Published : 14,Mar 2022 09:22 AM

'அமைச்சரை தெரியும், அரசு வேலை வாங்கித் தருகிறேன்' என பெண்ணிடம் ரூ.8.5 லட்சம் மோசடி

8-5-lakh-fraud-as-I-know-the-minister-is-buying-government-jobs

மயிலாடுதுறையில் வங்கி அதிகாரி என்று கூறி பெண்ணிடம் ரூ.8.5 லட்சம் பணத்தை மோசடி செய்த வாலிபரை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.

மயிலாடுதுறை மேலஒத்தசரகு தெருவைச் சேர்ந்த விஜயகுமார் என்பவரின் மனைவி வெற்றிச்செல்வி (35). இவரிடம் உடுமலைப்பேட்டையைச் சேர்ந்த சுப்பையன் மகன் முருகன் (37) என்பவர், தான் தனியார் வங்கியில் மேலாளராக வேலைபார்ப்பதாகவும் பணிமாறுதலில் மயிலாடுதுறை கிளைக்கு வந்துள்ளதாகவும் கூறியுள்ளார். தனக்கு அரசியல் செல்வாக்கு இருக்கிறது, நிறைய அமைச்சர்கள் தெரியும். உங்களுக்கு மின்வாரியத்தில் வேலைவாங்கித் தருகிறேன் என்றும் கூறியுள்ளார்.

image

அதன்பின்பு பள்ளியில் ஆசிரியர் வேலை வாங்கித் தருகிறேன் என்று கூறியதும், தனது நகைகளை அடமானம் வைத்து ஆசிரியை வேலைக்காக ரூ.8.5 லட்சம் பணத்தை கடந்த அக்டோபர் மாதம் 26-ம் தேதி முருகனிடம் கொடுத்துள்ளார். அமைச்சரின் உதவியாளரிடம் பணத்தை கொடுத்து அதற்கான கடிதத்தை வாங்கித் தருவதாக கூறி வெற்றிச்செல்வியின் கணவர் விஜயகுமாரை அழைத்துக் கொண்டு திருச்சி சென்றவர், நீங்கள் காரிலேயே இருங்கள் அமைச்சரின் உதவியாளரை பார்த்துவிட்டு வருகிறேன் என்று கூறிசென்றுள்ளார்.

இதையடுத்து பலமணி நேரம் ஆகியும் ஆள் வரவில்லை. கார் டிரைவரை கேட்டபோது வாடகைக்கு வந்தவர் என்பது தெரியவந்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த வெற்றிச்செல்வி பல இடங்களில் விசாரித்து எந்த தகவலும் கிடைக்காததால் கடந்த நவம்பர் மாதம் மயிலாடுதுறை போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் செல்வம் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் இளையராஜா, சிறப்பு சப்இன்ஸ்பெக்டர் ரமேஷ், நரசிம்மபாரதி. கார்த்திக் ஆகியோர் கொண்ட தனிப்படை அமைத்து முருகனை தேடி வந்தனர்.

image

இந்நிலையில் தனிப்படை போலீசார் முருகனை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர் அதில், வெற்றிச்செல்வி போன்று தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் படித்த பெண்களை குறிவைத்து வேலைவாங்கித் தருவதாக கூறி பல லட்சம் ரூபாய் மோசடி செய்திருப்பது தெரியவந்தது. இது குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து முருகனை மயிலாடுதுறை கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்