[X] Close

'தேசிய அரசியலில் மாற்று சக்தி' - 6 மாநில தேர்தல்களில் தடம் பதிக்கும் முனைப்பில் ஆம் ஆத்மி!

சிறப்புக் களம்

AAP-move-for-upcoming-6-state-elections

காங்கிரஸின் பலவீனத்தால் காலியாக இருக்கும் தேசிய அளவிலான எதிர்க்கட்சி அந்தஸ்தை கைப்பற்றும் முனைப்பிலும், பாஜகவின் கோட்டைகளைத் தகர்க்கும் நோக்கிலும் வட இந்திய மாநிலங்களில் அரவிந்த் கேஜ்ரிவாலின் 'ஆம் ஆத்மி' கட்சி செலுத்திவரும் கவனம் குறித்து விரிவாகப் பார்ப்போம்.

தேசிய அரசியலை உன்னிப்பாக கவனித்து வருபவர்கள் யாரும் 2020 பிப்ரவரியை அவ்வளவு எளிதில் மறந்துவிட மாட்டார்கள். இந்தியாவை இரண்டாம் முறையாக அறுதிபெரும்பான்மையோடு கைப்பற்றியிருந்த பாஜகவை, அடுத்த 8 மாத காலத்திற்குள் இந்தியாவின் ஆன்மாவான டெல்லி தேர்தலில் மரண அடி கொடுத்தது அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி. அப்போது மட்டுமல்ல, கடந்த மூன்று தேர்தல்களாக பாஜகவை டெல்லியில் ஓரங்கட்டியே வருகிறது ஆம் ஆத்மி. இப்போது டெல்லியை தாண்டியை தனது எல்லைகளை தீவிரப்படுத்துவதில் கவனம் செலுத்த தொடங்கியுள்ளது.

குறிப்பாக, வட மாநிலங்களில் தனது இருப்பை கொஞ்சம் கொஞ்சமாக வலுப்படுத்தத் தொடங்கியுள்ளது. டெல்லியை தொடர்ந்து பாஜகவுக்கு எதிரான வலுவான எதிர்க்கட்சியாக வர வேண்டும் என்ற முனைப்பில் தீவிரம் காட்டி வரும் ஆம் ஆத்மி இதற்காக தற்போது உற்றுநோக்கியிருப்பது அடுத்த ஆண்டு நடக்கவிருக்கும் 6 மாநில தேர்தல்கள். பஞ்சாப், உத்தரப் பிரதேசம், உத்தராகண்ட், கோவா, மணிப்பூர் மாநிலங்களுக்கு அடுத்த ஆண்டு பிப்ரவரி, மார்ச்சில் இமாச்சலப் பிரதேசம், குஜராத் மாநிலங்களுக்கு அக்டோபர், டிசம்பரிலும் தேர்தல் நடக்கவிருக்கிறது.


Advertisement

இந்தத் தேர்தல்களை தனக்கான களமாக பயன்படுத்திக் கொள்ள நினைக்கும் ஆம் ஆத்மி, அதற்காக உத்தரப் பிரதேசம், பஞ்சாப், உத்தராகண்ட், குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் தனித்துப் போட்டி என்ற அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறது.

image

பஞ்சாப் தேர்தல்: டெல்லி எப்படி ஆம் ஆத்மியின் கோட்டையாக இருக்கிறதோ, அதேபோல் பஞ்சாப்பையும் மாற்றி ஆட்சியை பிடிக்க தீவிரமாக களமாடி வருகிறார் அரவிந்த் கெஜ்ரிவால். அதற்கு முக்கியக் காரணம், கடந்த சில ஆண்டுகளாக ஆம் ஆத்மி பெற்றிருக்கும் வளர்ச்சி. 2014 நாடாளுமன்றத் தேர்தலில் நாடு முழுவதும் மோடி அலை வீசிக்கொண்டிருப்பதாக சொல்லப்பட பஞ்சாப்பில் சத்தம் இல்லாமல் நான்கு தொகுதிகளை வென்று கால்பதித்தது ஆம் ஆத்மி. அடுத்து 2017 பஞ்சாப் சட்டப்பேரவைத் தேர்தல். ஆம் ஆத்மி பஞ்சாப்பில் எதிர்கொள்ளும் முதல் சட்டப்பேரவைத் தேர்தல் இது. நாடாளுமன்றத் தேர்தலில் பெற்றது போல், ஆம் ஆத்மி வெற்றிபெற்றுவிடாது என எல்லோரும் நினைத்துக்கொண்டிருக்க, அதற்கு மாறாக மாநிலத்தின் பிரதான எதிர்க்கட்சி அந்தஸ்த்தை பெற்றது.

