Published : 17,Nov 2021 04:40 PM

'அங்காமலி டைரீஸ்' முதல் 'ஹோம்' வரை 10 படங்கள் - இந்தியில் மலையாள ரீமேக் ஃபீவர்!

10-Upcoming-Hindi-Remakes-of-Malayalam-Films

மலையாள சினிமாவின் தாக்கம் இப்போது வடக்கேயும் தொற்றிக்கொண்டுள்ளது. இதனால் மலையாளத்தில் வெற்றிபெற்ற பல திரைப்படங்கள் இந்தியில் ரீமேக் செய்யப்பட இருக்கின்றன.

கடந்த தசாப்தங்களில் பல இந்தி திரைப்படங்கள் மலையாளத்தில் ரீமேக் செய்யப்பட்டு கவனம் ஈர்த்துள்ளன. குறிப்பாக, இந்தியில் ஹிட் அடித்த 'அமர் அக்பர் அந்தோணி', 'மஜ்பூர்', 'ஆனந்த்' போன்ற படங்கள் மலையாளத்தில் ரீமேக் செய்யப்பட்டு பெரும் வெற்றியை குவித்தன. இந்தப் போக்கு சமீப காலங்களில் குறைந்துவிட்டன. மாறாக, இப்போது மலையாள படங்கள் இந்தியில் ரீமேக் செய்யப்பட்டு வருகின்றன. இதற்கு முன்பு பிரபல இயக்குநர் ப்ரியதர்ஷன் பல மலையாள ஹிட்களை இந்தியில் அதிகாரபூர்வமாக ரீமேக் செய்தார். 'கர்திஷ்', 'ஹல்சுல்', 'ஹேரா பெரி', 'பில்லு' என இந்தியில் பெரும் வெற்றி பெற்ற படங்கள் அனைத்தும் மலையாளப் படங்களின் ரீமேக்தான்.

ஆரம்பத்தில் ப்ரியதர்ஷன் நேரடியாக செய்துகொண்டிருந்ததை இப்போது இந்தி சினிமாவைச் சேர்ந்த மற்ற இயக்குநர்களும் செய்யத் தொடங்கியுள்ளனர். அந்த வகையில், மலையாளத்தில் இருந்து இந்தியில் ரீமேக் செய்யப்பட இருக்கும் 10 திரைப்படங்கள் குறித்து பார்ப்போம்.

மும்பை போலீஸ்: ஜோதிகாவை வைத்து '36 வயதினிலே' படம் இயக்கிய ரோஷன் ஆண்ட்ரூஸின் திரைப்படமே 'மும்பை போலீஸ்'. மலையாளத்தின் முன்னணி நட்சத்திரங்களான பிருத்விராஜ் சுகுமாரன் மற்றும் ஜெயசூர்யா ஆகியோர் நடிப்பில் 2013-ல் இந்தப் படம் வெளியானது. போலீஸ் கதையான இதனை அதிகாரபூர்வமாக கைப்பற்றியிருக்கிறார் வருண் தவான். தற்போது படத்தை தயாரிக்கும் பணிகளும் தொடங்கப்பட்டுள்ளன. வருண் தவானின் அடுத்தப் படமாக இது வெளிவர இருக்கிறது.

பெங்களூர் டேஸ்: 2014-ல் துல்கர் சல்மான், நஸ்ரியா, நிவின் பாலி, ஃபஹத் ஃபாசில், இஷா தல்வார் உட்பட பலர் நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய ஹிட் அடித்த படம், 'பெங்களூர் டேஸ்'. அஞ்சலி மேனன் இயக்கிய இந்தப் படத்தின் வெற்றியை அடுத்து, தெலுங்கு திரைப்பட தயாரிப்பாளர் தில் ராஜு மற்றும் பிவிபி சினிமாஸ் இணைந்து தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி என மூன்று மொழிகளுக்கும் சேர்த்து ரீமேக் உரிமையை கைப்பற்றியிருந்தனர். ஏற்கெனவே தமிழில் 'பெங்களூரு நாட்கள்' என இந்தப் படம் வெளிவந்துவிட்ட நிலையில் தற்போது இந்தியில் ரீமேக் செய்யும் பணிகளை தொடங்கியுள்ளனர். மறைந்த சுஷாந்த் சிங் ராஜ்புத்தை வைத்து படம் தொடங்கப்பட்டது. ஆனால், அவர் இறந்துவிட தற்போது கார்த்திக் ஆர்யனை வைத்து படத்தை தொடங்க பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.

