Published : 01,Aug 2017 01:47 PM
திக்விஜய் சிங் பதவி அதிரடியாக பறிப்பு.... சோனியா நடவடிக்கை

தெலங்கானா மாநில காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் பதவியில் இருந்து திக்விஜய் சிங்கை நீக்கம் செய்து அவருக்குப் பதிலாக ஆர்.சி. குந்தியாவை நியமித்து சோனியா காந்தி உத்தரவிட்டுள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளர்களாக உள்ளவர்கள் சில மாநிலங்களில் அக்கட்சியின் உள்விவகாரங்களை கவனிக்கும் மேலிட பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். அவ்வகையில், தெலங்கானா மாநில காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் பதவியில் இருந்து திக்விஜய் சிங்கை நீக்கம் செய்தும் ஆர்.சி. குந்தியாவை நியமித்தும் சோனியா காந்தி உத்தரவிட்டுள்ளார்.
இதுதொடர்பாக டெல்லியில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜனார்தன் திரிவேதி, ‘தெலங்கானா மாநில காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் பதவிக்குண்டான அனைத்து பொறுப்புகளிலும் இருந்தும் திக் விஜய் சிங் விடுவிக்கப்பட்டுள்ளார்.
அவர் வகித்துவந்த பதவியில் ஆர்.சி. குந்தியா நியமிக்கப்பட்டுள்ளார். தெலங்கானா மாநிலத்திற்கான இந்த புதிய அமைப்பில் பொதுச்செயலாளராக சதிஷ் ஜர்கிஹோலி இணைக்கப்பட்டுள்ளார்." என்றார்.
மேலும், அகில இந்திய அளவில் தொழில்முறை காங்கிரஸ் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்கள் காங்கிரஸ் என்று இரு புது அமைப்புகளையும் சோனியா காந்தி ஏற்படுத்தியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். அகில இந்திய தொழில்முறை காங்கிரசின் தலைவராக சசி தரூர் நியமிக்கப்பட்டுள்ளார். அகில இந்திய அமைப்புசாரா தொழிலாளர்கள் காங்கிரசின் தலைவராக அர்பிந்த் சிங் நியமிக்கப்பட்டுள்ளார் எனவும் ஜனார்த்தன் திரிவேதி கூறினார். இதேபோல், காங்கிரஸ் கட்சியின் மீனவ அணிக்கு அகில இந்திய மீனவர் காங்கிரஸ் என்று பெயர் மாற்றம் செய்யவும் சோனியா காந்தி ஒப்புதல் அளித்துள்ளார் என அவர் தெரிவித்துள்ளார்.