அப்போதே பஞ்சாப்பின் எதிர்காலம் ஆம் ஆத்மி என்று உரக்கச் சொன்னார் கெஜ்ரிவால். இப்போது அதனை செயல்படுத்தும் வேலைகளிலும் இறங்கியுள்ளார். தற்போது பஞ்சாப் காங்கிரஸுக்குள் நிலவி வரும் கோஷ்டி சண்டை, வேளாண் சட்டங்களால் பாஜக மீது பஞ்சாப் மக்கள் மீது எழுந்துள்ள கடும் எதிர்ப்பலை ஆகியவை ஆம் ஆத்மிக்கு தேர்தல் களத்தை சாதகமாக்கி வருகிறது. அதற்கேற்ப கருத்துகணிப்பு முடிவுகளும் `ஆம் ஆத்மி ஆட்சி'யை உறுதிப்படுத்துகிறது.

இதனால், காங்கிரஸ் ஆட்சியில் இருக்கும் மின்வெட்டு போன்ற குறைபாடுகளை பயன்படுத்தி 300 யூனிட் வரை இலவச மின்சாரம், அதோடு துணை முதல்வராக பட்டியிலன பிரதிநிதி என்பது போன்ற வாக்குறுதிகளையும் கொடுத்து மக்களை கவரத் தொடங்கியுள்ளார் கெஜ்ரிவால்.

image

ஆம் ஆத்மி முன்னால் இருக்கும் தற்போதைய முக்கியப் பிரச்னை, அதன் முதல்வர் வேட்பாளர்தான். கடந்த முறையே முதல்வர் வேட்பாளரை அறிவிக்காமல் தேர்தலுக்குச் சென்றதால் கூடுதல் இடங்கள் கிடைப்பது கிடைக்காமல் போனது. இந்தமுறை அந்த தவறைச் செய்யாமல் இருக்க நினைக்கும் ஆம் ஆத்மி, முதல்வர் வேட்பாளருக்கான தேடலில் இறங்கியிருக்கிறது. முதல்வர் வேட்பாளராக சோனு சூட்டை நியமிக்க ஆம் ஆத்மி முயன்று வருவதாக சொல்லப்படுகிறது. சோனு சூட் பஞ்சாப் மண்ணின் மைந்தன். மேலும் கொரோனா காலத்தில் அவர் ஆற்றிய உதவி பஞ்சாப்பை தாண்டி இந்தியா முழுவதும் அவருக்கான மதிப்பை அதிகரித்தது. இதனை தனக்கு சாதகமாக்கி அவரை முதல்வர் வேட்பாளராக்க முயற்சித்து வருவதாக சொல்லப்படுகிறது.

உத்தராகண்ட்: இங்கு பாஜக vs காங்கிரஸ் தான் நேரடி போட்டி என்றாலும், சமீப காலங்களில் ஆம் ஆத்மிக்கு இங்கு ஏற்பட்டுள்ள செல்வாக்கு கவனிக்கத்தக்கவையாக மாறியிருக்கிறது. கடந்த சில ஆண்டுகளாக இங்கு ஆக்டிவாக இருக்கும் ஆம் ஆத்மி பாஜக, காங்கிரஸ் என இரு கட்சிகளுக்கும் டஃப் கொடுக்க வேண்டும் என்று இறங்கியுள்ளது. உத்தராகண்ட் சட்டப்பேரவையில் முதல்முறையாக கால்பதிக்கும் போதே எதிர்க்கட்சி அந்தஸ்தில் நுழைய வேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டு பணியை தொடங்கியதுள்ளது. அந்த வகையில் மற்ற கட்சிகளுக்கு முன்னதாகவே, முதல்வர் வேட்பாளரை அறிவித்துள்ள அந்தக் கட்சி, யாரும் எதிர்பாராத வகையில் முன்னாள் ராணுவ வீரர் அஜய் கொத்ரியால் என்பவரை முதல்வர் வேட்பாளராக்கியுள்ளது.

