’பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில் கடைசிவரை இல்லையே என வருத்தம்தான்: நடிகை ஷீலா சிறப்பு பேட்டி

’பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில் கடைசிவரை இல்லையே என வருத்தம்தான்: நடிகை ஷீலா சிறப்பு பேட்டி
’பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில் கடைசிவரை இல்லையே என வருத்தம்தான்: நடிகை ஷீலா சிறப்பு பேட்டி

‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில் நான்கு அண்ணன் தம்பிகளின் பாச அம்மா லட்சுமியாக நடித்து இதயத்தில் இடம்பிடித்தவர், நடிகர் விக்ராந்தின் அம்மாவும் நடிகர் விஜய்யின் சித்தியுமான ஷீலா. கடந்த மூன்று ஆண்டுகளாக ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியலில் திடீரென்று லட்சுமி கதாப்பாத்திரம் இறந்ததாக காண்பிக்கப்பட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக நடிகை ஷீலாவிடமே தொடர்புகொண்டு கேட்டோம்…

’பாண்டியன் ஸ்டோர்’ சீரியலில் உங்கள் பகுதி நிறைவடைந்திருக்கிறதே?

” ‘உங்கள் கதாபாத்திரம் நிறைவுவடையப் போகிறது. முடிக்கிற மாதிரி சூழ்நிலை வந்துடுச்சி’ன்னு இயக்குநர் சொன்னார். நானும் ஓகே சொல்லிவிட்டேன். மூன்று வருடமாக இந்த சீரியலில் பணியாற்றியுள்ளேன். இவ்வளவு நாள் இருந்துவிட்டு சீரியல் முடியும் வரை பணியாற்ற முடியவில்லையே என்ற வருத்தம்தான் எனக்குள் இருக்கிறதே தவிர, இறந்தது போன்று நடித்ததற்கெல்லாம் நான் வருத்தப்படவில்லை. கதைக்கு தேவைப்பட்டதால் பண்ணோம். எல்லாமே நடிப்புதானே? எத்தனையோ சீரியலில் நடித்துவிட்டேன். ஆனால், எனக்கு நல்ல பேர் வாங்கிக்கொடுத்தது பாண்டியன் ஸ்டோர்ஸ்தான்”.

நீங்க மிஸ் பண்றதா நினைக்கிற விஷயம் என்ன?

”உண்மையை சொல்லவேண்டும் என்றால் சீரியலில் எப்படியோ அப்படித்தான் நிஜத்திலும் நாங்கள் எல்லோரும் ஒற்றுமையாக சந்தோஷமாக இருப்போம். உண்மையான அம்மா பிள்ளைங்க மாதிரிதான் நடந்துகொள்வோம். சீரியலில் நடிக்கும் பிள்ளைகள் மட்டுமல்லாமல் பாண்டியன் ஸ்டோர்ஸ் மொத்த யூனிட்டே என்னை அம்மான்னுதான் அழைக்கும். வீட்டிலிருந்து சாப்பாடு எடுத்துக்கொண்டு வந்தால்கூட அதனை எல்லோரும் ஷேர் செய்துதான் சாப்பிடுவோம். மாதத்தில் முதல் 15 நாட்கள் ஷூட்டிங் இருக்கும். காலையில் போய் இரவுதான் வருவோம். இனி அந்த சந்தோஷமான நாட்கள் திரும்பக் கிடைக்குமா என்பது தெரியவில்லை. என்னோட பாண்டியன் ஸ்டோர் குடும்பத்தைதான் ரொம்ப மிஸ் பண்ணுவேன்”.

உங்களின் இறப்பு நிகழ்வை இத்தனை நாள் காட்டினார்களே? அந்தக் காட்சியில் நடித்த அனுபவம் குறித்து?

”இறப்பு சம்பவக் காட்சிகளை விரிவாக எடுத்ததால்தான் பெரிய ரீச் ஆகிருக்கு. இந்தக் கதையே நேட்டிவிட்டி சம்மந்தப்பட்டது. அதனால், தெளிவாக எடுத்தால் சிறப்பாக வரும் என்று பண்ணார்கள். கொள்ளிக்கட்டை வைத்தது, முகத்தில் வறட்டி வைத்தது எல்லாமே உண்மைதான். யாரும் பண்ணாததை நான் பண்ணிவிடவில்லை. இறப்பு காட்சிகள் மட்டுமே 10 நாட்கள் வரை எடுத்தார்கள். பாடையில் படுத்திருந்ததை மட்டுமே ஒருநாள் எடுத்தார்கள். மாலையெல்லாம் போட்டு படுத்திருந்தது கொஞ்சம் வெய்ட்டாகத்தான் இருந்தது. அதோடு, வெயில் கொஞ்சம் அதிகமாக இருந்ததால் சிரமமாக தெரிந்தாலும் நடிப்பு என்பதால் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. சீரியலில் எனது கடைசி நாளில் எல்லோரும் போட்டோ எடுத்துக்கிட்டோம். பசங்க எல்லாம் வந்து ஆசிர்வாதம் வாங்கினார்கள். சிலர் கண் கலங்கினார்கள். சிலர் டல்லாகிட்டாங்க. அந்தளவிற்கு நாங்கள் குடும்பமாகவே வாழ்ந்தோம்”.

இறந்த மாதிரியே படுத்திருந்ததில் டேக் வாங்கினீர்களா?

