[X] Close

’ஜெர்மனி, டென்மார்க், பிரான்ஸ்’-பிரதமர் மோடியின் ஐரோப்பிய சுற்றுப்பயணம் முக்கியமானது- ஏன்?

இந்தியா

Modi-calls-on-European-countries-to-increase-investment-in-India

ஐரோப்பிய நாடுகள் இந்தியாவில் கூடுதலாக முதலீடு செய்யவேண்டும் என்றும், நவீன தொழில்நுட்பங்களை இந்தியாவுடன் பகிர்ந்துகொள்ளவேண்டும் எனவும் வலியுறுத்தி தனது மூன்று நாள் ஐரோப்பா சுற்றுப்பயணத்தை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கியுள்ளார்.    

இந்திய பொருட்கள் மற்றும் சேவைகளின் இறக்குமதியை ஐரோப்பிய யூனியன் அதிகரிக்க வேண்டும் எனவும், வர்த்தக இடையூறுகளை நீக்கவேண்டும் எனவும் அவர் ஜெர்மனி, டென்மார்க் மற்றும் பிரான்ஸ் ஆகிய நாட்டு தலைவர்களிடம் கோரிக்கை வைக்கவுள்ளார். இந்திய-ஐரோப்பிய யூனியன் வர்த்தக ஒப்பந்தத்தை விரைவாக இறுதி செய்வது மற்றும் பாதுகாப்புத்துறையில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவது ஆகிய அம்சங்களும் பிரதமரின் ஐரோப்பிய சுற்றுப்பயணத்தில் முக்கிய இடம் பெறுகின்றன.

image

மேலும், உக்ரைன்-ரஷ்யா போர் விவகாரத்தில் இந்தியாவின் மீது எந்த நிலைப்பாட்டையும் திணிக்க கூடாது எனவும் பிரதமர் மோடி தனது 2022ஆம் வருடத்தின் முதல் அந்நிய நாட்டு பயணத்தில் தெளிவுபடுத்த உள்ளார். இந்தியா போர்நிறுத்ததை விரும்புகிறது எனவும், உக்ரைன் நாட்டுக்கு மனிதாபிமான அடிப்படையில் உதவி அளித்து வருகிறது என்பதும் ஏற்கனவே வலியுறுத்தப்பட்டுள்ளது.

அதே சமயத்தில், இந்தியா தனது நலன்கள் மீது கவனம் செலுத்தாமல் ரஷ்யாவை எதிர்க்கவேண்டும் என வலியுறுத்த கூடாது என்பதை பிரதமர் மோடி தனது ஆலோசனைகளில் வலியுறுத்த உள்ளார். திங்கள்கிழமை ஜெர்மனி சென்றடைந்த பிரதமர் மோடி பெர்லின் நகரில் ஜெர்மனியின் பிரதமர் ஓலப் ஸ்கோல்ஸ் உள்ளிட்டோரை சந்திக்கிறார். ஜெர்மனி இந்தியாவின் முக்கிய வர்த்தக கூட்டாளி என்பதும் இந்திய வணிகத்தை மேலும் அதிகரிக்க விரும்புகிறது என்பதும் ஆலோசனைகளின் முக்கிய கண்ணோட்டமாக உள்ளது.

image

பின்னர் டென்மார்க்கின் தலைநகர் கோபன்ஹெகனில் மே 3-4 ஆகிய தேதிகளில் அந்நாட்டு பிரதமர் மெட்டே பிரெடரிக்சென் உள்ளிட்டோரை மோடி சந்திக்க உள்ளார். டென்மார்க் பிரதமருடன் இருதரப்பு நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் மோடி, இரண்டாவது இந்தியா-நோர்டிக் உச்சிமாநாட்டிலும் கலந்து கொள்கிறார். இறுதிக்கட்டமாக பாரிசில் பிரதமர் மோடி பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மாக்ரோனை சந்திக்கிறார். சமீபத்தில் பிரான்ஸ் நாட்டில் நடைபெற்ற தேர்தலில், இமானுவேல் மாக்ரோன் மீண்டும் வெற்றிபெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

பிரதமர் மோடி பெர்லின் நகரில் ஜெர்மன் பிரதமர் ஸ்கோல்சுடன் விரிவான இருதரப்பு விவாதம் நடத்த உள்ளார். மோடியுடன் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் மூத்த அதிகாரிகள் பேச்சுவார்த்தைகளில் பங்கேற்கின்றனர்.  ஸ்கோல்ஸ் துணை பிரதமராகவும், நிதியமைச்சராகவும் இருந்தபோது அவரை இதற்கு முன்பு கடந்த ஆண்டு ஜி20 உச்சிமாநாட்டின் போது சந்தித்துள்ளேன் என பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.