டெல்லியில் வெற்றிபெற உதவிய தனது வெற்றி வாக்குறுதியான, ``மாதந்தோறும் 300 யூனிட் இலவச மின்சாரம், கடன் தள்ளுபடி" ஆகியவற்றுடன் ஒவ்வொரு குடும்பத்துக்கும் ஓர் அரசு வேலை, வேலையில்லாத இளைஞர்களுக்கு மாதம் ரூ.5000 போன்ற அறிவிப்புகளையும் வெளியிட்டு வரவேற்பை பெற்றுவருகிறது. மேலும், நாளை முதல், மாநிலம் முழுவதும் 'வேலை உத்தரவாத யாத்திரை' என்ற பெயரில் பிரமாண்ட யாத்திரைகளை நடத்த உள்ளது.

குஜராத் தேர்தல்: மோடி மற்றும் அமித் ஷாவை எதிர்க்க, மற்ற மாநிலங்களை காட்டிலும் அவர்களின் சொந்த மாநிலமான குஜராத் தேர்தலை தங்களின் கௌரவமாக பார்க்கத் தொடங்கியிருக்கிறது. குஜராத்தில் ஆட்சியையோ, எதிர்க்கட்சி அந்தஸ்த்தையோ கைப்பற்ற முடியாது என்பது ஆம் ஆத்மிக்கு நன்றாகவே தெரியும். ஆனால், இந்தத் தேர்தலில் குறிப்பிட்ட வாக்குவங்கியை கைப்பற்ற தனது முயற்சியை மேற்கொள்ளவிருக்கிறது. அதற்கு நம்பிக்கை அளித்தது கடந்த பிப்ரவரி மாதம் நடந்த குஜராத் உள்ளாட்சித் தேர்தல்.

உள்ளாட்சித் தேர்தலில் மற்ற பகுதிகளில் வெல்ல முடியாவிட்டாலும், பாஜகவின் கோட்டையாக இருக்கும் சூரத்தில் வலுவாக தனது இருப்பை உணர்த்தியிருக்கிறது ஆம் ஆத்மி. 120 இடங்களைக் கொண்ட சூரத்தில் 27 இடங்களைக் கைப்பற்றி இரண்டாம் இடம் பிடித்தது. இதில் பாஜக முதலிடம். பாஜகவின் கோட்டைக்குள் நுழைந்த சந்தோஷத்திலும், நம்பிக்கையிலும் நடக்கவிருக்கும் சட்டமன்ற தேர்தலில் வலுவான வாக்குவங்கியை வாங்கிவிட வேண்டும் என்று கணக்கு போடுகிறது ஆம் ஆத்மி.

அதற்கேற்ப, குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலில் 182 தொகுதிகளிலும் ஆம் ஆத்மி கட்சி தனித்துப் போட்டி என்று அறிவித்துள்ள கெஜ்ரிவால், அரசியல் ரீதியாக குஜராத் பாஜகவுக்கு குடைச்சல் கொடுத்து வருகிறார். சமீபத்தில் முதல்வர் விஜய் ரூபானியை மாற்றியதில் ஆம் ஆத்மி முக்கிய பங்கு வகித்தது. இதேபோல் சூரத் கோவில் உடைப்பு சம்பவம், மாநிலத்தின் தண்ணீர் பிரச்னை உள்ளிட்ட விஷயங்களிலும் போர்க்கொடி உயர்த்தி வருகிறது. இது மக்கள் மத்தியில் கவனத்தையும் ஏற்படுத்தி வருகிறது.

image

உத்தரப் பிரதேச தேர்தல்: உத்தரப் பிரதேச தேர்தலில் 403 தொகுதிகளிலும் தனித்து களம் காணும் அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி, அதற்காக 100 பேர் அடங்கிய முதல்கட்ட வேட்பாளர்களை வெளியிட்டு பிரசாரம் செய்து வருகிறது. அப்படித்தான் முதல் கட்சியாக ஆம் ஆத்மி, இலவச மின்சாரம் அறிவிப்பை கையிலெடுத்தது.

