[X] Close

பி.சி.ஓ.எஸ். பெண்கள் அறியாததும், அறிய வேண்டியதும்... விழிப்புணர்வு மாத சிறப்பு பகிர்வு

சிறப்புக் களம்,ஹெல்த்

PCOS-Awareness-Month-2021--Doctors-Debunks-Myths-about-PCOS

இன்றைய இளம்பெண்களின் மிகப்பெரிய பிரச்னை பி.சி.ஓ.எஸ். எனப்படும் சினைப்பை நீர்க்கட்டி. பத்தில் ஒரு பெண், தங்களின் 20 - 30 வயதுக்குள் இந்த பி.சி.ஓ.எஸ். பாதிப்புக்கு உள்ளாவதாக தரவுகள் சொல்கிறது. 12 - 45 வயதுக்குட்பட்ட நேரத்தில் (கிட்டத்தட்ட மாதவிடாய் ஏற்படும் காலம் முழுக்க), 8ல் ஒரு பெண்ணுக்கு இந்த பாதிப்பு ஏற்படுவதாகவும் சொல்லப்படுகிறது. பி.சி.ஓ.எஸ். என்பது, ஹார்மோன் குறைபாடு - உடல் பருமன் - மாதவிடாய் சுழற்சியில் சிக்கல் - கருத்தரித்தலில் சிக்கல் போன்ற பல பிரச்னைகளை ஏற்படுத்தவல்லது. இத்தகைய பிரச்னை, நவீன பெண்கள் எதிர்கொள்ளும் சாதாரண பிரச்னையாக மாறியது எப்படி? இதை குணப்படுத்த என்ன செய்ய வேண்டும் போன்றவற்றை, இக்கட்டுரை வழியாக தெரிந்துகொள்வோம்.


Advertisement

பி.சி.ஓ.எஸ். என்றால், கருப்பையின் சுவர்கள் போல இருக்கும் சினைப்பைகளில் சிறிது சிறிதாக பல நீர்க்கட்டிகள் உருவாவது. இப்படி அதிக நீர்க்கட்டி உருவாகும்போது, அப்பெண்ணுக்கு கருமுட்டை உருவாவதில் சிக்கல் ஏற்படும். இதனால் மாதவிடாய் சுழற்சி முதல் கருத்தரித்தல் வரை பல பிரச்னைகள் ஏற்படும். கருத்தரித்தல் போன்ற சீரியஸான பிரச்னைகளுக்கும் இந்த பி.சி.ஓ.எஸ். வழிவகுக்கும் என்பதாலேயே, இதைப்பற்றிய நிறைய தவறான தகவல்கள் பெண்கள் மத்தியில் இருக்கிறது. அவற்றையெல்லாம் போக்கும்பொருட்டு, ஒவ்வொரு வருடமும் செப்டம்பர் மாதம் ‘பி.சி.ஓ.எஸ். விழிப்புணர்வு மாதம்’ என்று அனுசரிக்கப்படுகிறது. அதாவது, நடப்பு மாதம். 

image


Advertisement

அந்த வகையில் தற்போது இந்த பாதிப்பு குறித்து நமக்கு விவரிக்கிறார் மகப்பேறு மருத்துவர் வினுதா அருணாச்சலம்.

காரணம்: ஒருவருக்கு பி.சி.ஓ.எஸ். வருவதற்கு மரபு வழி காரணம் (பிசிஓஎஸ் பிரச்னையால் பாதிக்கப்பட்ட பெண்களின் பெண் குழந்தைகளும் இதே பிரச்னையால் பாதிக்கப்பட 50 சதவிகித வாய்ப்புகள் உள்ளதென மருத்துவ ஆய்வுகள் கூறுகின்றன), ஹார்மோன் குறைபாடு, நீரிழிவு சிக்கல் உள்ளிட்ட பல விஷயங்கள் காரணமாக இருக்கும். இருப்பினும் அனைத்தையும்விட மிக முக்கியமான காரணமாக இருப்பது, மோசமான வாழ்க்கைமுறைதான். அந்தவகையில், உடலுழைப்பே இல்லாத பெண்களின் வாழ்வியல்தான் பெரும்பாலும் இந்த பிரச்னைக்குக் காரணமாக இருக்கிறது.

