[X] Close

37 ஆண்டுகளுக்கு முன் கேரளாவை உலுக்கிய 'இன்ஷூரன்ஸ்' கொலை... - துல்கரின் 'குரூப்' பின்புலம்!

சிறப்புக் களம்

A-story-of-kerala-elusive-killer-Sukumara-Kurup

கேரளாவையே அதிரவைத்த சுகுமார குரூப்பின் வாழ்க்கை வரலாற்றைத் தழுவி எடுக்கப்பட்ட துல்கர் சல்மானின் 'குரூப்' திரைப்படம் தியேட்டர்களில் வெளியாகி இருக்கின்ற நிலையில், சுகுமாரா குரூப் யார், அவரின் பின்னணி குறித்து சற்றே விரிவாகப் பார்ப்போம்.

கேரள மக்கள் இதுவரை மறக்காத, அதேசமயம் பதற்றத்தை ஏற்படுத்தும் ஒரு பெயர்தான் சுகுமார குரூப். 1984-ம் ஆண்டு ஜனவரி மாதம் ஒருநாள் மாவேலிக்கரை - செங்கானூர் சாலையின் ஓரத்தில் அருகிலுள்ள பண்ணையில் ஒரு கார் தீப்பிடித்து எரிந்துகொண்டிருந்தது. அந்தப் பண்ணையில் வசித்து வந்தவர்கள் பற்றி எரியும் காரை சென்று பார்த்தபோது உள்ளே ஓர் ஆணின் சடலம் இருந்துள்ளது. உடனடியாக போலீஸுக்கு தகவல் உள்ளூர் மக்கள் கொடுக்க, அவர்கள் எரிந்த உடலை மீட்டு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர்.

பின்னர் விசாரணையில், எரிந்த நிலையில் இருந்த கார் ஆலப்புழா அருகே உள்ள செரியநாட்டைச் சேர்ந்த பாஸ்கர பிள்ளை என்பவருக்குச் சொந்தமானது என்பதும், காரில் இறந்து கிடந்தது பாஸ்கர பிள்ளையின் மைத்துனர் சுகுமார குரூப் என்பதும் தெரியவந்தது. இந்த சுகுமார் குரூப் அபுதாபியில் வேலை பார்த்து வந்தவர். சம்பவம் நடப்பதற்கு சில மாதங்கள் முன்புதான் வீடு திரும்பியிருந்துள்ளார். இதனிடையே, விபத்து நடந்த இடத்தில் ஒரு ஜோடி கையுறை, ஒரு காலி பெட்ரோல் கேன் மட்டுமே காணப்பட்டன.


Advertisement

குரூப்தான் இறந்தார் என்பதற்கு அடையாளமாக உடலில் இருந்த ஆடையை தவிர வேறு எந்த ஆதாரங்களும் கிடைக்கவில்லை. முகமும் முழுவதுமாக எரிந்த நிலையில் இருந்துள்ளது. சந்தேகத்துடன் இருந்த போலீஸுக்கு பிரேத பரிசோதனை அறிக்கை மேலும் அந்த சதேகத்தை வலுப்படுத்தியுள்ளது. பிரேத பரிசோதனையில், ``உயிருடன் இருக்கும்போது உடல் எரிக்கப்பட்டதற்கான எந்த அறிகுறிகளும் இல்லை. கார் எரியும்போது உயிருடன் இருந்திருந்தால் புகை உடலுக்குள் சென்று மூச்சு திணறியிருக்கும். அப்படி எதுவும் இல்லை. எனவே இறந்த நபர் கொலை செய்யப்பட்டிருக்கலாம்" என்று கூறப்பட்டது.

image

குரூப்பின் உறவினர்களிடம் உடல் ஒப்படைக்கப்பட்டு, அவரது வீட்டு வளாகத்தில் அடக்கம் செய்யப்பட்ட பிறகு, பாஸ்கர பிள்ளையை வரவழைத்து விசாரணை நடத்தியது போலீஸ். இந்த விசாரணையில் திருப்பம் காத்திருந்தது. மாவேலிக்கரை போன்ற இடத்தில் அக்காலத்தில் வழக்கமில்லாத வகையில் முழுக் கை சட்டை அணிந்திருந்த பாஸ்கர பிள்ளையை கவனிக்கத் தொடங்கினார் இந்த வழக்கை விசாரித்த காவல்துறை அதிகாரி ஹரிதாஸ். உடனே முழுக் கை சட்டையை அகற்ற சொல்லியிருக்கிறார். அப்போது பாஸ்கர பிள்ளையில் கைகள் மற்றும் உடல் முழுவதும் தீக்காயங்கள் இருந்ததை கண்டுபிடித்தார் ஹரிதாஸ்.

