Published : 04,Sep 2021 05:41 PM

கடைசி மூச்சிருக்கும்வரை மனிதனுக்காக வாழும் ஜீவன்: நாட்டின மாடுகளின் அவசியம் என்ன?

a-special-story-about-importance-of-country-cows

ஜல்லிக்கட்டுப் போட்டிகளில் இனி நாட்டு இன மாடுகளை மட்டுமே அனுமதிக்க வேண்டும் எனத் தமிழக அரசுக்குச் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. இதுகுறித்து விரிவான தகவல்களைப் பார்க்கலாம்.

ஜல்லிக்கட்டை பாதுகாப்பாக நடத்த பல்வேறு விதிகளை அரசு ஏற்கனவே அறிவித்துள்ளது. இந்நிலையில் ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு, எருது விடுதல், ஊர்மாடு, வடமாடு போன்ற போட்டிகளில், நாட்டு இன மாடுகளை மட்டுமே அனுமதிக்க வேண்டும் எனச் சென்னையைச் சேர்ந்த சேஷன் என்பவர் உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார். நாட்டு மாடுகள் இதற்காக வளர்க்கப்படாததால், அந்த மாடுகளின் இனமே அழிந்துவருவதாகவும், அதனால் வெளிநாடு மற்றும் கலப்பின மாடுகளுக்குத் தடை விதிக்க வேண்டும் என்றும் மனுவில் கோரியிருந்தார்.

image

இந்த வழக்கு நீதிபதிகள் என்.கிருபாகரன், பி.வேல்முருகன் ஆகியோர் அடங்கிய இருவர் அமர்வின் முன் விசாரணைக்கு வந்தது. ஜல்லிக்கட்டு தொடர்பான போராட்டங்களின் போதே, ஜல்லிக்கட்டு போட்டிகள் நாட்டு மாடுகளின் வளர்ப்பையும், பாதுகாப்பையும் உறுதி செய்யும் உந்து சக்தி என்ற கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன. இந்நிலையில், தமிழக வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டிகளில் நாட்டு மாடுகள் மட்டுமே பங்கேற்பதை மாநில அரசு உறுதி செய்ய வேண்டும் என்றும், வெளிநாட்டுக் கலப்பின மாடுகளைப் பயன்படுத்தக்கூடாது என்றும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஜல்லிக்கட்டுப் போட்டிகளுக்கு என 2017ஆம் ஆண்டில் சட்டம் இயற்றப்பட்டதன் காரணமே, புளியங்குளம், உம்பளச்சேரி, மலைமாடு, காங்கேயம் போன்ற நாட்டு மாட்டு இனங்களைக் காப்பதுதான் என நீதிபதிகள் கருத்து தெரிவித்திருக்கிறார்கள். வெளிநாட்டு மாடுகளுக்கும் கலப்பின மாடுகளுக்கும் திமில் பெரிதாக இல்லாத காரணத்தால் அவற்றைப் பிடிப்பது கடினமாக இருப்பதாக மனுதாரர் கூறியிருந்ததையும் நீதிபதிகள் ஏற்றுக்கொண்டனர். கிராமங்களில் வளர்க்கப்படும் நாட்டு மாடுகளின் எண்ணிக்கை குறைந்து வருவது வேதனை அளிப்பதாகக் கூறியிருக்கும் நீதிபதிகள்

மேலும் தீர்ப்பில்,

*நாட்டு மாடுகள் வளர்ப்பதை, ஜல்லிக்கட்டு மாடு வளர்ப்போர் மற்றும் விவசாயிகளுக்கு மானியம், ஊக்கத் தொகை அளித்து அரசாங்கம் ஊக்குவிக்க வேண்டும்.

*ஜல்லிக்கட்டுப் போட்டிகளில் மாடுகள் பங்கேற்பதற்கு முன்பாக அந்த மாடுகள் 'நாட்டு மாடுகள்' என்பதைக் கால்நடை மருத்துவர்கள் உறுதிசெய்ய வேண்டும்.

* தவறாகச் சான்றளிக்கும் கால்நடை மருத்துவர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடரலாம்.

*மாடுகளுக்குச் செயற்கை முறையில் கருத்தரிப்பது 1960ஆம் ஆண்டின் மிருகவதை தடைச் சட்டத்தின் கீழ் குற்றமாகக் கருதப்படக்கூடும். எனவே முடிந்த அளவு இப்பழக்கத்தை அரசு கைவிட வேண்டும் என குறிபிட்டிருக்கிறார்கள்.

image

தமிழ்நாட்டில் இருக்கும் நாட்டு மாடுகள், வெளிநாட்டு மற்றும் கலப்பின மாடுகளின் வகைகள் என்னனென்ன?