Dr. Vinutha Arunachalam, Gynaecologist and Obstetrician, Infertility  Specialist in Chennai,India | Vaidam.com


Advertisement

இதுதவிர ஒரு குழந்தையின் பெற்றோர்கள் மற்றும் முன்னோர்களுக்கு சர்க்கரை நோய் இருக்கும் பட்சத்தில் அக்குடும்பத்தில் உள்ள பெண் குழந்தைகளுக்கு பிசிஓஎஸ் ஏற்படலாம். இதுவும் கிட்டத்தட்ட ஹார்மோன் குறைபாடுதான். அதாவது, சர்க்கரை நோய்க்கு காரணமான ‘இன்சுலின் ஹார்மோன்’ சுரப்பதில் சிக்கல் ஏற்படும்போது, சினைப்பையில் நீர்க்கட்டி உருவாதல் என்பது நடக்கும் வாய்ப்புகள் அதிகம். மேலும் பெண்ணின் உடலில் இன்சுலின் அளவு சரியாக இல்லையென்றால், சினைப்பையின் செயல்திறன் பாதிக்கப்படும் வாய்ப்பு நிறைய உள்ளது.

அறிகுறிகள்: இந்த பாதிப்பு ஏற்பட்டவர்களுக்கு, எடுத்தவுடன் மாதவிடாயில் சிக்கல் ஏற்பட்டுவிடாது. தொடக்கத்தில் உடலில் சில அறிகுறிகள்தான் தெரியவரும். அவை உடலின் அந்தரங்க பகுதிகளில் அதீத ரோம வளர்ச்சி, முகத்தில் ரோம வளர்ச்சி, உடல் பருமன் / எடை மிக அதிகமாக குறைதல், அதிகளவு தலைமுடி உதிர்தல், ஹார்மோன் சமச்சீரின்மை போன்றவையாகும். இவற்றை முதல் நிலையிலேயே கவனித்து மருத்துவ ஆலோசனை பெற்றுக்கொண்டால், தொடக்கத்திலேயே பிரச்னையை சரிசெய்யலாம். இல்லையெனில், அடுத்தகட்டமாக மாதவிடாயில் சிக்கல் உருவாகும். மாதவிடாய் சிக்கலென்றால், இரண்டு மாதங்களுக்கு மாதவிடாயே இல்லாமல் இருந்து மூன்றாவது மாதம் வருவது. அப்படி வரும் மாதவிடாயும், மிக அதிகப்படியாகவோ அல்லது மிகக்குறைவாகவோ உதிரப்போக்கை ஏற்படுத்தும். இன்னும் சிலருக்கு, ஒரே மாதத்தில் இருமுறை மாதவிடாய் வரலாம். இப்படியாக ஒவ்வொருவருக்கும் மாதவிடாய் சிக்கல் வேறுபடலாம். பிற அறிகுறிகளும்கூட, நபருக்கு நபர் வேறுபடும். எல்லா அறிகுறியுமே ஒருவருக்கு தெரிய வேண்டும் என எந்த விதியும் இல்லை.

image

அறிகுறிகள் அனைத்தையும் உதாசீனப்படுத்தும் பட்சத்தில், சினைப்பையில் நீர்க்கட்டிகள் அதிகமாகி, பக்கவிளைவுகள் அனைத்தும் தீவிர தாக்கத்தை ஏற்படுத்தும். ஆகவே பெண்கள் இவ்விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும்.

சிகிச்சை: இவற்றிலிருந்து ஒருவர் குணமடைய, குறிப்பிட்ட நபரின் அறிகுறிக்கு ஏற்ப சிகிச்சைகள் தரப்படும். ஹார்மோன் பிரச்னைகள் இருந்தாலும், அதற்கேற்ப மருந்து மாத்திரைகள் வழங்கப்படும். பி.சி.ஓ.எஸ். சிகிச்சையை பொறுத்தவரை, மருந்தென்பது இறுதிகட்டத்தில்தான் தரப்படும். அதற்கு முன் அவர்களை ஆரோக்கியமான வாழ்வியலுக்கு பழக்குவோம். ஆரோக்கியமான வாழ்வியலென்றால் ஒழுங்கான தூக்கம், அன்றாடம் உடற்பயிற்சி, இரவில் மொபைல் உபயோகிக்காமை, நல்ல உணவு போன்றவற்றை முக்கியமாக குறிப்பிடுவோம். இவற்றையெல்லாம் பின்பற்றி, உடல் எடையை சீராக (அவரவர் பி.எம்.ஐ. க்கு ஏற்ப) வைத்துக்கொண்டால், பி.சி.ஓ.எஸ். கட்டுக்குள் வந்துவிடும். ஆரோக்கியமான வாழ்வியலை பின்பற்றாமல், வெறும் மாத்திரைகள் மட்டும் சாப்பிடுவது, சரியான வழிமுறை அல்ல. கட்டாயம் இரண்டையும் பின்பற்றுவது, தேவை!

