[X] Close

சபதமிட்டபடி பிரிட்டீஷ் படையை வென்று வெற்றிக் கொடி நாட்டிய வீரமங்கை வேலுநாச்சியார்! 

சிறப்புக் களம்

Sivaganga-Queen-Velu-Nachiyar-Birthday-today-and-we-remember-her-with-her-positive-story-to-fight-against-East-India-Company--

வட இந்தியாவில் ஜான்சியின் ராணியாக விளங்கிய லஷ்மி பாய், ஆங்கிலேயரை எதிர்த்து போராடியது இந்திய அளவில் அறியப்பட்ட செய்தியாக இன்றளவும் உள்ளது. ஜான்சி ராணிக்கு நூறு ஆண்டுகளுக்கு முன்பே பிறந்து பிரிட்டீஷ் படைக்கே தண்ணி காட்டிய தமிழகத்தைச் சேர்ந்த வேலு நாச்சியார் பெயர் இந்திய அளவில் கொண்டு செல்லப்படவே இல்லை. 

image


Advertisement

10 மொழிகளை கற்றறிந்த வேலுநாச்சியார்

ராமநாதபுரம் அடுத்த சக்கந்தி என்ற ஊரில் மன்னர் செல்லமுத்து விஜயரகுநாத சேதுபதி மற்றும் சக்கந்தி முத்தாத்தாள் நாச்சியார் ஆகியோருக்கு 1730 ஆண்டில் பிறந்தவர் தான் இந்த வீரமங்கை வேலுநாச்சியார். 

மன்னர் செல்லமுத்து விஜயரகுநாத சேதுபதியின் ஒரே வாரிசான வேலு நாச்சியார், ஆண் பிள்ளை இல்லாத குறையை நிறைவேற்றும் அளவிற்கு வீரமும், அறிவும் செறிந்து காணப்பட்டார். 

கல்வி, விளையாட்டு, சிலம்பம், வாள் வீச்சு, ஈட்டி எறிதல், அம்பு விடுதல், குதிரை ஏற்றம், யானை ஏற்றம் என அனைத்து ஆயுதப் பயிற்சிகளையும் கற்றுத் தேர்ந்தார். 

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், பிரெஞ்சு, ஆங்கிலம், உருது என 10 மொழிகளை கற்றறிந்த வேலுநாச்சியார், சிறு வயதிலேயே எதற்கும் அஞ்சாத துணிவும், நெஞ்சுரமும் கொண்டவராக திகழ்ந்தார்.

image

கொல்லப்பட்ட கணவர் - சபதமிட்ட வேலுநாச்சியார்

1746-ல் சிவகங்கை சீமையின் மன்னராக இருந்த முத்து வடுகநாதத்தேவரை தனது 16-வது வயதில் திருமணம் செய்துகொண்டு பட்டத்து இராணி ஆனார் வேலு நாச்சியார். 

செல்வ செழிப்பான சிங்கங்கை சீமையில் ராணியாக வலம் வந்தார் வேலு நாச்சியார். ஆற்காடு நவாப்புக்கு முத்து வடுகநாதத் தேவர் கப்பம் கட்ட மறுத்து வந்ததால், அவர் மீது கடும் கோபத்தில் இருந்தார் ஆற்காடு நவாப். ஆங்கிலேயப் படைகளின் உதவியுடன் காளையார்கோவிலில் வழிபாடு செய்துகொண்டிருந்தபோது மன்னர் முத்து வடுகநாதத்தேவரை திடீரென்று சுற்று வளைத்து தாக்கினான் நவாப். 

இதனை சற்றும் எதிர்பார்க்காவிட்டாலும் ஆங்கிலேயர்களின் நவீன போர் சாதனைங்களை எதிர்த்து போராடியும், ஒரு கட்டத்தில் சமாளிக்க முடியாமல் மன்னர் முத்து வடுகநாதத்தேவர் மற்றும் அவரது படை வீரர்கள் உயிர் மாண்டனர். 

கணவர் இறந்த செய்தி கேட்டு துடித்த வேலுநாச்சியார், நவாப்பை பழிக்கு பழிவாங்க எண்ணினார். அந்த நேரத்தில் அவர் கர்ப்பமுற்றிருந்தார். இதனால் மன்னர் முத்து வடுகநாதத்தேவருடன் உடன்கட்டை ஏறும் பழக்தை கைவிட்டு சிவகங்கை சீமையின் தளபதிகளான சின்ன மருது, பெரிய மருது ஆகியோரின் துணையுடன் மேலூருக்கு தப்பிச் சென்றார். 

ஏற்கனவே நவாப்பை பழிவங்க வேண்டும் என்று துடித்துக் கொண்டிருந்த ஹைதர் அலியின் உதவியை நாடினார் வேலுநாச்சியார். அப்போது சரளமாக வேலுநாச்சியார் உருது பேசுவதை கண்டு மெச்சிய ஹைதர் அலி, வேலுநாச்சியாருக்கு உதவிப் புரிவதாக உறுதியளித்தார்.

