[X] Close

வாலாஜாபாத் அருகே 500 ஆண்டுகள் பழமையான நடுகல் சிற்பம் கண்டுபிடிப்பு

தமிழ்நாடு

500-year-old-sculpture-found-near-Walajabad

காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் வட்டத்திலுள்ளது பழைய சீவரம் என்ற கிராமம். இக்கிராமத்தில் 500 ஆண்டுகளுக்கு முற்பட்ட விஜயநகர மன்னர் காலத்தை சார்ந்த குறுநில மன்னர் ஒருவரின் மெய்க்காப்பாளர்கள் இருவர், போரில் அம்மன்னரின் உயிரைக் காக்க சண்டையிட்டு வீர மரணமடைந்துள்ளனர். அவ்விரண்டு வீரர்களின் நினைவாக எழுப்பப்பட்ட நடுகல் ஒன்று துண்டு கல்வெட்டுக்களுடன் உடைந்த நிலையில் புதர்களுக்கு இடையில் தற்போது கண்டறியப்பட்டுள்ளது. இதை உத்தரமேரூர் ஆய்வு மையத்தின் தலைவர் கொற்றவை ஆதன் கண்டறிந்துள்ளார்.

இது குறித்து உத்திரமேரூர் வரலாற்று ஆய்வு மைய தலைவர் கொற்றவை ஆதன் கூறுகையில், “காஞ்சிபுரத்திலிருந்து செங்கல்பட்டு செல்லும் சாலையில் பாலாறு, செய்யாறு, வேகவதி ஆறு என்று மூன்று ஆறுகள் சங்கமிக்கும் திருமுக்கூடல் அருகில் பாலாற்றங்கரையில் உள்ள கிராமம் பழைய சீவரம். இக்கிராமத்தில் புகழ்பெற்ற லட்சுமி நரசிம்மர் ஆலயம் உள்ளது. இவ்வாலயத்தில் 11ஆம் நூற்றாண்டை சார்ந்த முதலாம் குலோத்துங்கன் கல்வெட்டு உள்ளது. அப்போது இவ்வூருக்கு சீயபுரம் என்று பெயர் இருந்ததாக கல்வெட்டுக் குறிப்புகள் கூறுகிறது.

image


Advertisement

இங்கிருந்த ஆநிறைக்கூட்டங்கள் எனப்படும் கால்நடை தங்கவைக்கப்படும் கூடங்களில் தன் இனத்தையோ ஊரையோ நாட்டையோ மண்னையோ மன்னனையோ காக்கும்பொழுது நடைபெறும் போர்களில் சண்டையிட்டு வீரமரணம் அடைந்தால் இறந்த அவ்வீரர்களின் நினைவைப் போற்றும் வகையில் அவர்களின் உருவத்தை ஒரு கல்லில் பொறித்து நட்டுவைத்து அதை போற்றி வழிபடும் வழக்கம் இருந்துள்ளது. இதற்கு நடுகல் வழிபாடு என்று பெயர்.

இதையும் படிங்க... எளியோரின் வலிமைக் கதைகள் 1 - "நாங்க உயிரா வடிக்கிறது பொம்மை இல்லைங்க... மரச்சிற்பங்கள்!"