image

அங்கமாலி டைரீஸ்: 'ஜல்லிக்கட்டு' இயக்குநர் லிஜோ ஜோஸ் பல்லிசேரி இயக்கத்தில் 2017-ல் வெளியான படம் இது. கேரளாவில் இருக்கும் அங்கமாலி என்ற பகுதியின் வாழ்வியலை கண்முன் நிறுத்திய 'அங்கமாலி டைரீஸ்' மலையாளத்தை தாண்டியும் நல்ல வரவேற்பை பெற்றது. குறிப்பாக மும்பையில் சில ஆண்டுகள் பல வாரங்கள் இந்தப் படம் திரையிடப்பட்டு பாராட்டுகளை பெற்றது. இந்த தாக்கம் காரணமாக இந்தி சினிமாவின் பிரபல தயாரிப்பாளர் விக்ரம் மல்ஹோத்ரா இதன் இந்தி ரீமேக் உரிமையை கைப்பற்றியுள்ளார். முதலில் இந்தி இயக்குநர்களை வைத்து இயக்க பேச்சுவார்த்தை நடைபெற்றுவந்தது. ஆனால், லிஜோவின் கதை சொல்லும் பாணி படத்தின் வெற்றிக்கு முக்கிய பங்கு வகிதத்தால் அவரை வைத்தே இயக்க இப்போது பணிகள் தொடங்கியுள்ளன என்று சமீபத்தில் தயாரிப்பாளர் விக்ரம் மல்ஹோத்ரா தரப்பில் இருந்து தகவல் வெளியிடப்பட்டது.

மாயநதி: டோவினோ தாமஸ், ஐஸ்வர்யா லட்சுமி நடிப்பில் பிரபல இயக்குநர் ஆசிக் அபு இயக்கத்தில் 2017-ல் வெளியான திரைப்படம் 'மாயநதி'. கல்லூரிக் காதல் முறிவுக்குப் பிறகு பிழைப்புக்கான தேடலிலிருக்கும் இருவரிடையே மீண்டும் துளிர்க்கும் காதலை மையப்படுத்தி, சமகால அரசியலையும் பேசியிருக்கும் இப்படமும் ஆசிக் அபுவின் ஹிட் வரிசையில் இடம்பிடித்தது. ஷ்யாம் புஷ்கரன் மற்றும் திலீஷ் நாயர் எழுத்தில் பட்டைதீட்டப்பட்ட இதன் இந்தி ரீமேக் சென்ற ஆண்டே தொடங்கப்பட்டுவிட்டது. ஜோ ராஜன் என்பவர் இயக்கி வருகிறார். கொரோனா காரணமாக தாமதமாகி இருந்த இந்தப் படம் விரைவில் தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

image

இஷ்க்: 'இஷ்க்'... மலையாளத்தில் வெற்றியடைந்த திரைப்படம். ஓர் இளம் காதல் ஜோடிக்கும், அவர்களுக்கு இடையான காதல், காதலுக்கான ப்ரைவசி, காதலியின் சுயமரியாதை என நுணுக்கமான விஷயங்களை ஒரு லைன் கதையுடன் கடந்து போகும் இத்திரைப்படம். சாலை, இரண்டு வீடுகள், ஒரு கார் என மிகச்சிறிய அளவிலான லொகேஷன்கள், குறைவான நடிகர்கள், மிக மிக குறைவான பட்ஜெட் என அழகான சினிமாவாக ரசிகர்களை வெகுவாக கவர்ந்த இந்தப் படத்தில் வளர்ந்து வரும் ஹீரோ ஷேன் நிகம் நடித்திருந்தார். மிகப்பெரிய வரவேற்பை பெற்ற இந்தப் படம் இந்தியில் ரீமேக் செய்யப்படவிருக்கிறது.

நீரஜ் பாண்டே என்பவர் ரீமேக் உரிமையை கைப்பற்றியுள்ளார். 'சலோ டில்லி' போன்ற படங்களை இயக்கிய ஷஷாந்த் ஷா ரீமேக் வெர்சனை இயக்க ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார். அமீர் கானின் மகன் ஜுனைத் கான் ஷேன் நிகம் வேடத்தில் நடிக்கவிருப்பதாக சொல்லப்படுகிறது.

டிரைவிங் லைஃன்சென்ஸ்: ஒரு பெரிய சினிமா சூப்பர் ஸ்டாருக்கும், அவரின் தீவிர ரசிகராக இருக்கும் போக்குவரத்து ஆய்வாளருக்கும் ஏற்படும் மோதல் ஈகோவாக வெடிக்க, இருவரில் யார் வெல்கிறார் என்பதுதான் கதை. சூப்பர் ஸ்டார் ஹரிந்திரனாக பிருத்விராஜும், போக்குவரத்து ஆய்வாளராகக் குருவில்லாவாக சூரஜ் வெஞ்சரமூடுவும் நடிக்க, நடிகர் லாலின் மகன் ஜீன்பால் லால் இயக்கி இருந்தார். கொரோனா காலத்தில் ஓடிடியில் வெளியாகி பரவலாக பேசப்பட்டது.