ஜெர்மனியுடனான தனித்துவமான ஈராண்டுக்கு ஒருமுறை மேற்கொள்ளப்படும் ஆறாவது இந்தியா- ஜெர்மனி அரசுகளுக்கு இடையிலான ஆலோசனை கூட்டத்தில் மோடி பங்கேற்கிறார். ஜெர்மனியில் புதிய அரசு அமைந்துள்ள நிலையில், அமைச்சரவை அமைந்து ஆறு மாதங்களுக்குள் நடைபெறும் இந்த ஆலோசனை கூட்டம், இந்தியா-ஜெர்மனி  ஒத்துழைப்பு குறிக்கோள்களை அடையாளம் காண உதவும் என கருதப்படுகிறது.


Advertisement

image

"இந்தியா- ஜெர்மனி இடையிலான பாதுகாப்பு கூட்டாண்மையின் முக்கிய தூண்களில் ஒன்றான நீண்டகால வர்த்தக உறவுகள் பற்றி, ஜெர்மனி பிரதமருடன் நானும் கூட்டாக வர்த்தக வட்டமேஜை கூட்டத்தில் உரையாற்றவுள்ளோம். இரு நாடுகளிலும், கோவிட் பெருந்தொற்றுக்கு பிந்தைய பொருளாதார மீட்டுருவாக்க நடவடிக்கைகளுக்கு இது பெரிதும் வலுவூட்டுவதாக அமையும்," என மோடி குறிப்பிட்டுள்ளார்.

கோபன்ஹெகன் நகரில் பிரதமர் பிரெடரிக்செனுடன் இருதரப்பு உறவுகள் குறித்து மோடி ஆலோசனை நடத்தவுள்ளார். டென்மார்க்குடனான தனித்துவமான ‘ பசுமை பாதுகாப்பு கூட்டாண்மை’’ மற்றும் இதர இருதரப்பு உறவுகளின் முன்னேற்றம் குறித்து ஆய்வு செய்ய இது மோடிக்கு வாய்ப்பாக அமையும். இந்தியா-டென்மார்க் வர்த்தக வட்டமேஜை நிகழ்ச்சியில், பிரதமர் டென்மார்க்கில் உள்ள இந்திய சமுதாயத்தினர் இடையே கலந்துரையாட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

image

டென்மார்க்குடன் இருதரப்பு நிகழ்ச்சிகள் தவிர, டென்மார்க், ஐஸ்லாந்து, பின்லாந்து, ஸ்வீடன், நார்வே ஆகிய நாடுகளின் பிரதமர்கள் கலந்து கொள்ளும் இரண்டாவது இந்தியா- நோர்டிக் உச்சிமாநாட்டிலும் மோடி பங்கேற்கிறார். 2018-ல் நடைபெற்ற முதலாவது இந்தியா- நோர்டிக் உச்சிமாநாட்டுக்குப் பிந்தைய நிலை குறித்து இந்தியா மகாநாட்டில் ஆலோசனை நடைபெறவுள்ளது. இந்த உச்சிமாநாடு, பெருந்தொற்றுக்கு பிந்தைய பொருளாதார மீட்டுருவாக்கம், பருவநிலை மாற்றம், புதிய கண்டுபிடிப்புகள், தொழில்நுட்பம், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, இந்தியா-நோர்டிக் ஒத்துழைப்பால் ஆர்டிக் பிராந்தியத்தில் நிலவும் உலக பாதுகாப்பு சூழல் போன்ற விஷயங்களில் கவனம் செலுத்தும்.

பிரான்ஸ் நாட்டு தேர்தல் சென்ற வாரம் வெளிவந்த நிலையில், பாரிசில் அதிபர் மாக்ரோனை மீண்டும் வெற்றி வாகை சூடியதற்கு மோடி வாழ்த்துவார். இந்தியா-பிரான்ஸ் பாதுகாப்பு கூட்டாண்மையின் அடுத்த கட்டத்துக்கான தொனியை உருவாக்கும் வாய்ப்பை இது வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

- கணபதி 

Advertisement:

Advertisement

Advertisement
[X] Close