[X] Close

சமூகநீதிப் போராளி கலைஞர் கருணாநிதியின் 98-வது பிறந்தநாள் இன்று!

சிறப்புக் களம்,தமிழ்நாடு

Today-marks-the-97th-birthday-of-the-late-DMK-leader-and-former-chief-minister-Kalaignar-Karunanidhi

மறைந்த  திமுக முன்னாள் தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான கலைஞர் கருணாநிதியின் 98-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகின்றது.


Advertisement

1924 ஜூன் 3 அன்று நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள திருக்குவளை என்ற சிற்றூரில் கருணாநிதி பிறந்தார். தந்தை பெயர் முத்துவேலர்; தாயார் அஞ்சுகம். கடந்த 1969ஆம் ஆண்டு ஜூலை 27ஆம் தேதி திமுகவின் முதல் தலைவராக பொறுப்பேற்ற கருணாநிதி,  5 முறை தமிழ்நாட்டின் முதலமைச்சராக பதவி வகித்துள்ளார். 2018 ஆகஸ்ட் 7 அன்று வயது மூப்பின் காரணமாக மறைந்தார். 

‘’பாட்டொலிக்கும் குயில்கள் இல்லை என் பாதையில், படமெடுத்தாடும் பாம்புகள் நெளிந்திருக்கின்றன. தென்றலைத் தீண்டியதில்லை நான். ஆனால் தீயைத் தாண்டியிருக்கிறேன்’’ என்று ‘பராசக்தி’ படத்தில் வசனம் எழுதியிருப்பார் கருணாநிதி. இது வெறும் திரை வசனம் மட்டுமல்ல, தனது சொந்த வாழ்வின் அனுபவ வரிகள் என்பதை கலைஞரை படித்தவர்கள் புரிந்திருப்பார்கள். எதிர்ப்பெனும் நெருப்பாற்றில் தொடக்கம் முதல் இறுதிவரை நீந்திக்கொண்டே இருந்தவர்தான் கருணாநிதி.


Advertisement

அரசியல் வாழ்க்கையில் மாபெரும் உயரங்கள், மிக மோசமான பள்ளங்கள் என இரண்டையும் மாறிமாறி பார்த்த அரசியல் ஆளுமைகளில் கருணாநிதியை போன்று எவருமில்லை. தமிழக அரசியலில் ஒவ்வொரு அசைவும், எழுச்சியும், எதிர்ப்பும் அவரை சுற்றியே சுழன்றன. மாநில அரசியலிலும் மத்திய அரசியலிலும் திமுக தலைவராக, தமிழ்நாட்டின் முதலமைச்சராக கருணாநிதி ஏற்படுத்திய மாற்றங்கள் வரலாற்றுப் பக்கங்கள். 

அனைத்து கிராமங்களுக்கும் மின்சாரம், சிப்காட் தொழில் வளாகங்கள், பெண்களுக்கு சொத்துரிமை, விவசாயிகளுக்கு இலவச மின்சாரம், பேருந்துகள் நாட்டுடமை, பொது வினியோகத் திட்டம், திருமண மற்றும் மறுமண உதவித் திட்டங்கள், உழவர் சந்தைகள் என நீளும் தன்னுடைய தொலைநோக்குத் திட்டங்கள் மூலம் இந்தியாவையே திரும்பிப்பார்க்க வைத்தவர். 

கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் மற்றும் அருந்ததியின மக்களுக்கான இட ஒதுக்கீடுகளை அளித்து, அதனை அரணாக காத்த சமூகநீதிப் போராளி.


Advertisement

அரசியல் அரிச்சுவடியை 14 வயதில் இந்தி எதிர்ப்பு போராட்டமாக எழுதத் தொடங்கியவர் கலைஞர். அன்று தொடங்கிய அவரது போராட்டப் பயணம், இடஒதுக்கீட்டு போராட்டம், அவசரகால பிரகடனத்திற்கு எதிரான  போராட்டம், மொழிப் போராட்டம் என நீண்டு, ‘கல்லறை’ செல்லும் வரை பிறவிப் போராளியாய் வாழ்ந்து மறைந்தார்.

image

கருணாநிதியின் 98-வது பிறந்தநாள் கொண்டாடப்படும் இன்று கொரோனா காலம் என்பதால், தொற்று பரவலை கருத்தில்கொண்டு பொதுவெளியில் பிறந்தநாள் கொண்டாட்டங்களில் ஈடுபட வேண்டாம் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஏற்கனவே கேட்டுக்கொண்டுள்ளார். கலைஞரின் பிறந்தநாளை முன்னிட்டு, பல மக்கள் நல திட்டங்களை இன்று முதல்வர் துவக்கிவைக்க உள்ளார். 

கொரோனா நிவாரண நிதியின் இரண்டாவது தவணையையான 2000 ரூபாய் கொடுக்கும் பணியை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று துவக்கி வைக்கிறார். மேலும், கொரோனா ஊரடங்குக்காக மக்களுக்கு 14 வகை மளிகைப்பொருட்களை வழங்கும் திட்டத்தையும் இன்று முதலமைச்சர் தொடங்கி வைக்கிறார். முன்களப் பணியாளர்களின் குடும்பங்களுக்கான நிவாரண நிதி, அர்ச்சகர்கள், பூசாரிகள் மற்றும் பணியாளர்களுக்கு கொரோனா கால நிவாரணம் வழங்கும் திட்டம் ஆகியவையும் இன்று தொடங்கும்.


Advertisement

Advertisement
[X] Close