[X] Close >

"நேர்மைக்காக வேட்டையாடப்பட்டால் சும்மா இருக்கமாட்டேன்!" - சூரப்பாவுக்கு ஆதரவாக கமல்

We-need-to-chase-away-corrupt-bigwigs-Kamal-who-released-the-video-in-support-of-Surappa

அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் மீது முறைகேடு புகார்கள் எழுந்து, அதனை விசாரிக்க விசாரணைக் குழு அமைக்கப்பட்ட நிலையில், அவருக்கு ஆதரவாக மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.


Advertisement

தனது சமூக வலைதளப் பக்கத்தில் அவர் வெளியிட்ட வீடியோவில், "அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தராக சூரப்பா நியமிக்கப்பட்டபோது, தமிழ்நாட்டில் இதற்கு தகுதியானவர் இல்லையா என்ற கேள்வியை நாம்தான் எழுப்பினோம். அந்தக் கேள்வி இப்போதும் தொக்கி நிற்கிறது. வந்தவரோ வளைந்து கொடுக்காதவர். அதிகாரத்திற்கு முன் நெளிந்து கொடுக்காதவர்.

தமிழகத்தில் பொறியியல் கல்வியை உலகத் தரத்திற்கு உயர்த்த வேண்டும் என்று முனைந்தவர். பொறுப்பார்களா நம் ஊழல் திலகங்கள். வளைந்து கொடுக்கவில்லை என்றால் ஒடிப்பதுதானே இவர்கள் வழக்கம். எவரோ அடையாளத்தை மறைத்துக்கொண்டு பேடி எழுதிய மொட்டைக் கடிதாசியின் அடிப்படையில் விசாரணைக்குழு அமைத்துள்ளார்கள். மொட்டையில் முடி வளராததால் மக்கள் வரிப்பணத்தில் விளம்பரம் கொடுத்து ஏதேனும் வில்லங்கம் சிக்குமா என்று கடை போட்டு காத்திருக்கிறார்கள். முறைகேடாக பல்கலைக்கழகத்தில் தங்கியவர்கள், அங்குள்ள வாகனங்களை முறைகேடாக பயன்படுத்தியவர்களை விசாரித்து விட்டீர்களா?


Advertisement

உயர்கல்வித் துறை அமைச்சர் 60 லட்சம் வாங்கிக்கொண்டுதான் பேராசிரியர்களை பணி நியமனம் செய்கிறார் என்று பாலகுருசாமி தனியார் இதழுக்கு அளித்தப் பேட்டியில் புகார் அளித்திருந்தாரே, அது குறித்து விசாரித்துவிட்டீர்களா?


Advertisement

உள்ளாட்சித் துறை, மக்கள் நலவாழ்வுத்துறை, கால்நடை பராமரிப்புத்துறை என அத்தனை துறை அமைச்சர்களும் ஊழலில் திளைக்கிறார்கள் என சமூக செயற்பாட்டளர்களும், எதிர்க்கட்சிகளும் அன்றாடம் குரல் எழுப்புகிறார்களே அதை விசாரித்துவிட்டீர்களா?

தேர்வு நடத்துவதும், தேர்ச்சி அறிவிப்பதும் கல்வியாளர்கள் கடமை. கரை வேட்டிகள் இங்கேயும் மூக்கை நுழைப்பது ஏன்? இதுவரை காசு கொடுத்து ஓட்டு வாங்கியவர்கள், மதிப்பெண்களை கொடுத்து மாணவர்களை வாங்க நினைக்கிறார்களா?

சூரப்பா கொள்கை சார்புகள், அரசியல் நிலைப்பாடுகள் மீது நமக்கு மாற்றுக் கருத்துக்கள் இருக்கலாம். ஆனால் ஒருவர் தன் நேர்மைக்காக வேட்டையாடப்பட்டால் கமல்ஹாசனாகிய நான் பார்த்துக்கொண்டு சும்மா இருக்கமாட்டேன். நேர்மையாளர்களின் கூடாரமான மக்கள் நீதி மையமும் சும்மா இருக்காது.

இது கல்வியாளனுக்கும், அரசியல்வாதிகளுக்கும் இடையேயான பிரச்னை இல்லை. மாறாக நேர்மையாக வாழ நினைப்பவருக்கும் ஊழல் பேர்வழிகளுக்குமான போர். ஊழலுக்கு ஒத்துழைக்க மறுத்தால், உன் வாழ்வை அழிப்போம். அவதூறு பரப்பி, உன் அடையாளத்தை சிதைப்போம் என்பதை சூரப்பாவிற்கும் அவர் போல் நிமிர்வுடன் பணியாற்றுபவர்களுக்கும் விடுக்கும் எச்சரிக்கை.

சகாயம் முதல் சந்தோஷ் பாபு வரை இவர்களால் வேட்டையாடப்பட்டவர்களின் பட்டியல் பெரிது. பேரதிரிகளே இவர்களுடன் போராடிக் களைத்து விருப்ப ஓய்வு பெறுகிறார்கள் என்றால், சாமானியர்கள் நிலை என்ன? இதனை இனிமேலும் தொடர விடக்கூடாது. இன்னொரு நம்பி நாரயணன் இங்கே உருவாகக் கூடாது.

நேர்மைக்கும் ஊழலுக்குமான போட்டியில் அறத்தின் பக்கம் நிற்க விரும்புவர்கள் தங்களின் மெளனம் கலைத்து பேசியாக வேண்டும். குரலற்றவர்களின் குரலாக நாம்தான் மாற வேண்டும். நேர்மைதான் நமது ஒரே சொத்து. அதையும் விற்று வாயில் போட்டு விடத்துடிக்கும் இந்த ஊழல் திலகங்களை ஓட ஒட விரட்ட வேண்டும். வாய்மையே வெல்லும். நாளை நமதே" என்று கூறியுள்ளார்.

முன்னதாக, அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தராக கடந்த 2018 முதல் எம்.கே.சூரப்பா பதவி வகித்து வருகிறார். கர்நாடகாவைச் சேர்ந்த சூரப்பாவின் நியமனத்துக்கு மாநில அரசு உள்பட திமுக உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகள் தொடக்கம் முதலே எதிர்ப்பு தெரிவித்து வந்தது குறிப்பிடத்தக்கது.

image

அண்மையில் அண்ணா பல்கலைக்கழக சிறப்பு அந்தஸ்து விவகாரம், அரியர் மாணவர்களுக்கு தேர்ச்சி வழங்குதல் உள்ளிட்டவற்றில் சூரப்பாவின் நடவடிக்கைகள் தமிழக அரசின் அதிருப்திக்கு உள்ளாகின. இவைத்தவிர தற்காலிக பேராசிரியர்கள் நியமனத்துக்கு லஞ்சம், முறைகேடான பணிநியமனங்கள், அரியர் தேர்ச்சி விவகாரத்தில் AICTE-க்கு தவறான தகவலை அனுப்பியது, தனது மகளை முறைகேடாக அண்ணா பல்கலைக்கழகத்தில் பணியமர்த்தியது, நிதி முறைகேடுகள், தேர்வு முறைகேடுகள் என தொடர்ந்து சூரப்பா மீது புகார்கள் எழுந்துள்ளதாக உயர் கல்வித்துறை தெரிவித்தது. இந்தப் புகார்களை, ஓய்வு பெற்ற நீதிபதி கலையரசன் தலைமையிலான விசாரணை குழு விசாரிக்க தமிழக அரசு உத்தரவிட்டது நினைவுகூரத்தக்கது.

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close