
பீகார் மாநிலத்தில் வெள்ளப் பகுதிகளை பார்வையிட்ட பிரதமர் மோடி நிவாரணப் பணிகளுக்காக 500 கோடி ரூபாய் வழங்கி உத்தரவிட்டுள்ளார்.
பீகார் மாநிலத்தில் கடந்த சில வாரங்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் அங்குள்ள ஆறுகளில் கடும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. பல கிராமங்களை வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. வெள்ளத்தில் சிக்கி பீகாரில் இதுவரை 341 பேர் பலியாகி உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பீகாரின் 19 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இதில் 13 மாவட்டங்கள் மிகக் கடுமையாக பாதிப்புக்கு ஆளாகி உள்ளன. சுமார் 1.46 கோடிக்கும் அதிகமான மக்கள் மழை வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி ஹெலிகாப்டர் மூலமாக வெள்ளப்பாதிப்புகளை ஆய்வு செய்தார். அவருடன் பீகார் முதல்வர் நிதிஷ்குமார் மற்றும் துணை முதல்வர் சுசில் குமார் மோடி ஆகியோர் உடன் இருந்தனர். இதனைத் தொடர்ந்து பீகார் மாநிலத்திற்கு உடனடி வெள்ள நிவாரணமாக 500 கோடி ரூபாயை நரேந்திர மோடி அறிவித்துள்ளார். இதில் வெள்ளத்தால் உயிரிழந்தவர்களின் வாரிசுகளுக்கு தலா ரூ.2 லட்சம் அளிக்கப்படும் என்றும் அவர் அறிவித்தார்.
வெள்ளம் பாதித்த பகுதிகளை பார்வையிட்ட மோடி கூறுகையில், "பீகாரின் வெள்ள பாதிப்பை மதிப்பீடு செய்ய மத்திய குழு விரைவில் அனுப்பி வைக்கப்படும். காப்பீட்டு நிறுவனங்கள் தங்கள அதிகாரிகளை உடனடியாக வெள்ளம் பாதித்த பகுதிகளுக்கு அனுப்பி விவசாய பயிர்களின் சேதத்திற்கு, உடனடியாக காப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இதன் மூலம் விவசாயிகள் விரைவில் நிவாரணம் பெறுவார்கள். மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் விரைந்து, சேதமடைந்த சாலைகளை சரி செய்ய வேண்டும். இதுபோன்ற இக்கட்டான சூழலில், பீகார் மாநிலத்திற்கு மத்திய அரசு இயன்ற உதவிகளைச் செய்யும்" என்று கூறினார்.