Published : 09,Aug 2021 08:03 PM
கெளதம் மேனனின் ‘வெந்து தணிந்தது காடு’ படத்தில் சிம்புக்கு ஜோடியாகும் கயாடு லோகர்

சிம்புவின் ‘வெந்து தணிந்தது காடு’படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக கயாடு லோகர் நடிக்கவிருக்கிறார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
மாடலிங் துறையைச் சேர்ந்த கயாடு லோகர் கடந்த ஆண்டு வெளியான கன்னட திரைப்படமான ‘முகில்பேட்டை’ என்ற படத்திலும், ‘பத்தோம்பதம் நூட்டுண்டு’என்ற மலையாளப் படத்தில் நடித்துள்ளார்.
மஹாராஷ்டிராவின் புனேவை சேர்ந்த கயாடு தமிழில் சிம்புவுக்கு ஜோடியாக கெளதம் மேனனின் ‘வெந்து தணிந்தது காடு’ படத்தில் அறிமுகமாகிறார். இதற்கான, அறிவிப்பு விரைவில் அதிகாரபூர்வமாக படக்குழுவினர் அறிவிக்கவுள்ளனர் என்று சொல்லப்படுகிறது.
இதற்கு முன்னதாக,’விண்ணைத்தாண்டி வருவாயா', 'அச்சம் என்பது மடமையடா' படத்திற்குப் பிறகு சிம்பு கெளதம்மேனன் கூட்டணி 'வெந்து தணிந்தது காடு' படத்தில் மூன்றாவது முறையாக இணைந்துள்ளனர். சிம்புவின் 47-வது படமாக எழுத்தாளர் ஜெயமோகன் திரைக்கதையில் உருவாகும் இப்படத்திற்கு ஏ.ஆர் ரஹ்மான் இசையமைக்கிறார்.
தாமரை பாடல்கள் எழுதுகிறார். ஐசரி கணேஷ் தயாரிக்கிறார். முற்றிலும் கிராமத்து பின்னணியில் வித்தியாசமான ஆக்ஷன் த்ரில்லரில் உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு கடந்தவாரம் திருச்செந்தூரில் தொடங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.