Published : 12,Sep 2017 10:22 AM
அதிமுக எம்பி வீட்டின் அருகே சந்தேகத்தைக் கிளப்பும் கண்டெய்னர்

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே கேத்தியில் அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் வீட்டின் அருகே உள்ள தோட்டத்தில் முகவரி எழுதப்படாத கண்டெய்னர் வைக்கப்பட்டிருப்பது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
மாநிலங்களவை உறுப்பினர் கே.ஆர்.அர்ஜுனன் வீட்டின் அருகே ஒருவரது தோட்டத்தில் முள்வேலிக்குள் கண்டெய்னர் மறைத்து வைக்கப்பட்டுள்ளது. மேலும், கண்டெய்னரைச் சுற்றியுள்ள பகுதியில் உள்ள மரங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டும், 5 பேர் வரை மறைமுகக் காவலில் ஈடுபட்டு வருவதாகவும் அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். கண்டெய்னரில் இருந்த பெயர் அழிக்கப்பட்டும், வேறு வண்ணம் பூசப்பட்டும் இருப்பது கூடுதல் சந்தேகத்தை எழுப்பியுள்ளதாகத் சுற்றுவட்டார மக்கள் தெரிவித்துள்ளனர். கண்டெய்னரில் கட்டுமானப் பொருட்கள் இருப்பதாக சிலர் கூறும் நிலையில், அதற்கு இவ்வளவு பாதுகாப்பு எதற்காக என பலரும் கேள்வி எழுப்புகின்றனர்.
கடந்த 10 நாட்களுக்கு முன்னர், அதிமுக அம்மா அணி துணைப் பொதுச்செயலாளர் தினகரன், கே.ஆர். அர்ஜுனனை மாவட்ட செயலாளர் பொறுப்பிலிருந்து நீக்கியது குறிப்பிடத்தக்கது.