கருத்தரித்தலில் பிரச்னை வருமா? பிரச்னை வருமென்பது மறுப்பதற்கில்லை. பி.சி.ஓ.எஸ். இருந்தால், கருத்தரித்தலின் அடிப்படையான கருமுட்டை உருவாவதிலேயே சிக்கல் ஏற்படும். அதனால் கருத்தரித்தலிலும் சிக்கல் உருவாகும். பெண்கள் குழந்தை பெற்றுக்கொள்ள தயாராகும்போது, இதுபோன்ற சிக்கல்களை நிச்சயம் தெரிந்துகொள்வது அவசியம். அதேநேரம், பி.சி.ஓ.எஸ். இருந்தால் கருத்தரிக்கவே முடியாது என்றில்லை. மருத்துவ ஆலோசனையை முறையாக பின்பற்றினால், நிச்சயம் கருத்தரிக்க முடியும்.

image

மாதவிடாய் சுழற்சியில் சிக்கல் ஏற்பட்டாலே, அது பி.சி.ஓ.எஸ். தானா? இல்லை. மாதவிடாய் சிக்கலுக்கு ஹார்மோன் குறைபாடுகளே முதன்மை காரணமாக இருக்கும். எனவே எல்லா மாதவிடாய் சிக்கலும் பி.சி.ஓ.எஸ். இல்லை. இங்கு நாம் மற்றொரு விஷயத்தையும் புரிந்துக்கொள்ள வேண்டும். குறிப்பிட்ட ஒரு ஹார்மோன் குறைபாடு, கண்டுகொள்ளாமல் விடும்பட்சத்தில் கூடுதல் ஹார்மோன் குறைபாடுகளை ஏற்படுத்த வல்லது. பல ஹார்மோன்களின் சுரப்பில் சிக்கல் ஏற்பட்டால், அதன் விளைவாக பி.சி.ஓ.எஸ். ஏற்படலாம். தொடக்கத்திலேயே அந்த ஹார்மோன் பிரச்னையை சரிசெய்துவிட்டால், பிறவற்றை தவிர்க்கலாம்.

தொடர்புடைய செய்தி: சினைப்பை நீர்க்கட்டிகள் பற்றிய தவறான தகவல்களும், உண்மையும்

இந்த நோயை முழுமையாக குணப்படுத்த முடியுமா? இது முதலில் நோயே இல்லை என்பதை அனைவரும் புரிந்துக்கொள்ள வேண்டும். இதுவொரு குறைபாடு. எந்தவொரு குறைபாட்டையும், முற்றிலுமாக குணப்படுத்த முடியாது. இருப்பினும் முழுமையாக கட்டுப்படுத்தத்தான் முடியும். அதற்கு, ஆரோக்கியமான வாழ்வியல் அவசியப்படுகிறது. பி.சி.ஓ.எஸ் பிரச்னையுள்ளவர்கள் உணவு விஷயத்திலும் அதிக அக்கறை காட்ட வேண்டும். கலோரி மற்றும் சர்க்கரைச்சத்து குறைவான உணவுகள், நார்ச்சத்து மிகுந்த பழங்கள் மற்றும் காய்கறிகளை எடுத்துக்கொள்ள வேண்டும்” என்கிறார்.

பி.சி.ஓ.எஸ். உள்ள பெண்கள் அனைவருமே, மன அழுத்தத்துடன் போராடுவதைக் காணமுடிகிறது. மன அழுத்தம் தவிருங்கள்... நன்கு மூச்சு விடுங்கள்... ஆரோக்கியமான உணவை உட்கொள்ளுங்கள்! இவை அனைத்தையும்விட முக்கியம், அன்றாடம் உடற்பயிற்சி செய்து பழகுங்கள். இவற்றை பின்பற்றினாலேயே, நீங்கள் மாற்றத்தை உணர்வீர்கள்.


Advertisement

Advertisement
[X] Close