Published : 01,Jul 2022 05:13 PM

இதே மாவ இன்னும் எவ்ளோ நாள் அரைப்பீங்க! அப்டேட் ஆகலையா சார்? - யானை விமர்சனம்

yaanai-movie-2022---Movie-Review

அதிரடி இயக்குநர் ஹரியின் இயக்கத்தில் அருண் விஜய், ராதிகா, பிரியா பவானி சங்கர், சமுத்திரக்கனி, யோகி பாபு ஆகியோர் நடித்திருக்கும் திரைப்படம் யானை.

தென் தமிழக கடலோரத்தில் வசிக்கும் பெரிய குடும்பம் அருண் விஜயுடையது. அண்ணன்கள், அண்ணிகள், அண்ணன் மகள் என கொஞ்சம் பெரிய, அதே சமயம் அன்பான குடும்பம். இருந்தாலும் அருணும் அவரது சகோதரர்களும் ஒரு வயிற்றுப் பிள்ளை இல்லை என்பதால் பாரபட்சமாக நடத்தப்படுகிறார் அருண். அந்தக் குடும்பத்துக்கு ஒரு பிரச்னை வரும்போது அருண் விஜய் என்ன செய்தார் என்பதே ஹரியின் இந்தப் படத்தின் கதையும்.

image

வழக்கமான அரிவாள் வெட்டு குத்து., இறால் பண்ணை, செல்வாக்கான பெரிய குடும்பம் அவர்களின் பகையாளி, பகையைத் தீர்க்கும் ஹீரோ என ஹரி இதுவரை அரைத்த அதே மசாலாவை தனது மச்சானை வைத்து மீண்டும் ஒரு முறை அரைத்திருக்கிறார். தமிழ் சினிமாவின் கதைக்களங்களும் கதை சொல்லும் பாணியும் அதிவேகத்தில் புதுமை பெற்று எங்கோ சென்று கொண்டிருக்கும் போது ஹரி இன்னும் ரெண்டு பாட்டு, நாலு பைட்டு, மூன்று சுமாரான நகைச்சுவைக் காட்சிகள் என வெந்த தோசையை மீண்டும் மீண்டும் திருப்பிப் போடுவது சோர்வு.

ஹரி படங்களில் பெண்களைப் பாதுகாக்கும் தலையாய கடமை ஆண்களுக்கு இருக்கும். பெண்களின் தலையில் தான் குடும்பத்தின் கவுரவமே இருக்கும். அதுதான் இந்த சினிமாவிலும் உள்ளது. தன் வீட்டுப் பெண் வேற்று மத இளைஞனை காதலிக்கிறாள் என்பதே பெரிய அவமானம் எனக் கருதும் ஒரு பிற்போக்கு கூட்டம் தான் ஹரியின் ஜிகினா கதாபாத்திரங்களாகத் தொடர்ந்து கட்டமைக்கப்படுகின்றன. பெண்கள் தங்களைத் தாங்களே பாதுகாத்துக் கொள்ள முடியும். ஹரியின் முதல் திரைப்படம் வெளியாகும் முன்பே பெண்கள் படித்து பல முன்னேற்றங்களை அடைந்து விட்டனர். ஆனால் இயக்குநரோ மீண்டும் மீண்டும் காதலித்த ஒரு பெண் கதாபாத்திரத்தை “ஐயோ குடும்ப மானத்த வாங்கிட்டியே” என காட்டிக் கொண்டிருக்கிறார்.

image

படம் முழுக்க ராமநாதபுரம், தனுஷ்கோடி பகுதிகள் காட்டப்படுகின்றன. கதையும் அந்நிலத்திலேயே நடப்பதாக உள்ளது. ஆனால் கதை மாந்தர்கள் அனைவரும் ஏம்லே, என்னலே, பேசுதிய, ஏசுதியனு தூத்துக்குடி, நாகர்கோயில் வட்டார வழக்கிலேயே பேசுகிறார்கள். ஹரியின் முந்தைய படங்களிலாவது சில அதிரடி ஸ்டண்ட் காட்சிகளை டிசைன் செய்திருப்பார். யானையில் அதுவும் ரொம்பவே மிஸ்ஸிங். சண்டைக் காட்சிகள் சுமார். ஒளிப்பதிவு, இசை உள்ளிட்ட விஷயங்கள் நன்றாக அமைந்திருக்கின்றன. ஜிவி பிரகாஷின் இசையில் பாடல்கள் பின்னனி இசை ஓகே. யோகி பாபு ஆங்காங்கே திரையை கலகலப்பாக்குகிறார்.

image

படத்தில் பலரும் ஸ்மார்ட் போன் வைத்திருக்கிறார்கள் என்பது மட்டுமே இக்கதை சமகாலத்தில் நடக்கிறது என நம்மை நம்பவைக்கிறது. மற்ற படி, கருத்தியல் ரீதியாகவும், சினிமா மொழி மற்றும் தற்கால ட்ரண்ட் உள்ளிட்ட விசயங்களிலும் யானை எங்குமே ஸ்கோர் செய்யவில்லை. அனைத்தையும் விட இந்த சினிமாவிற்கு யானை என ஏன் பெயர்வைத்தார்களோ...? சி சென்டர் ஆடியன்ஸ் தான் ஹரியின் டார்கெட் என்றாலும் இன்றைக்கு சென்டர் வித்யாசம் இல்லாமல் அனைவருமே தரமான சினிமாக்களை விரும்புகின்றனர். ஹரி தன்னை அப்டேட் செய்து கொள்ளாவிட்டால் கஷ்டம் தாம்லே.

சற்று முன்எடிட்டர் சாய்ஸ்