Published : 25,Feb 2022 10:13 PM
ஆட்சி அதிகாரத்தை கையில் எடுத்துக்கொள்ளுங்கள் - உக்ரைன் ராணுவத்திற்கு புடின் அழைப்பு

உக்ரைன் நாட்டின் ஆட்சி அதிகாரத்தை கையில் எடுத்துக்கொள்ளுமாறு அந்நாட்டு ராணுவத்தினருக்கு, ரஷ்ய அதிபர் புடின் அழைப்பு விடுத்துள்ளார்.
நேட்டோ அமைப்பில் உக்ரைன் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கடந்த சில மாதங்களாகவே உக்ரைன் - ரஷ்யா இடையே மோதல் போக்கு நிலவி வந்தது. இந்நிலையில், உக்ரைன் மீது ரஷ்ய படைகள் நேற்று முதல் தாக்குதல் நடத்தி வருகிறது. வான்வழி, கடல்வழி மற்றும் தரைவழி என மும்முனை தாக்குதலை நடத்துவதால், இரு பக்கமும் பெரும் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன.
ரஷ்யாவின் இந்த செயலுக்கு உலகின் பல்வேறு நாடுகளும் கண்டனங்கள் தெரிவித்து பொருளாதாட தடை விதித்து வருகிறது. இந்நிலையில், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றுமாறு உக்ரைன் ராணுவத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார். இது தொடர்பாக ரஷ்யத் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பேசிய புடின், "உக்ரைனின் ராணுவ அதிகாரிகளிடம் நான் மீண்டும் ஒருமுறை வேண்டுகோள் விடுக்கிறேன்.
நாஜிக்கள் மற்றும் உக்ரைன் அடிப்படை வாதிகள், உங்கள் குழந்தைகளை மனிதக் கேடயங்களாகப் பயன்படுத்தத் தயவு செய்து அனுமதிக்காதீர்கள். உங்கள் கைகளில் அதிகாரத்தை எடுத்துக் கொள்ளுங்கள். அவ்வாறு உக்ரைன் ராணுவம் அதிகாரத்தை கைப்பற்றும் நிலையில், பேச்சுவார்த்தை மூலம் எளிய தீர்வு எட்ட முடியும். உக்ரைனில் தற்போதுள்ள ஆட்சியை அகற்றிவிட்டு ராணுவ ஆட்சியை கொண்டு வரவேண்டும்” என புடின் தெரிவித்துள்ளார்.