Published : 17,Oct 2021 12:09 PM
சென்னை மெரினா: பராமரிப்பின்றி கிடக்கும் ஜெயலலிதா சிலை வளாகம் - அதிமுகவினர் குற்றச்சாட்டு

சென்னை மெரினா கடற்கரை சாலையில், மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் சிலை அமைந்துள்ள வளாகம் பராமரிப்பின்றி இருப்பதாக அதிமுகவினர் குற்றம் சாட்டியுள்ளனர்.
காமராஜர் சாலையில் உள்ள தமிழ்நாடு மாநில உயர்க்கல்வி மன்ற வளாகத்தில், ஜெயலலிதாவின் சிலை வைக்கப்பட்டுள்ளது. அதிமுகவின் பொன்விழாவையொட்டி, ஜெயலலிதா சிலைக்கு அதிமுகவினர், மாலை அணிவிக்கச் சென்றனர். அனுமதி ஏதும் பெறாமல், அங்கிருந்த இரும்பு கேட்டை திறந்து, சிலைக்கு அதிமுகவினர் மாலை அணிவித்தனர். இந்நிலையில், அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக ஜெயலலிதா சிலை வளாகத்தை பராமரிக்காமல் இருப்பதாகவும், இது அவமரியாதை செய்யும் நடவடிக்கை எனவும் அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குற்றம்சாட்டியுள்ளார். சிலையை அரசால் பராமரிக்க முடியவில்லை எனில், அதிமுகவிடம் கொடுத்துவிடலாம் எனவும் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.