக்குறாங்க” என்று கூறியிருந்தார்.

ஓ.பன்னீர்செல்வத்தின் இந்தக் கருத்துக்கு டிடிவி தினகரன் தற்போது எதிர்வினையாற்றியுள்ளார். அவர் பேசுகையில், “தீயசக்தியான தி.மு.க.வை வீழ்த்துவதற்கு அம்மாவின் தொண்டர்கள் அனைவரும் இணக்கத்துடன் செயல்படவேண்டும் என்ற ஓ.பன்னீர்செல்வம் அவர்களின் கருத்தை சுயநலமற்ற, ஜனநாயகத்தில் நம்பிக்கையுள்ள எவர் ஒருவரும் வரவேற்கவே செய்வார்கள்.

image

அதேசமயம், சுயநலத்தின் உச்சமாக, பதவி வெறிபிடித்தாடும், துரோக சிந்தனை உடைய ஒரு கும்பல் நல்லதை எப்போதும் ஏற்காது என்பதும் அனைவரும் அறிந்ததே” என்று ட்வீட் செய்துள்ளார்.

தனது இந்த ட்வீட்டின் மூலம் ஓபிஎஸ்-க்கு ஆதரவாகவும் இபிஎஸ்-க்கு எதிராகவும் உள்ள தனது நிலைப்பாட்டை டிடிவி தினகரன் வெளிப்படுத்தியிருப்பதாக விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்