கடந்த 1970-ம் ஆண்டு இந்தியாவில் பால் உற்பத்தியை அதிகரிக்க வேண்டும் என்பதற்காக வெண்மை புரட்சி திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த திட்டத்தின் மூலம் வெளிநாடுகள் மூலம் மாடுகள் இறக்குமதி செய்யப்பட்டு கலப்பின மாடுகள் உருவானது. ஒரு கட்டத்தில் கலப்பின மாடுகளின் எண்ணிக்கை அதிகரித்து, நாட்டு இன மாடுகள் எண்ணிக்கை குறைந்தது. தமிழகத்தில் ஒரு காலத்தில் 87 வகையான நாட்டு மாடுகள் இருந்தன. இந்தியாவில் தற்போது 35 வரையறுக்கப்பட்ட நாட்டின மாடுகள் மட்டுமே உள்ளன. தமிழிககத்தில் ஜல்லிக்கட்டுதான் நாட்டு மாடுகள் வளர்ப்பிற்கு பெரும் ஊக்கமாக இருக்கின்றது.

தமிழகத்தில் மட்டும் முன்னொரு காலத்தில் அத்தக்கருப்பன்,கட்டைக்காளை, கள்ளக்காளை, , குள்ளச்சிவப்பன், கொண்டைத்தலையன், ஏரிச்சுழியன், நெட்டைக்கொம்பன், பட்டிக்காளை,போருக்காளை, முரிகாளை, தறிகொம்பன், வளைக்கொம்பன், வெள்ளைக்காளை, மயிலைக்காளை போன்ற 87 வகையான நாட்டு மாடுகள் இருந்ததாக காளை வளர்ப்போர் கூறுகிறார்கள். ஆனால் தற்போது இந்தியாவில் 35 வரையறுக்கப்பட்ட நாட்டின மாடுகள் தான் உள்ளன. தமிழக ஜல்லிக்கட்டில் உம்பளச்சேரி, காங்கேயம், புலிக்குளம்/ஆலம்பாடி, பர்கூர் ஆகிய காளைகள் பயன்படுத்தப்படுகின்றன. இவை நான்கும் பழம்பெருமை வாய்ந்தவை. நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக நம் தட்பவெப்ப நிலைக்கு ஏற்ப பரிணாம வளர்ச்சி அடைந்தவை.

இந்தியாவில் நாட்டு மாடுகள் தவிர்த்து பல இடங்களில் வெளிநாட்டு மற்றும் கலப்பின மாடு வகைகள், அவற்றின் அதிகப்படியான பால் சுரக்கும் திறனுக்காக வளர்க்கப்படுகின்றன. வெளிநாட்டு மாடுகளை பொறுத்தவரை 1. ஜெர்சி, 2. ஹோல்ஸ்டியன் -ஃபிரீசியன், 3. பிரவுன் ஸ்விஸ், 4. ரெட் டேன், 5. ஆயிர்ஷையர், 6. கர்ன்சி ஆகிய மாட்டினங்கள் இந்தியாவில் காணப்படுகின்றன. கலப்பின மாடுகளை பொறுத்தவரை, கலப்பின ஜெர்சி மற்றும் கலப்பின ஹோல்சியன் ஃபிரீசியன் ஆகிய மாடு வகைகள் காணப்படுகின்றன.

ஜல்லிக்கட்டு பாதுகாப்பு நலச்சங்கத்தைச் சேர்ந்த சாலை கனகராஜன் பேசுகையில்,''இது ஒரு வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பு. விவசாயத்திற்கு ஜெர்ஸி மாடுகளால் எந்த பயனும் இல்லை. இயற்கை விவசாயத்திற்கு நாட்டின மாடுகள் தான் உகந்தவை. மொத்த இந்தியாவே கொண்டாடப்பட வேண்டும். பிரேசில் போன்ற நாடுகளில் நாட்டின மாடுகளிலிருந்து 80 லிட்டர் பால் கறக்கின்றனர். வண்டி மாடு, ஜல்லிக்கட்டு, பால் உற்பத்தி, ஏர் உழவுதல் போன்ற பலவற்றிற்கு பயன்படுத்தலாம். கால்நடைகள் கடைசி மூச்சு இருக்கும் வரை மனிதனுக்காகவே வாழும் ஜீவன்'' என்று தெரிவித்துள்ளார்.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்