[X] Close >

விக்கெட்டுகளை எடுக்க திணறும் இந்திய பவுலர்கள்.. பிரச்னை என்ன? - சுமந்த் சி.ராமன் விளக்கம்!

Sports-Commentator-Sumanth-C-Raman-explains-the-reason-behind-Why-Indian-Bowlers-Struggled-to-take-Wickets-against-England-in-Chennai-Test-Match-First-Innings

இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்து அணிக்கு எதிராக நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடரை கைப்பற்றும் அணி வரும் ஜூன் 18 - 22 வரையில் இங்கிலாந்தின் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற உள்ள உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் நியூசிலாந்து அணிக்கு எதிராக விளையாடுவதற்கான வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. அதே நேரத்தில் இந்திய அணிக்கு கேப்டன் கோலியின் கம்பேக் பலமாக அமைந்துள்ளது. இங்கிலாந்தும் கடைசியாக பாகிஸ்தான், வெஸ்ட் இண்டீஸ் மற்றும் இலங்கை அணிகளுக்கு எதிராக விளையாடிய டெஸ்ட் தொடர்களை வென்றுள்ளது. இப்படி இரு அணிகளும் சம பலத்துடன் தான் இந்த தொடரில் விளையாடுகின்றன. 


Advertisement

இரு அணிகளும் விளையாடும் முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளும் சென்னை - சேப்பாக்கம் மைதானத்தில் தான் நடைபெறுகிறது. இதில் முதல் போட்டி இப்போது விளையாடப்பட்டு வருகிறது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் பேட்டிங்கை தேர்வு செய்தார். இந்திய அணி வீரர்கள் எப்படியும் பவுலிங்கில் அசத்தி விடுவார்கள் என்பது போல தான் ஆட்டத்தின் முதல் 26 ஓவர்கள் அமைந்திருந்தன. 

image


Advertisement

இங்கிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர் பேர்ன்ஸை அஷ்வினும், ஒன்டவுனில் களம் இறங்கிய டான் லாரன்ஸை பும்ராவும் வீழ்த்தியிருந்தனர். ஆனால் அதற்கு பிறகு இங்கிலாந்து பேட்ஸ்மேன்களை இந்திய பவுலர்களால் வீழ்த்தவே முடியவில்லை. அதற்கடுத்த விக்கெட்டை வீழ்த்த இந்திய பந்து வீச்சாளர்கல் 386 பந்துகளை வீச வேண்டி இருந்தது. அதோடு மட்டும் இல்லாமல் இங்கிலாந்து அணியை ஆல் அவுட் செய்ய இந்தியா 190.1 பந்துகளை வீசியுள்ளது. இது தான் கிரிக்கெட் ரசிகர்கள் தொடங்கி விமர்சகர்கள் வரை எல்லோரும் இந்தியாவை கேள்வி கேட்க முக்கிய காரணம். 

இந்நிலையில் சென்னை டெஸ்ட் போட்டியில் இந்திய பவுலர்கள் விக்கெட் வீழ்த்த தவறியது ஏன்? என்ற கேள்வியுடன் சுமந்த் சி.ராமனிடம் பேசினோம்.

image


Advertisement

“சென்னை மைதானத்தின் ஆடுகளம் எப்படி என்பது எல்லோருக்கும் தெரியும். எனக்கு தெரிந்து முதல் இரண்டு நாட்களுக்கு ஆடுகளம் பேட்டிங் விக்கெட்டாக தான் இருந்தது. It is a  Good Batting Wicket. அது தான் இந்திய பந்து வீச்சாளர்கள் விக்கெட் வீழ்த்தாமல் போனதற்கு காரணம். அது ஒரு Dead பிட்ச். அதனால் தான் பந்து வீச்சாளர்களுக்கு அது துளிகூட உதவவில்லை. குறிப்பாக ஸ்பின்னர்களுக்கு தேவையான டேர்ன் அண்ட் பவுன்ஸ் அதில் கிடைக்கவே இல்லை. அது மாதிரியான பிட்சில் இந்திய பவுலர்கள் கடுமையாக ஏற்படுத்தி கொடுத்த விக்கெட் வாய்ப்பையும் கேட்ச் டிராப் மூலம் நழுவ விடப்பட்டுள்ளது. இங்கிலாந்தின் முதல் இன்னிங்ஸில் மட்டுமே இந்திய 4 கேட்சைகளை நழுவ விட்டுள்ளது. அதை நாம் கவனிக்க வேண்டும். இதில் பந்து வீச்சாளர்களை குறை கூற ஒன்றுமே இல்லை. 

அதே நேரத்தில் ஷபாஸ் நதீமுக்கு மாற்றாக குல்தீப் யாதவ் விளையாடி இருக்கலாம் என்ற எண்ணம் எழுகிறது. இருந்தாலும் அது அணி நிர்வாகத்தின் முடிவு. நிறைய யோசனைகளுக்கு பிறகு தான் அவருக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டிருக்கும். இஷாந்துக்கு பதிலாக வேறொரு வேகப்பந்து வீச்சாளரை தேர்ந்தெடுத்திருக்கலாம் என நான் கருதுகிறேன். அவர் வீழ்த்திய இரண்டு விக்கெட்டுகளில் ஒருவர் டெயில் எண்டர். 

இங்கிலாந்து அணியின் ஆர்ச்சர் மற்றும் டாம் பெஸ் விக்கெட் வீழ்த்தியுள்ளார்கள் என்ற கேள்வி வரலாம். அதற்கு காரணம் ஆடுகளத்தின் தன்மை மாறி வருவது தான். எனக்கு தெரிந்து எஞ்சியுள்ள இரண்டு நாட்களில் இங்கிலாந்து அணி இந்தியாவை ஆல் அவுட் எடுத்தவுடன் குறைந்தபட்சம் இரண்டு செஷனாவது விளையாடிய பின்னர் வலுவான இலக்கு நிர்ணயித்து இந்தியாவை விளையாட சொல்லி பணிப்பார்கள் என நினைக்கிறேன்” என்றார் அவர். 

image

அதே நேரத்தில் சிலர் இந்தியாவில் விளையாட பயன்படுத்தப்பட்டு வரும் SG பந்துகளும் ஒரு காரணம் என தெரிவித்துள்ளனர். இதற்கு முன்னர் இந்திய அணியில் இடம்பெற்றுள்ள கிரிக்கெட் வீரர்களும் அந்த பந்தை  குறித்து விமர்சித்தது உண்டு. அதை கருத்தில்  கொண்டு பந்து வீச்சாளர்களுக்கு உதவும் வகையில் SG பந்தில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அதில் தான் இந்தியா - இங்கிலாந்துடன் விளையாடி வருகிறது. இது குறித்து சுமந்த் சி.ராமனிடம் கேட்டதற்கு “பந்தை குறை சொல்லி ஒன்றுமில்லை. காலம் காலமாக இந்த பந்தில் தான் இந்தியாவில் கிரிக்கெட் விளையாடப்பட்டு வருகிறது. சென்னை ஆடுகளம் முதல் இரண்டு நாட்கள் பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாக இருந்தது தான் காரணம்” என தெளிவுபடுத்தினார். 

-எல்லுச்சாமி கார்த்திக்

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close