Published : 01,Apr 2022 07:59 PM

கலகலப்பான மினி டிரீட்…! ஆனால் கண்டிஷன்ஸ் அப்ளை! -மன்மத லீலை விமர்சனம்.!

manmadha-leelai-2022---Review

மணிவண்ணன் பால சுப்ரமணியம்மின் கதையில் வெங்கட் பிரபு இயக்கத்தில் அசோக் செல்வன், ஸ்மிருதி வெங்கட், ரியா சுமன், சம்யுக்தா ஹெக்டே ஆகியோர் நடித்திருக்கும் சினிமா ‘மன்மதலீலை’. மாநாடு என்ற அதிரடி வெற்றியை அடுத்து வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியாகும் சினிமா இது என்பதால் கூடுதல் எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் சில காரணங்களால் இன்றைய காலைக் காட்சிகள் ரத்து செய்யப்பட்டன. பிறகு பிரச்னைக்கு தீர்வு கண்ட படக்குழு இன்று மதியம் படத்தை வெளியிட்டது.

image

ஒரு தசாப்தத்தின் துவக்கம் மற்றும் இறுதியில் நடப்பது போல காட்சிகள் கோர்க்கப்பட்டிருக்கின்றன. அசோக் செல்வனின் வாழ்க்கையில் 2010ல் நடந்த ஒரு சம்பவம் பின் பத்து ஆண்டுகள் கழித்து நடந்த ஒரு சம்பவம். இரண்டுக்கு இடையே இருக்கும் சிக்கலான கிளுகிளு தொடர்பு என்ன, அதற்கான தீர்வு என்ன என்பதே படத்தின் திரைக்கதையாக அமைந்திருக்கிறது.

ஆர்குட், யாஹூ மெசஞ்சர் காலத்தில் இண்டர்நெட் மூலம் தனக்கு அறிமுகமாகும் பெண்ணோடு உறவு கொள்கிறார் அசோக் செல்வன். அது நடந்த பத்து ஆண்டுகளுக்கு பிறகு அடுத்த சம்பவம். அஷோக்செல்வன், குடும்பம் மற்றும் குழந்தை என்றான பிறகு முந்தைய சம்பத்தோடு தொடர்புடைய நபர்கள் கொண்டுவரும் சிக்கல் மற்றும் தீர்வு என விரிகிறது இரண்டாம் பாதி. மன்மத லீலை என பெயரிடப்பட்டிருப்பதால் படத்தில் இரட்டை அர்த்த வசனங்கள், ஓவர் கிளுகிளுப்பு காட்சிகள் நிறைந்திருக்கும் என நினைக்க வேண்டாம். இருந்ததையெல்லாம் ட்ரெய்லரிலேயே வைத்துவிட்டார்கள். படத்தில் அவை குறைவுதான். அதே போல படத்தில் இரட்டை அர்த்த வசனங்கள் இல்லை என்பதும் நல்ல விஷயம்.

image

வெங்கட் பிரபு தனது பேட்டிகளில் சொன்னது போல மன்மதலீலை கில்மா படமாக இல்லை தான். ஆனால் படம் சொல்லிக் கொள்ளும் படியான சுவாரஸ்ய காட்சிகளுமின்றி ஒரே டோனில் பயணிப்பது முதல் பாதியில் சோர்வை தருகிறது. படம் முழுக்க கலகலப்பான நகைச்சுவைக் காட்சிகளை வைத்து விளையாட போதுமான வாய்ப்புகள் இருந்தும் மன்மதன் ஏனோ அதனை தவற விட்டிருக்கிறார்.

இரு வேறு காலகட்டங்களுக்கு பயணிக்கும் ஒரே பாணியிலான காட்சிகள் மூலம் இயக்குநர் உருவாக்க நினைத்த மேஜிக் ஓரளவு வொர்க் அவுட் ஆகியிருக்கிறது. ஆனால், இருக்கும் எதிர்பார்ப்புக்கு அவை போதவில்லை. பூரணியிடம் “உனக்கு கல்யாணம் ஆயிருச்சுனு எனக்கு தெரிஞ்சு போச்சு.” என அசோக் செல்வன் பேசும் காட்சியில் வரும் பிஜிஎம் அருமை. பி.ஜி.எம் இசைக்காக ப்ரேம் ஜி’க்கு பாராட்டுகள். ஆனால் பாடல்....? தமிழ் ஏ அழகனின் ஒளிப்பதிவுக்கு பாராட்டுகள்.

image

அசோக் செல்வனுக்கு இது வித்தியாசமான கதாபாத்திரம். அதிக ஸ்கோப்பும் கொண்ட பாத்திரம். அஷோக் செல்வன் நன்று என சொல்ல முடிந்தாலும் ‘வாவ்’ சொல்ல வைத்திருக்கலாம். ஸ்மிருதி வெங்கட், ரியா சுமன், சம்யுக்தா ஹெக்டே முவருமே தங்கள் கதாபாத்திரத்தை நன்றாக செய்திருக்கிறார்கள். ப்ரேம் ஜி படத்தின் துவக்கத்தில் ஒரு காட்சியில் வருகிறார். பின், பின்னணி இசைக்காகக்ச் சென்றுவிட்டார் போல. அவர் கூடவே வந்த கருணாகரனும் அதன் பின் காணவில்லை. இவ்விருவரையும் இன்னுமே பல இடங்களில் இயக்குநர் பயன்படுத்தி இருக்கலாம்.

படத்தின் முதல் பாதி ஏற்ற இறக்கமற்ற அலைவரிசையில் சென்றாலும் இரண்டாம் பாதியில் இயக்குநர் நம்மை ஓரளவு கதையுடன் ஒன்ற வைத்துவிட செய்கிறார். கலகலப்பான நகைச்சுவைக் காட்சிகளுமே கூட முதல் பாதியை விடவும் இரண்டாம் பாதியில் அதிகம் இருக்கின்றன. வெங்கட் பிரபுவின் வித்யாசமானா க்ளைமேக்ஸ் ஒரு நிறைவத்தருகிறது.

மன்மத லீலை வெங்கட் பிரபுவின் கலகலப்பான மினி ட்ரீட். அதிக எதிர்பார்ப்புகளின்றி போக வேண்டும் என்பது மட்டுமே கண்டிஷன்ஸ் அப்ளை.

சற்று முன்எடிட்டர் சாய்ஸ்