
சுருக்குமடி வலையைத் தொடர்ந்து பயன்படுத்தி வரும் நாகை மாவட்ட மீனவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, மாவட்ட ஆட்சியர் லலிதாவிடம் மயிலாடுதுறை மாவட்ட மீனவர்கள் மனு அளித்துள்ளனர்.
கடந்த 14-ஆம் தேதி, மீனவர்கள் சிலர் தடையை மீறி சுருக்குமடி வலையுடன் கடலுக்குச்செல்ல, அவர்களைத் தடுப்பதற்காக எதிர்த்தரப்பு மீனவர்களும் சென்றனர். போலீசார் எச்சரித்ததைத் தொடர்ந்து இருதரப்பு மீனவர்களும் கரைக்கு திரும்பினர். வழியில் ஏற்பட்ட மோதலில் ஃபைபர் படகு ஒன்று உடைக்கப்பட்டதுடன், 2 மீனவர்கள் காயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். வானகிரி படகுத்துறையில் நிறுத்தப்பட்டிருந்த பூம்புகார் கிராமத்தைச் சேர்ந்த நான்கு ஃபைபர் படகுகளுக்கு அடையாளம் தெரியாத சிலர் தீ வைத்தனர்.
இந்நிலையில், தரங்கம்பாடி தலைமையிலான 20 மீனவ கிராம நிர்வாகிகள், மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் லலிதாவிடம் கோரிக்கை மனு ஒன்றை அளித்தனர். அதில், நாகை மாவட்ட மீனவர்கள் தேவையின்றி, மயிலாடுதுறை மாவட்ட மீனவர்களின் ஒற்றுமையை சீர்குலைத்து வன்முறையை தூண்டும் வகையில் சில கிராம மீனவர்களை தூண்டிவிட்டு கலவரத்தை ஏற்படுத்தியாகக் குறிப்பிட்டுள்ளனர்.
அதோடு, மயிலாடுதுறை மாவட்ட மீனவர்களை மீன்பிடிக்க விடாமல் தடுத்து நிறுத்திவிட்டு பூம்புகார் கடல் பகுதியில் நாகை மாவட்ட மீனவர்கள் மட்டும் இரவு பகலாக தடைசெய்த வலையை பயன்படுத்தி மீன் பிடித்து வருகின்றனர் என்றும், உடனடியாக மாவட்ட நிர்வாகம், நாகை மாவட்ட நிர்வாகத்துடன் பேசி இப்பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டனர்.