Published : 21,Feb 2022 12:20 PM

‘ஏக்கம், கனவு எல்லாமே அதுதான்’- இன்ஸ்டாவில் உணர்ச்சிப்பூர்வமாக பதிவிட்ட விக்னேஷ் சிவன்

Vignesh-Shivan-says-he-said-action-to-MS-Dhoni-36-times-for-CSK

இயக்குநர் விக்னேஷ் சிவனின் இயக்கத்தில், கிரிக்கெட் வீரர் எம்.எஸ்.தோனி நடிக்க உள்ளதாக நேற்று தகவல்கள் வெளியாகி வந்த நிலையில், அது சென்னை ஐ.பி.எல் அணிக்கான விளம்பரப் படமென்று விக்னேஷ் சிவன் விளக்கம் அளித்துள்ளார்.

நேற்று விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டா போஸ்ட்டில் தோனிக்கு பூங்கொத்து அளிப்பது போன்ற ஒரு புகைப்படத்துடன், "என்னுடைய ரோல் மாடல், என்னுடைய ஹீரோ, என்னுடைய நம்பிக்கை நட்சத்திரம்.... இவருடன் இந்த புகைப்படத்துக்கு என்ன கேப்ஷன் போட்டாலும், அது அவரை நான் சந்தித்த அந்த நொடியில் எனக்கு இருந்த உணர்வை முழுமையாக வெளிப்படுத்தாது. வாழ்க்கை மிகவும் அழகானது என்பதை நான் உணர்ந்த தருணம் அது. இப்படியான ஒரு தருணத்தை உருவாக்கிக் கொடுத்தமைக்காக, இந்த காலத்துக்குத்தான் நான் நன்றி சொல்ல வேண்டும். நான் அவரை இன்று சந்திக்கையில், ஒரு நல்ல கதையுடன் சந்தித்தேன். விரைவில் அவருக்கு ஆக்‌ஷன் சொல்லி அவரை இயக்கும் நாள் வரும்!” என்று குறிப்பிட்டிருந்தார் விக்னேஷ் சிவன்.

தொடர்புடைய செய்தி: விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிப்பிலும் சிக்சர் காணவருகிறார் தோனி?!

`இதுவரை விளம்பரப் படங்களில் மட்டுமே தோனி நடித்துவந்த நிலையில், இதுவும் விளம்பரப் படமாகத்தான் அமையுமா, அல்லது விக்னேஷ் சிவனின் வழக்கமான பாணியான ரொமான்டிக் காதல் திரைப்படமாக அமையுமா’ என்பது யூகங்களாகவே இருந்துவந்த நிலையில், அதற்கு விக்னேஷ் சிவன் விளக்கமளித்துள்ளார். அதன்படி விக்னேஷ் சிவன், தோனியை சி.எஸ்.கே. அணிக்கான விளம்பரப் படத்துக்காக இயக்க உள்ளார்.

image

இதுகுறித்து இன்ஸ்டாகிராமில் நெகிழ்ச்சியாக விக்னேஷ் சிவன் சில விஷயங்களை பகிர்ந்திருக்கிறார். விக்னேஷ் சிவனின் அந்த உணர்வுப்பூர்வமான பதிவில் குறிப்பிடப்பட்டிருப்பவை, "பல வருடங்களுக்கு முன், ஐ.பி.எல். போட்டியில் பங்கேற்க தமிழகம் வரும் கிரிக்கெட் வீரர்களுக்கான பாதுகாப்பு காவலர்களுக்கு, என் அம்மாதான் இன்சார்ஜாக இருந்தார். என் அம்மா அப்போது போலீஸ் இன்ஸ்பெக்டராக இருந்ததால் அது சாத்தியமாகி இருந்தது. அவர்தான் எல்லோருக்கும் இன்சார்ஜ் என்பதால், போட்டிக்கு வரும் எல்லா வீரர்களையும் எளிதில் சந்திக்கும் வாய்ப்பு அவருக்கு இருந்தது. அதனால் கிரிக்கெட் வீரர்கள் தங்கும் பார்க் ஷெரிடான் ஹோட்டலுக்கு அம்மாவுடன் நானும் போய்விடுவேன். ஒரு ஓரமாக நின்றுக்கொண்டு அங்கிருந்து தோனியை பார்ப்பேன். அப்போதிருந்தே தோனியை எனக்கு அந்தளவுக்கு பிடிக்கும். என் வாழ்நாள் முழுவதும் தோனியை நான் பின்தொடர்ந்திருக்கிறேனும்கூட. அந்தவகையில் இன்றுவரை வெகு தூரத்தில் இருந்தபடியே தோனியை பார்த்து வாழ்க்கையை கற்றுக்கொள்ளும் மாணவனாகவே நான் உள்ளேன்.