செப்டம்பர் 16 அன்று லக்னோ வந்த டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா, ஆம் ஆத்மி அரசு வெற்றி பெற்றால், ஒவ்வொரு வீட்டுக்கும் 300 யூனிட் மின்சாரம் மாதந்தோறும் இலவசமாக வழங்கப்படும் என்றும், விவசாயிகள் தங்களின் விவசாயத்திற்காக வரம்பற்ற இலவச மின்சாரம் பெறுவார்கள் என்றும் அறிவித்தார். மேலும் நிலுவையில் உள்ள 3.8 மில்லியன் மின்சார கட்டணங்கள் ஆம் ஆத்மி அரசு வெற்றி பெற்றால், ரத்து செய்யப்படுவதுடன் மாநிலத்தில் 24 மணிநேரம் தடையற்ற மின்சாரம் கிடைக்க வழிவகை செய்யப்படும் என்ற உறுதிமொழியை வழங்கினார்.

டெல்லியை ஒட்டியுள்ள உத்தரப் பிரதேச பகுதிகளில் ஆம் ஆத்மி தீவிர கவனம் செலுத்த தொடங்கியிருக்கிறது. விவசாயிகள் போராட்டத்துக்கு அளித்துவரும் ஆதரவு காரணமாக மேற்கு உத்தரப் பிரதேச மக்கள் ஆதரவளிப்பாளர்கள் என்ற நம்பிக்கையுடன் களமிறங்கியுள்ளது.

கோவா தேர்தல்: இந்தியாவின் மிகச் சிறிய மாநிலமான கோவாவில் சில மாதங்களுக்கு முன்பு நடந்த உள்ளாட்சித் தேர்தல் மூலமாக தனது வருகையை பதிவு செய்துள்ளது. உள்ளாட்சித் தேர்தலில் ஒரு இடத்தில் வென்றது ஆம் ஆத்மி. இந்த வெற்றியை வெகுவாக வரவேற்ற கெஜ்ரிவால், "ஓர் இடம் என்று இதை குறைத்து மதிப்பிட போவதில்லை. இது ஆரம்பம்தான். கோவா மக்களின் நம்பிக்கைக்கு ஏற்ப ஆம் ஆத்மி செயல்படும்" என்றுள்ளார். அங்கும் வரவிருக்கும் தேர்தலை கணக்கில் கொண்டு தங்களது மின்சார வாக்குறுதி யுக்தியை அறிவித்து இருக்கிறார்.

இந்திய அளவில் தற்போது காங்கிரஸ் அடைந்திருக்கும் பலவீனம் காரணமாக, பாஜகவை எதிர்க்க வலுவான கட்சி இல்லை என்று பேசப்படும்ந் இலையில், அந்த இடத்தை நிரப்பி, தேசிய அளவில் தடம் பதிக்க ஆம் ஆத்மி முனைப்பு காட்டுகிறது. டெல்லியைத் தாண்டி மற்ற மாநிலங்களில் கிடைத்து வரும் வரவேற்பை பயன்படுத்தி தேசிய கட்சியாக வளர நினைக்கிறது. அதன் எதிரொலியே ஆறு மாநிலத் தேர்தல்களில் போட்டி. ஆனால், ஆம் ஆத்மியின் ஆசை நிறைவேறுமா, இந்திய அளவில் பெரிய தேசிய கட்சியாக வளருமா என்பதை அடுத்த ஆண்டு நடக்கவிருக்கும் தேர்தல்களே வெளிப்படுத்தும்.

- மலையரசு

தேர்தல் களம்: பாஜக Vs காங்கிரஸ் @ கோவா... - இந்தியாவின் மிகச் சிறிய மாநிலத்தில் கடும் போட்டி ஏன்?

Advertisement:

Advertisement

Advertisement
[X] Close