Published : 12,May 2022 04:19 PM

மதுரை: ஆவினில் சேதமடைந்த பாக்கெட்டுகள்.. கசியும் பாலை நாய்கள் குடித்துச்செல்லும் அவலம்!

Complaint-raised-against-Madurai-Aavin--which-distributes-damaged-milk-packets

மதுரை ஆவின் நிறுவனத்தில் சேதமடைந்த பால் பாக்கெட்டுகளை முகவர்களுக்கு விநியோகம் செய்வதால் நாய்கள் குடித்து செல்லும் அவலம் ஏற்பட்டுள்ளது என தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது. இதுகுறித்து விசாரிக்க கூறியுள்ளதாக ஆவின் பொது மேலாளர் விளக்கமளித்துள்ளார்.

மதுரை மாவட்டத்தில் உள்ள 47 ஆவின் பாலகங்கள் மற்றும் 390 டெப்போக்கள் மூலமாக மாதந்தோறும் 1.94 லட்சம் லிட்டர் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் மதுரை ஆவினில் இருந்து கடந்த ஆறு மாதங்களுக்கும் மேலாக முகவர்களுக்கு பால் பாக்கெட்டுகள் அதிகளவில் சேதமடைந்த (லீக்கேஜ்) நிலையில் விநியோகிக்கப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துவந்தது.

image

இதன் காரணமாக பால் பாக்கெட்டுகள் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் ட்ரே(Tray) ஒன்றில் சாதாரணமாக 1லிட்டர் வரையிலான பாலை முகவர்கள் வீணாக கொட்டுவதால் அதனை நாய்கள் குடித்துவிட்டு செல்லும் நிலை உள்ளதாகவும், இதனால் பால் முகவர்கள் கடுமையான பொருளாதார இழப்பை சந்திக்க நேரிடுகிறது எனவும் ஆவின் நிர்வாகத்திடம் பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனவும் தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்க தலைவர் பொன்னுச்சாமி தனது ட்விட்டர் பக்கத்தில் குற்றம் சாட்டியுள்ளார்.

image

இது குறித்து மதுரை ஆவின் பொதுமேலாளர் சாந்தியிடம் விளக்கம் கேட்டபோது, இது குறித்து விசாரிக்க கூறியுள்ளதாகவும், இந்த பால்பாக்கெட்டுக்கள் எந்த பகுதிக்கு அனுப்பப்பட்டது என்பது குறித்து கேட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

image

ஏற்கெனவே மதுரை ஆவினில் ஒப்பந்ததாரர்கள் பால் பாக்கெட் திருட்டு மற்றும் ஆவினுக்கு இயந்திரங்கள் வாங்கியதில் பலகோடி ரூபாய் முறைகேடு என அடுக்கடுக்கான குற்றச்சாட்டுக்கள் எழுந்துவரும் நிலையில் சேதமடைந்த பால் பாக்கெட்டுக்களை முகவர்களுக்கு விநியோகம் செய்வதாக எழுந்துள்ள புகார் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்