”இல்லவே இல்லை. எல்லாம் சிங்கிள் ஷாட்தான். நான் மட்டுமில்லை. பாண்டியன் ஸ்டோர்ஸ் ஆர்டிஸ்ட் எல்லோரும் எப்பவுமே டேக் வாங்கமாட்டோம். எல்லோரும் சிங்கிள் டேக் ஆர்டிஸ்ட்தான். அப்படியே ஷூட்டிங் போய்ட்டே இருக்கும்”.

டிஆர்பி ரேட்டிங்கிறாகத்தான் உங்களை இறப்பதுபோல் காட்டி உங்கள் பகுதியை நிறைவு செய்துள்ளார்கள் என்றும் சொல்லப்படுகிறதே?

”அதற்கும் இதற்கும் சம்மந்தமில்லை. அப்போ இவ்வளவு நாள் பணியாற்றிள்ளதற்கு என்ன சொல்கிறீர்கள்? பாண்டியன் ஸ்டோர்ஸ் டிஆர்பி சூப்பரா நல்லாதானே இருக்கு”.

உங்க அடுத்த சீரியல் என்ன?

”அடுத்தும் விஜய் டிவிதான். அடுத்த மாதத்தில் தொடங்கும் புதிய சீரியலில் ஹீரோயின் அம்மாவாக நடிக்கிறேன்”.

உங்கள் காட்சிகளை நிறைவு செய்ததற்கு சமூக வலைதளங்களில் எதிர்ப்பு கிளம்பியுள்ளதை பார்த்தீர்களா?

“அதையெல்லாம் பார்க்கவில்லை. பாண்டியன் ஸ்டோர்ஸில் நடித்தப்பிறகு நான் வெளியில் எங்கும் செல்லவில்லை. ஆனால், போனில் நிறைய பேர் வருத்தப்பட்டார்கள். ஏன் இறந்தமாதிரி நடிச்சீங்கன்னு அழுதார்கள்”

ஒரு சித்தியாக விஜய்யிடம் பிடித்த விஷயம்?

“எல்லோர் குடும்பம் மாதிரிதான் எங்கள் குடும்பமும். விஜய் கிட்ட பிடித்த விஷயம் அவரது அமைதிதான். எப்போதும் அமைதியாக இருப்பார். அதேசமயம் ரொம்ப அன்பா பழகுவார். என் சமையலில் விஜய்க்கு மட்டன் பிரியாணி, சிக்கன் பிரியாணி ரொம்ப பிடிக்கும். விரும்பி சாப்பிடுவார். எல்லோரும் பிஸியாக இருப்பதால் அடிக்கடி சந்திக்கமாட்டோம். குடும்ப விழாக்கள் போன்றவற்றில் சந்தித்துக்கொள்வோம். ஷோபா அக்காவும் நானும் ஃப்ரண்ட்ஸ் மாதிரி. எல்லா அக்கா தங்கைகள் மாதிரிதான் நாங்களும் நெருக்கமாக இருப்போம். அடிக்கடி சந்தித்துக்கொள்வோம். அக்கா எனக்கு ரொம்ப சப்போர்ட் செய்வார்.

நீங்கள் சீரியலில் இப்படி நடித்தற்கு என்ன சொன்னார் ஷோபா?

”அவங்களும் ’உன்னை இறந்தமாதிரி பார்க்க ரொம்ப கஷ்டமா இருந்துச்சி’ என்றார்.

விக்ராந்த் பிக்பாஸில் கலந்துகொள்ளாமல் சர்வைவர் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதால்தான் உங்கள் பகுதிகளை நிறைவு செய்ததாக சொல்லப்படுகிறதே?

”விஜய் டிவி அப்படி கிடையாது. விஜய் டிவியை பொறுத்தவரை பணிகள் கொடுத்துக்கொண்டே இருப்பார்கள். விஜய் டிவி குடும்ப உறுப்பினராக இருப்பதில் பெருமைப்படுகிறேன். இப்படி வெளிவரும் தகவல்கள் எல்லாமே வதந்திதான். அப்படி இருந்தால் விஜய் டிவி அடுத்த சீரியலில் எனக்கு நடிக்க வாய்ப்பு கொடுப்பார்களா? அதுவும், எனது பகுதி நிறைவடைவதற்கு முன்னரே உடனடியாக கொடுப்பார்களா?”.

’பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் கூட்டுக் குடும்பமாக இருக்கிறீர்களே? நிஜத்தில் எப்படி?

“எனக்கு இரண்டு மகன்கள். எங்கக் குடும்பத்துல திருமணம் ஆனாலே தனிக்குடும்பமாக வைத்துவிடுவோம். அதனால், மகன்கள் தனித்தனியாகத்தான் வசிக்கிறார்கள். ஆனாலும், அடிக்கடி பேசிக்கொள்வோம். வாரத்திற்கு ஒருமுறை சந்தித்துக்கொள்வோம்.

நடிகர் விக்ராந்த் அதிகப் படங்களில் நடிப்பதில்லையே?

”வருடத்திற்கு 3 படங்கள் பண்ணிட்டிருக்கார். இதுக்குமேல பெரிய இடத்திற்குச் செல்ல அவருக்கு நல்ல நேரம் வரும். எல்லாம் சேர்ந்து வரும்போது நிச்சயம் நடக்கும்”

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com