இதற்கிடையில் வேலுநாச்சியாருக்கு 1770-ல் மகளாக பிறந்தார் வெள்ளச்சி நாச்சியார். 

image

ஹைதர் அலி உதவியுடன் பெரும் படை திரட்டல்

சரியான தருணம் பார்த்துக்கொண்டிருந்த வேலுநாச்சியார், ஏழாண்டு காலம் திண்டுக்கல் கோட்டை, விருப்பாட்சி கோட்டை, அய்யம்பாளையம் என இடம் மாறி மாறி முகாமிட்டிருந்தார்.

ஆங்கிலப் படையை அழித்து, நவாப்பை வீழ்த்தி, சிவகங்கைச் சீமையில் தங்கள் அனுமன் கொடியை மீண்டும் பறக்க விடுவது என்று வேலு நாச்சியார் சபதமேற்றார். தளவாய் தாண்டவராயன் பிள்ளை, சேனாதிபதிகள் மருது சகோதரர்களை அழைத்துக்கொண்டு குறுநில மன்னர்களை ஒன்றுசேர்த்துப் போராடப் பல இடங்களுக்கும் அவர் சென்றார்.

ஆங்கிலேயர்களை எப்படி தாக்கி வீழ்த்த வேண்டும் என்ற உத்திகளை வேலுநாச்சியார் வகுத்தார். நவீன ஆயுதங்களை கொண்டிருந்த ஹைதர் அலியின் படையை 1780-ல்  தலைமை ஏற்று நடத்திச் சென்றார் வேலுநாச்சியார். 

image

சீவசங்கை சீமையில் கொடி நாட்டிய வேலுநாச்சியார்

தன் படைகளை மூன்றாகப் பிரித்து ஆங்கிலேயர்கள் மற்றும் நவாப்பை தாக்க அவர் திட்டமிட்டார். அதன்படி விஜயதசமி அன்று சிவகங்கை அரண்மனைக்குள் இருக்கும் ராஜராஜேஸ்வரி கோயிலில் பெண்கள் வழிபாடு நடத்துவது வழக்கம். 

இதனை சாதகமாக்கி கொண்டு வேலு நாச்சியாரும், அவரது மகளிர் படையும் ஆயுதங்களை ஆடைக்குள் மறைத்துக்கொண்டு கூட்டத்தோடு கூட்டமாக அரண்மனைக்குள் புகுந்து திடீர் தாக்குதல் நடத்தினர். 

இந்தப் போரில் வென்று இந்திய சுதந்திரப் போராட்ட வரலாற்றிலேயே ஆங்கிலேயரை வென்று முடி சூடிய ஒரே ராணி என்றால் அது வேலு நாச்சியார் தான் என்ற பெயரும் பெற்றார். அப்போது அவருக்கு வயது 50. ஆங்கிலேயரின் கொடி இறக்கப்பட்டு தனது கணவரின் சமஸ்தானமான சிவகங்கை சீமையில் அனுமன் கொடியை வெற்றிகரமாக பறக்கவிட்டார் வேலு நாச்சியார்.

1780 முதல் ஆட்சிப் புரிந்த வேலுநாச்சியார், போர்களத்தில் சிதையுண்ட சிவங்கையை சீரமைக்க தொடங்கினார். இவரின் ஆட்சியின்கீழ் சிவகங்கை பல்வேறு வகையிலும் சிறப்புற்றது. 

அதன்பின்னர் 1790 ஆம் ஆண்டு வேலுநாச்சியார் தனது மகள் வெள்ளச்சி நாச்சியாரை ராணியாக முடி சூட்டினார். இந்தியாவில் ஆங்கிலேயருக்கு எதிரான புரட்சிக்கு வித்திட்ட வீராங்கனை வேலு நாச்சியார் உடல்நலக் குறைவால் தனது 66-வது வயதில் (1796) மறைந்தார். 

image

வேலுநாச்சியாருக்கு மணிமண்டபம்

சிவகங்கை மாவட்டம் சூரக்குளம் கிராமத்தில் 60 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ளது வீரமங்கை வேலு நாச்சியார் நினைவு மண்டபம். வேலுநாச்சியாரின் பெருமையை நிலைநாட்டும் வகையில் அவரது பெயரில் 2008-ல் தபால் தலை வெளியிடப்பட்டது. 

image

சிவகங்கையில் வேலு நாச்சியார் பதுங்கியிருந்தபோது, தம்மைக் காட்டிக் கொடுக்காமல் இருந்ததற்காக ஆங்கிலேயரால் துண்டு துண்டாக வெட்டிகொல்லப்பட்ட உடையாள் என்ற பெண்ணுக்கு வீரக்கல் ஒன்றை நட்டு, தமது திருமாங்கல்யத்தை முதல் காணிக்கையாகச் செலுத்தி வேலுநாச்சியார் அஞ்சலி செலுத்தினார். இந்தக் கோயில் கொல்லங்குடி வெட்டுடையகாளியம்மன் கோயில் என்று அழைக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

ஆங்கிலேயர்களுக்கு சிம்மசொப்பனமாக விளங்கிய வேலுநாச்சியார் பிறந்த தினத்தில் நாமும் அவரை போற்றுவோம்.

-சங்கீதா

Advertisement:

Advertisement

Advertisement
[X] Close