இக்கட்டான நிலையில் சிக்கிக்கொண்ட பாஸ்கர பிள்ளை ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்தார். ``பணம் வாங்கிக்கொண்டு வெளிநாட்டில் வேலை வாங்கித் தராமல் ஏமாற்றியதற்காக சுகுமார குரூப்பை கொன்றுவிட்டேன்" என்று அதிரவைத்துள்ளார். மேலும், கார் தீப்பிடித்து எரிந்த இடத்தில் கையுறை பாஸ்கர பிள்ளையுடையது என்பது கையுறைகளில் காணப்பட்ட முடி மூலமாக தடயவியல் துறை கண்டுபிடிப்புகளில் தெரியவந்தது. இந்த சமயத்தில் பாஸ்கர பிள்ளையை ரிமாண்ட் செய்திருந்த ஹரிதாஸுக்கு இறந்த சுகுமார் குரூப்பின் உறவினர் ஒருவரிடம் இருந்து போன் வந்துள்ளது. போனில் பேசியவர் `குரூப் இறக்கவில்லை' என்பதை மட்டும் கூறியுள்ளார்.

பாஸ்கர பிள்ளையின் ஒப்புதல் வாக்குமூலத்தை தாண்டியும் எதோ மர்மம் இருக்கிறது என்பதை சந்தேகிக்க தொடங்கிய காவல் அதிகாரி ஹரிதாஸ், சுகுமார குரூப் வீட்டிற்கு மஃப்டியில் போலீஸாரை அனுப்பி நோட்டமிட்டுள்ளார். அங்கு இறந்தவரின் வீடுபோல் துக்கம் அனுசரிக்காமல், மாறாக இறந்த வீட்டில் கோழி கறி சமைத்து சாப்பிட்டு மகிழ்ச்சியாக இருந்துள்ளனர். இவை அனைத்தும் ஹரிதாஸுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது.

இதற்கு மத்தியில்தான் கார் எரிப்பு சம்பவம் நடந்த இரண்டு நாட்களுக்குப் பிறகு ஆலப்புழா அருகே உள்ள ஹரிப்பாடு காவல் நிலையில் மேன் மிஸ்ஸிங் வழக்கு பதிவானது குறித்து தெரிந்துகொள்கிறார் ஹரிதாஸ். சினிமா துறையைச் சேர்ந்த சாக்கோ என்பவர் காணாமல் போனதாக அவரின் குடும்பத்தினர் புகார் அளித்துள்ளனர். புகாரில் சொன்ன அடையாளங்களை வைத்து மீண்டும் எரிக்கப்பட்ட உடலை பிரேத பரிசோதனை செய்ததில் இறந்தவர் சாக்கோ என்பது உறுதிசெய்யப்பட்டது. இதையடுத்து சாக்கோவின் உடல் பாஸ்கர பிள்ளையின் காரில் வந்தது தொடர்பாக மீண்டும் பாஸ்கர பிள்ளையை விசாரித்துள்ளனர். இந்தமுறைதான் உண்மைச் சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

அபுதாபியில் வேலைபார்த்து வந்த சுகுமார குரூப் ஒரு இன்ஷூரன்ஸ் கம்பெனியில் இந்திய மதிப்பில் ரூ.50 லட்சம் மதிப்புடைய ஒரு இன்ஷூரன்ஸ் பாலிசி எடுத்திருந்துள்ளார். இந்தப் பணத்தை முறைகேடாக அடைய எண்ணிய குரூப், அதற்காக திட்டம் தீட்டியுள்ளார். தான் இறந்ததாக இன்ஷூரன்ஸ் கம்பெனியை நம்ப வைத்தால் அந்தப் பணம் மனைவி பெயருக்கு வரும் என்பதை கணக்கு போட்டுள்ளார். இதற்காக இந்தியா திரும்பிய பின் பாஸ்கர பிள்ளை மற்றும் அபுதாபியில் தன்னுடன் வேலை செய்து வந்த சாகு, டாக்ஸி டிரைவர் பொன்னப்பன் ஆகியோரிடம் இந்த திட்டத்தை சொல்லி அவர்களின் உதவியை கேட்டுள்ளார் குரூப்.