நாங்கள் கண்டெடுத்த இந்த நடுகல், புகழ்பெற்ற லட்சுமி நரசிம்மர் ஆலயத்திற்கு செல்லும் வழியில் புதர்களுக்கு இடையே இருந்து கிடைத்தது. 2 அடி அகலம், 6 அடி நீளம் கொண்ட இந்த பலகை கல்லில் 6 வரிகள் கொண்ட துண்டு கல்வெட்டும், அதன் கீழ் இரண்டு வீரர்களின் உருவமும் இடம்பெற்றுள்ளது. இந்த நடுக்கல்லின் ஆரம்பம் சற்று சிதைந்தும் வலப்பகுதி முழுமையாக உடைந்தும் உள்ளதால் முழுமையான கல்வெட்டுகள் இல்லை. முழு பகுதி கிடைக்காமல் துண்டாக கிடைத்துள்ளது. கல்வெட்டில் முதல் வீரனினது வலக்கையில் வளைந்த நிலையில் குறுவால் போன்ற ஆயுதமும் இடது கையைமடித்து நீண்ட ஈட்டியை பிடித்த நிலையிலும் வலது பக்கம் நோக்கி கால்கள் செல்லும் நிலையில் உள்ளது. இவரது தலையில் கொண்டையும் கைமணிக்கட்டில் வளையங்களும் இடுப்பில் அழகிய வேலைப்பாடுகள் நிறைந்த அரை ஆடையும் அதில் குறுவால் உரையும் காண்பிக்கப்பட்டுள்ளது. இரண்டாவதாக உள்ள வீரனின் இடக்கையில் நீண்ட நானுடன் கூடிய வில்லை ஏந்தியும் வலக்கையில் அழகிய வேலைப்பாடு நிறைந்த கைப்பிடி கொண்ட அம்பையும் ஏந்திய நிலையிலும், அவரது தலையில் கொண்டையும் கை மணிக்கட்டில் காப்பு வளையமும் இடையில் அழகிய வேலைப்பாடுகள் நிறைந்த முட்டி வரை உள்ள அரை ஆடையும் இடுப்பில் உறையுடன் கூடிய குறுவாளும், கால்கள் சற்று வளைந்து வலது பக்கமாக முதல் வீரனை பின்தொடர்ந்து செல்லும் நிலையிலும் உள்ளார்.


Advertisement

image

இவர்களது தலைப் பகுதிக்கு மேலே 6 வரிகள் உள்ள துண்டு கல்வெட்டு வாசகம் உள்ளது. அவை - ஸ்ரீ மது - உடையார் - மஹாமண் - விபாடன்மோ - டையாருடன் - பாதுகாப்பாக என்று உள்ளது மற்ற எழுத்துக்கள் சிதைந்து படிக்க இயலாத நிலையில் உள்ளது. இவ்வரிகளை கொண்டு விஜயநகர மன்னர் காலத்தில் அவரது ஆட்சியின் கீழ் இருந்த குறுநில மன்னர் ஒருவரின் பாதுகாப்பிற்க்காக இருந்த மெய்க்காப்பாளர்கள் இருவர் போரில் குறுநில மன்னரின் உயிரைக் காக்க வீரமரணம் அடைந்துள்ளார்கள் என்பதையும், அவர்களின் நினைவைப் போற்றும் வகையில் இந்த நடுகல் உள்ளது என்பதையும் நம்மால் அறிய முடிகிறது. உடையாமல் முழு கல்வெட்டுடன் கூடிய நடுகல் கிடைத்திருந்தால் எந்த ஆண்டு எப்பொழுது யாருக்காக எந்த போரில் எந்த இடத்தில் இந்த வீரர்கள் மாண்டார்கள் என்ற விவரம் முழுமையாக கிடைத்திருக்கும். உடைந்த நிலையில் காணப்படுவதால் முழு தகவலை அறிய இயலவில்லை இந்த நடுகல்லின் கல்வெட்டுகளை படித்து ஆராய்ந்து கிருஷ்ணகிரி அரசு அருங்காட்சியக காப்பாட்சியர் கோவிந்தராஜ் அவர்களும் மேற்கண்ட செய்தியை உறுதி செய்துள்ளார்கள்.

இப்படி கடந்த கால வரலாற்றை நிகழ்கால சமுதாயத்திற்கு பறைசாற்றிக் கொண்டிருக்கும் இந்த அறிய வரலாற்று ஆவணம் யாரும் கவனிப்பாரின்றி கேட்பாரின்றி அழியும் தருவாயில் புதர்களுக்கு இடையில் புதைந்து மறையும் அபாய நிலையில் உள்ளது எனவே தொல்லியல் துறையினர் உடனடியாக கவனம் செலுத்தி அதைப் பாதுகாத்து திட நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும்” என்றார்.


Advertisement

Advertisement
[X] Close