நான் படம் இயக்க வந்தபின்னர், ஷூட்டிங் நாள்கள் தொடங்கி படம் தோல்வியடைந்த சூழ்நிலைகள், படம் மாபெரும் வெற்றி பெற்ற தருணங்கள் என பல தருணங்களை நான் கடந்துவந்தேன். அப்போதெல்லாம், "இந்த தருணத்தில் தோனி இருந்திருந்தால், அவர் எப்படி ரியாக்ட் செய்திருப்பார்" என்று யோசித்துப் பார்த்து, அதையே நானும் செய்வேன். தினந்தோறும் 100-க்கும் மேற்பட்டவர்களுடன் பணிபுரிய வேண்டுமென்பது என் பணிச்சூழலாக இருக்குமென்பதால், தோனியிடம் இருந்து நான் கற்றுக்கொண்ட தலைமை பண்பு, எனக்கு என் பணியிலும் உபயோகமாக இருந்தது.

image

என் அம்மா இன்சார்ஜாக இருந்த நாள்களில், தோனி வரும் நேரத்துக்காக பல மணி நேரம் அறையின் ஓரத்தில் நின்றபடியே நான் காத்திருக்கிறேன். தோனி வரும் பஸ்ஸின் பார்க்கிங், ஏன் கொஞ்சதூரம் தள்ளி நிற்கமாட்டேங்குது என்றெல்லாம் கூட யோசித்திருக்கிறேன். அப்போதானே தோனியை இன்னும் கொஞ்சம் பார்க்க முடியுமென்று ஏங்கியிருக்கிறேன். இப்படி தோனியின் வருகையை எதிர்நோக்கி பார்த்தபடியே இருந்த காலக்கட்டத்தில், ஒருநாள் என் அம்மாவுக்கு தோனியுடன் புகைப்படம் எடுக்கும் வாய்ப்பு கிடைத்தது. ஆனால் எனக்கு கடைசிவரை அந்த வாய்ப்பு கிடைக்கவேயில்லை. என் அம்மாவாலும்கூட எனக்கு இந்த விஷயத்தில் உதவ முடியவில்லை. அதனாலேயே தோனியை நேரில் பார்ப்பதென்பது, என் வாழ்நாளின் மிகப்பெரிய ஆசையாக, கனவாக இருந்தது. வாழ்நாளில் ஒரேயொரு புகைப்படமாவது அவருடன் நான் எடுக்க வேண்டுமென்று நினைத்தேன்.

இப்படியாக போய்க்கொண்டிருந்த நேரத்தில்தான், வாழ்க்கை இன்று எனக்கு இப்படியொரு ஆச்சர்யத்தை கொடுத்துள்ளது. என் மீது அன்பு கொண்டோரின் அன்பாலும் ஆசியாலும் இந்த விஷயம் நடந்துள்ளது. திடீரென ஒரு தேவதை வந்து, நம் வாழ்வின் எல்லா நல்ல விஷயங்களையும் நமக்கு கொடுத்தால் அது எப்படி இருக்கும்... அப்படித்தான் இன்று எனக்கும் நடந்துள்ளது. ஆம், அப்படித்தான் இன்று என் இன்ஸ்பிரேஷனை நான் இயக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்துள்ளது. சி.எஸ்.கே. அணிக்காக தயாரிக்கப்படும் ஒரு சின்ன வீடியோவை, தோனிக்காக நான் இயக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்துள்ளது.

ஆம், அவரை தற்போது இயக்கியுள்ளேன். அவரிடம், ஒரு இயக்குநராக 36 முறை ஆக்‌ஷன் சொல்லியிருக்கிறேன். ஒவ்வொருமுறை ஆக்‌ஷன் சொல்லும்போதும், கடவுளுக்கு நன்றி சொல்லியபடியே இருந்தேன். சின்ன பையனை போல, எத்தனை முறை ஆக்‌ஷன் சொன்னேன் என்றுகூட நான் எண்ணிவைத்தேன். பிரேக் நேரத்தில், என் அம்மா அவருடன் எடுத்துக்கொண்ட பழைய புகைப்படத்தை அவரிடம் காண்பித்தேன். பின், அம்மாவை அழைத்துவந்து, பெர்சனலாக நேரம் ஒதுக்கி அவரை சந்திக்கவும் வைத்தேன்.

image

இந்த தருணத்தில் சொல்கிறேன்... விடாமுயற்சி செய்து, உண்மையாக உழைத்தால் நிச்சயமாக பலன் கிடைக்கும்.

தோனி போன்ற இனிமையான, அன்பான ஒருவருடன் நானும் இணைந்து பணியாற்றியுள்ளேன் என்பது, என் வாழ்நாளில் நான் மறக்கவே முடியாத ஒரு விஷயம். எனக்காக பிராத்திக்கும் எல்லோருக்கும், என் நன்றி. என் வாழ்வில் அற்புதங்களை நிகழ்த்திய தேவதைகள் எல்லோருக்கும்கூட, என்னோட ஸ்பெஷல் நன்றி”

என்று நெகிழ்ச்சியாக பதிவிட்டுள்ளார்.

சற்று முன்எடிட்டர் சாய்ஸ்