[X] Close

விரைவுச் செய்திகள்: கோவை, திருப்பூரில் கட்டுப்பாடுகள் | கடலோர மாவட்டங்களில் மழை வாய்ப்பு

தமிழ்நாடு

Tamilnadu--India--World-news-till-11-PM

ஊரடங்கு நீட்டிப்பா? - முதலமைச்சர் ஆலோசனை: தமிழகத்தில் கொரோனா சூழல் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெள்ளிக்கிழமை ஆலோசனை நடத்துகிறார். கூடுதல் தளர்வுகளா, கூடுதல் கட்டுப்பாடுகளா என்பது விரைவில் தெரியவரும்.


Advertisement

அதிமுக அவைத் தலைவர் மதுசூதனன் காலமானார்: அதிமுக அவைத் தலைவரும் முன்னாள் அமைச்சருமான மதுசூதனன் காலமானார். உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நிலையில் உயிரிழந்தார்.

தமிழகத்தில் சற்றே அதிகரிக்கும் கொரோனா: தமிழகத்தில் புதிதாக 1,997 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. முந்தைய நாளைவிட தொற்று எண்ணிக்கை 49 அதிகரித்துள்ளது.


Advertisement

கோவை, திருப்பூரில் கட்டுப்பாடுகள்: கொரோனா பரவலைத் தடுக்க, கோவை, திருப்பூர் மாவட்டங்களில் கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளது. ஏற்காட்டுக்கு வார இறுதியில் வரத்தடை விதிக்கப்பட்டுள்ளது. நீலகிரி, கொடைக்கானல் வருவோருக்கு கொரோனா பரிசோதனை கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

வீடு தேடி வரும் மருத்துவம்: வீட்டுக்கே வந்து மருத்துவ சேவை அளிக்கும் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடக்கிவைத்தார். நாட்டுக்கே முன்னோடியான திட்டத்தில் டயாலிஸிஸ் சிகிச்சையையும் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும் என பேட்டியில் தெரிவித்தார்.

வெள்ளிப் பதக்கம் வென்றார் ரவிக்குமார்: டோக்கியோ ஒலிம்பிக் ஆடவர் மல்யுத்தத்தில் 57 கிலோ எடைப் பிரிவில் வெள்ளி வென்றார் இந்தியாவின் ரவிக்குமார் தாஹியா. இறுதிப் போட்டியில் ரஷ்யா ஒலிம்பிக் கமிட்டி வீரர் ஜார் உகுயேவ்-விடம் போராடி தோல்வியடைந்தார்.


Advertisement

41 ஆண்டுகளுக்குப் பின் பதக்க மேடையில்: 41 ஆண்டுகளுக்குபின் வெண்கலப்பதக்கம் வென்று, பதக்க தாகத்தை தணித்தது இந்திய ஆடவர் ஹாக்கி அணி. வீரர்களின் சொந்த ஊர்களில் வெற்றி கொண்டாட்டப்பட்டு வருகிறது. பஞ்சாப் வீரர்களுக்கு தலா ஒரு கோடி ரூபாய் பரிசு என மாநில அரசு அறிவித்துள்ளது.

அன்னைத் தமிழில் அர்ச்சனை திட்டம்: அறநிலையத் துறைக்கு சொந்தமான பெரிய கோயில்களில் அன்னைத் தமிழில் அர்ச்சனை திட்டம் தொடங்கப்பட்டது. மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் அமைச்சர் சேகர்பாபு தொடங்கி வைத்தார்.

வரிபாக்கியை 48 மணி நேரத்தில் கட்ட தனுஷுக்கு கெடு: ரோல்ஸ் ராய்ஸ் காருக்கு வரி பாக்கி 30 லட்சத்து 30ஆயிரம் ரூபாயை 48 மணி நேரத்தில் கட்ட நடிகர் தனுஷுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. ஏற்கனவே வழக்குகள் தேங்கியுள்ள நிலையில், இதுபோன்ற தேவையற்ற வழக்குகள் சுமைதான் என்றும் சென்னை உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்திருக்கிறது.

தமிழக பாஜக உண்ணாவிரதமும், கர்நாடகத்தின் உறுதியும்: மேகதாதுவில் அணைகட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசைக் கண்டித்து தமிழக பாஜக நிர்வாகிகள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். யார் போராட்டம் நடத்தினாலும், அணை கட்டியே தீரப்படும் என்று அதேக் கட்சியை சேர்ந்த கர்நாடகா முதலமைச்சர் பசவராஜ் பொம்மை உறுதியாகத் தெரிவித்திருக்கிறார்.

திருத்துறைப்பூண்டியில் தேசிய நெல் திருவிழா: திருத்துறைப்பூண்டியில் 15ஆவது தேசிய நெல் திருவிழா தொடங்கியது. அலங்கரிக்கப்பட்ட மாட்டு வண்டியில் நெல் ரகங்கள் கொண்டுவரப்பட்டது.

ராஜேந்திர பாலாஜி வழக்கு - ஆவணங்களை திரட்டுகிறோம்: முன்னாள் அதிமுக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீதான சொத்து குவிப்பு வழக்கில் ஆவணங்களை திரட்டுகிறோம் என சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல் தெரிவித்திருக்கிறது.

ஈமு மோசடி - யுவராஜ் உள்பட மூவருக்கு 10 ஆண்டு சிறை: ஈமு கோழி முதலீட்டு மோசடியில் கோகுல்ராஜ் கொலை வழக்கில் தொடர்புடைய யுவராஜ் உட்பட 3 பேருக்கு தலா 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 2.47 கோடி ரூபாய் அபராதம் விதித்தும் தமிழ்நாடு முதலீட்டாளர் பாதுகாப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருக்கிறது.

பாடப்புத்தகத்தில் சாதிப்பெயர்கள் நீக்கம்: பள்ளி பாடப்புத்தகங்களில் தலைவர்களின் பெயருக்குப் பின்னால் உள்ள சாதிப்பெயர்கள் நீக்கப்பட்டுள்ளது. கடந்த சில ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்டுவரும் நடவடிக்கையின் தொடர்ச்சி என தமிழ்நாடு பாடநூல் கழகம் விளக்கமளித்திருக்கிறது.

தமிழக விவசாயிகள் டெல்லியில் மறியல்: மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெற வலியுறுத்தி தமிழக விவசாயிகள் டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நாடாளுமன்றம் நோக்கி பேரணியாக செல்ல முயன்றவர்கள் தடுத்துநிறுத்தப்பட்டனர்.

பெகாசஸ் விவகாரம் - உச்சநீதிமன்றம் கேள்வி: பெகாசஸ் மென்பொருள் மூலம் உளவு பார்க்கப்பட்டவர்கள் யாரும் இதுவரை ஏன் எந்த புகாரும் அளிக்கவில்லை என உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பி இருக்கிறது. மத்திய அரசிடம் மனு விவரங்களை அளிக்க உத்தரவிட்டு, விசாரணை ஆகஸ்ட் 10 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

கடலோர மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: தமிழகத்தில் மேற்குத்தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் கடலோர மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டுள்ளது. நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் கன மழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்திய அணி நிதான ஆட்டம்: இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி நிதானமாக ஆடியது. கோலி டக் அவுட் ஆன நிலையில், அரை சதம் அடித்தார் கே.எல்.ராகுல்.


Advertisement

Advertisement
[X] Close