இதன் இந்தி ரீமேக்கில் அக்‌ஷய் குமார் மற்றும் இம்ரான் ஹாஷ்மி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். அக்‌ஷய் குமார் ஏரளமான படங்களில் ஒப்பந்தம் ஆகியுள்ளதால், தாமதம் ஆகி வருவதாக கூறப்படுகிறது. விரைவில் அக்‌ஷய் இணைத்த உடன் படத்தின் பணிகள் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ராஜ் மேத்தா என்பவர் இயக்கவிருக்கிறார்.

ஹெலன்: மதுக்குட்டி சேவியர் இயக்கத்தில் மலையாளத்தில் வெளியான திரைப்படம் 'ஹெலன்'. வினித் ஸ்ரீநிவாசன் தயாரிப்பில் உருவான இந்த திரைப்படத்தில் அன்னா பென், அஜு வர்கீஸ் உட்பட பலர் நடித்திருந்தனர். வணிக வளாகத்தில் உள்ள உணவகம் ஒன்றில் பணியாற்றும் நாயகி ஒருநாள் இரவு காணாமல் போவதும், அவரை தேடிக் கண்டுபிடிப்பதும் என சஸ்பென்ஸ் த்ரில்லராக உருவான ஹெலன் திரைப்படமும் மலையாளத்தில் வெற்றி பெற்றது. இதன் இந்தி பதிப்பில் ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் நடிக்கவிருக்கிறார். மலையாளத்தில் இயக்கிய மதுக்குட்டி சேவியரே இந்தி வெர்சனையும் இயக்கி வருகிறார்.

image

அய்யப்பனும் கோஷியும்: கடந்த வருடம் மலையாள சினிமா வரலாற்றில் மறக்க முடியாத ஒரு படமாக அமைத்தது 'அய்யப்பனும் கோஷியும்'. மறைந்த இயக்குநர் சச்சி இயக்கத்தில் பிஜூ மேனன் பிரித்விராஜ் நடித்திருந்தனர். அய்யப்பன் நாயர் என்ற போலீஸும் - கோஷி குரியன் என்று ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரியும் ஒரு சந்தர்ப்பத்தில் சந்தித்துக்கொள்ளும்போது அவர்களுக்குள் ஏற்படும் ஈகோ மோதலே இந்தப் படத்தின் கதை. முதல் லாக்டவுன் சமயத்தில் வெளியாகி பல்வேறு தரப்பிலான ரசிகர்களையும் வெகுவாக ஈர்த்தது.

பல மொழிகளில் தயாராகி வரும் இந்தப் படத்தின் இந்தி பதிப்பில் ஜான் ஆபிரகாம் - அர்ஜுன் கபூர் நடிக்க, 'மிஷன் மங்கள்' படத்தை இயக்கிய ஜெகன் சக்தி இயக்குகிறார். ஜான் ஆபிரகாம் இணை தயாரிப்பாளராக படத்தை தயாரித்து வருகிறார்.

image

நாயட்டு: இந்த வருடம் வெளியான மலையாள திரைப்படங்களில் மிகப் பெரிய வெற்றிப்படமாகவும், பேசுபொருளாகவும் அமைந்தப் படம் `நாயட்டு'. குஞ்சக்கோ போபன், ஜோஜு ஜார்ஜ், நிமிஷா சஜயன் என மலையாளத்தின் முன்னணி நடிகர்கள் இதில் நடித்திருந்தனர். மார்டின் பிரகாட் இயக்கியிருந்த இந்தப் படத்தின் ரீமேக் உரிமையையும் நடிகர் ஜான் ஆபிரகாம் கைப்பற்றியுள்ளார். இயக்குநரை ஒப்பந்தம் செய்யும் பணி இப்போது நடந்து வருகிறது.

ஹோம்: அமேசான் ப்ரைமில் சில மாதங்கள் முன் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்ற படம் இது. புதிய தொழில்நுட்பங்களின் வருகையால் குடும்ப உறவுகளில் ஏற்படும் சிக்கல்களைப் பற்றிப் பேசும் 'ஹோம்' நாயகனாக இந்திரன்ஸ் நடித்திருந்தார். ஃபீல்-குட் கதையாக கவனம் ஈர்த்த இதன் ரீமேக் உரிமையை கைப்பற்றியுள்ளது விக்ரம் மல்ஹோத்ராவின் அபுண்டன்டியா என்டர்டெயின்மென்ட். இந்தப் படத்தை மலையாளத்தில் தயாரித்த ஃப்ரைடே ஃபிலிம் ஹவுஸ் விக்ரம் மல்ஹோத்ரா உடன் இணைந்து தயாரிக்கவிருக்கிறது.

- மலையரசு

| வாசிக்க > ஓடிடி திரைப் பார்வை 9: October - காதல் நிமித்தமும், சொல்லாத காதலின் அடர்த்தியும்! |

சற்று முன்எடிட்டர் சாய்ஸ்