தன்னைப் போன்ற தோற்றம் கொண்ட ஒருவரின் இறந்த உடலை கண்டுபிடித்து காண்பிப்பததே முதலில் அவர்களின் பிளானாக இருந்துள்ளது. இதற்காக ஆலப்புழா மருத்துவக் கல்லூரியில் இருந்தும், கல்லறையில் இருந்தும் ஓர் உடலை திருட முயன்றுள்ளனர். அது எதுவும் கைகொடுக்கவில்லை என்பதால், இறுதியாக கொலை செய்யும் திட்டத்தை கையிலெடுத்துள்ளனர். குரூப்பை போல உருவம் கொண்ட ஒருவரை கண்டுபிடித்து கொலை செய்வதற்காக ஆலப்புழா - ஹரிப்பாடு சாலைகளில் இரண்டு நாட்களாக சுற்றி திரிந்துள்ளனர். அப்போதுதான் சாக்கோ அந்த வழியில் உள்ள ஒரு தியேட்டரில் படம் பார்த்துவிட்டு வீடு திரும்ப நின்றிருந்துள்ளார்.

குரூப் சாயலில் இருந்த சாக்கோவை லிப்ட் கொடுப்பது போல் வண்டியில் ஏற்றிச் சென்றுள்ளனர். செல்லும் வழியில் சாக்கோவை கட்டாயப்படுத்தி விஷம் கலந்த மதுவை குடிக்கவைத்துள்ளனர். இதை குடித்து மயங்கி விழவும், ஒரு துணியை வைத்து கழுத்தை இறுக்கி அவரை கொன்றுள்ளனர். பின்னர் சாக்கோவின் உடலை சுகுமார குரூப்பின் வீட்டுக்கு கொண்டு சென்று அவர் அணிந்த உடைகளை கழற்றிவிட்டு குரூப்பின் ஆடைகளை அணிவித்து காரில் வைத்து எரித்துள்ளனர். காரை எரித்தது பாஸ்கர பிள்ளை. எரிக்கும் போது எதிர்பாராதவிதமாக அவரின் கைகளில் தீப்பற்றி காயங்கள் ஏற்பட்டுள்ளது.

இதனை பாஸ்கர பிள்ளை ஒப்புக்கொண்டதோடு, அந்தக் காலத்தில் ஜெர்மனியில் நடந்த ஒரு இன்ஷூரன்ஸ் கொலை பாணியில் இதனை செய்ததாக வாக்குமூலம் கொடுத்தார். இதன்பின் அனைவரையும் கைது செய்தது போலீஸ். ஆனால் சம்பவத்துக்கு காரணமாக, முக்கிய குற்றவாளியான சுகுமார குரூப் மட்டும் கைது செய்யப்படவில்லை. அவர் எங்கே சென்றார் என்பதுகூட இன்றளவும் போலீஸாரால் கண்டுபிடிக்க முடியவில்லை. 37 ஆண்டுகள் ஆகியும் இன்னும் கண்டுபிடிக்க முடியாத தேடப்படும் குற்றவாளியாக இருக்கிறார் சுகுமார குரூப். இன்றளவும் பல மர்மங்கள் நிறைந்த வழக்கமாக கேரள மக்கள் மத்தியில் அறியப்படுவது சுகுமார குரூப் வழக்குதான். பொதுமக்களின் நினைவிலிருந்து ஒருபோதும் மறைந்துவிடாத இந்தக் கதை, துல்கர் சல்மானின் 'குரூப்' திரைப்படத்தின் மூலம் மீண்டும் கவனத்தை ஈர்த்துள்ளது.

- மலையரசு

| தொடர்புடைய செய்தி > "பாதிக்கப்பட்டவர்களின் வலியை வைத்து பணம் சம்பாதிப்பது எங்கள் நோக்கமல்ல" - துல்கர் சல்மான் |

Advertisement:

Advertisement

Advertisement
[X] Close