[X] Close >

#MasterOnlyOnTheaters-ஐ ட்ரெண்ட் செய்து தெறிவிக்கவிடும் விஜய் ரசிகர்கள்!

MasterOnlyOnTheaters

’மாஸ்டர் தியேட்டரில்தான் வெளியாகவேண்டும்’ ட்விட்டரில் இந்திய அளவில் ட்ரெண்டிங்கில் தெறிக்கவிடும் விஜய் ரசிகர்கள்!


Advertisement

மாஸ்டர் திரைப்படம் ஓடிடியில் வெளியாகிறது என்று தகவல் பரவி வருவதை அடுத்து  ‘மாஸ்டர் தியேட்டரில்தான் வெளியாக வேண்டும்’ என்று விஜய் ரசிகர்கள் ட்விட்டரில் இந்திய அளவில் #MasterOnlyOnTheaters என்ற ஹேஷ்டேக்கில் ட்ரெண்ட் ஆக்கி தெறிக்கவிட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

நினைத்த நேரத்தில், நினைத்த இடத்தில் நின்றோ, அமர்ந்தோ, படுத்தோ, ஏன் ஓடிக்கொண்டேக்கூட ஓடிடி தளத்தில் புதுப்படத்தினைக் கண்டு களிக்கலாம். அவ்வளவு வசதி வாய்ப்புகளைக் கொடுத்துள்ளன ஓடிடி தளங்கள். பைக் வாடகை சார்ஜ், பாப்கார்ன், ஐஸ்கிரீம் என வேண்டாத செலவுகளையும் குறைத்து வீட்டில் இருந்தபடி கம்ப்யூட்டரிலோ செல் போனிலோகூட இணைய வசதிமூலம் பார்த்துக்கொள்ளும் வசதியை கொடுத்திருக்கிறது.


Advertisement

இத்தனை வசதிகள் இருந்தும் பிடித்த நடிகரின் படத்தை கூட்டத்துடன் கூட்டமாக விசில் அடித்து… கைத்தட்டி.. ஆர்ப்பரித்து தியேட்டரில் பார்ப்பதுதான் அனைத்தையும் விட கிடைக்கும் பேரனுபவம்; பேரானந்தம். எல்லோருக்கும் தீபாவளி, பொங்கல், கிறிஸ்துமஸ் பண்டிகை என்றால் ரசிகர்களுக்கோ அவர்களின் ஹீரோக்கள் படங்கள் வெளியாகும் நாள்தான் தீபாவளி, பொங்கல்,கிறிஸ்துமஸ் எல்லாமே. கட் அவுட் வைப்பது, பாலாபிஷேகம், மாலை போடுவது, பட்டாசு வெடிப்பது என ஆட்டம் பாட்டத்துடன் அமர்க்களப்படுத்துவார்கள்.

image

இதுபோன்ற காரணங்களாலேயே சுற்றுலா செல்வதற்குப் பதில் பலர் குடும்பத்தோடு தியேட்டருக்குச் செல்கிறார்கள். அப்படியொரு கொண்டாட்ட மனநிலையைக் கொடுக்கும் தியேட்டர்கள் கொரோனா தொற்று அபாயத்தால் கடந்த மார்ச் 25 ஆம் தேதிமுதல் மூடப்பட்டன. ஆனால், அதுவே ஓடிடி தளங்களின் வளர்ச்சியையும் அதிகப்படுத்தியது.


Advertisement

image

இந்நிலையில், திரைத்துறையினர் தமிழக அரசுக்கு தொடர்ச்சியாக கோரிக்கை வைத்ததன்பேரில் கடந்த நவம்பர் 10 ஆம் தேதி முதல் ’50 சதவீத இருக்கைகளுடன் மட்டுமே பார்வையாளர்களுக்கு அனுமதி, ஒரு சீட் விட்டு ஒரு சீட்டில்தான் உட்கார வேண்டும், இடைவெளியில் கொரோனா விழிப்புணர்வு விளம்பரங்கள் போடவேண்டும், தியேட்டர்கள் உள்ளே 30 டிகிரிவரை வெப்பநிலை நிலவுமாறு பார்த்துக்கொள்ள வேண்டும், கேண்டினில் பாக்கெட் நொறுக்குத்தீனிகளை மட்டுமே விற்கவேண்டும் போன்ற பல்வேறு கட்டுப்பாடுகளோடு தியேட்டர்களை திறந்துகொள்ளலாம்’ என்று தமிழக அரசு அறிவித்தது. ஆனாலும், கொரோனா பேரச்சத்தின் காரணமாக மக்கள் அதிகம் செல்லத் தயங்குகின்றனர். 

இந்த நிலையில்தான், கொரோனா காலத்தை பயன்படுத்திக் கொண்ட ஓடிடி தளங்கள் தொடக்கத்தில் பிரபலம் இல்லாதவர்களின் படங்களை வாங்கி வெளியிட்டன. பின்னர், முன்னணி ஹிரோக்களின் படங்களையும் ரிலீஸ் செய்தார்கள். தமிழில் சூர்யா நடிப்பில் உருவான சூரரைப் போற்று படமும் ஓடிடியில் வெளியாகி வெற்றிகரமாகவும் ஓடியது. இந்நிலையில்தான், விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் எடுக்கப்பட்ட மாஸ்டர் திரைப்படம் ஓடிடியில் வெளியாகுமா அல்லது திரையரங்கில் வெளியாகுமா? என்ற கேள்விகள் எழுந்தது. ஓடிடியில் மாஸ்டர் வெளியாகும் என்று ஊடகங்களில் செய்தி வெளியாகும் போதெல்லாம், ‘ஓடிடியில் வெளியிடாதீர்கள்.. தியேட்டரிலேயே ரிலீஸ் செய்யுங்கள்’ என்று சமூக வலைத்தளங்களில் தங்களது ஆதங்கத்தை கொட்டுவார்கள். 

அந்த வகையில்தான் தற்போது, மாஸ்டர் திரைப்படம் ஓடிடியில் வெளியாகிறது என்று தகவல் பரவியது. இந்தத் தகவலால் தியேட்டர் உரிமையாளர்களும், விஜய் ரசிகர்களும் அதிர்ச்சிக்கு ஆளாகியுள்ளனர். இந்த தகவல் பரவியதை அடுத்து  ‘மாஸ்டர் தியேட்டரில்தான் வெளியாக வேண்டும்’ என்று விஜய் ரசிகர்கள் ட்விட்டரில் இந்திய அளவில் #MasterOnlyOnTheaters என்ற ஹேஷ்டேக்கில் ட்ரெண்ட் ஆக்கி தெறிக்கவிட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஏற்கனவே ட்ரெய்லர் வெளியாகி பெரிய அளவில் எதிர்பார்ப்புகளை எகிற வைத்துள்ளதால் தங்கள் ஆதர்ஷன நடிகரின் படத்தை தியேட்டரில்தான் பார்ப்போம் என ரசிகர்கள் திட்டவட்டமாக தெரிவித்து வருகிறார்கள். 

இதற்கிடையே 'மாஸ்டர்' படக்குழுவிடம் புதிய தலைமுறை விசாரித்தபோது, ‘மாஸ்டர் உறுதியாக தியேட்டரில்தான் பொங்கலுக்கு வெளியாகப்போகிறது. அதற்கு, அடுத்ததாகத்தான் ஓடிடி தளம். ஆனால், அது நெட்ஃபிளிக்ஸ் அல்ல. அமேசான் பிரைமில் வெளியாகிறது” என்று அழுத்தமாகச் கூறியுள்ளனர். அதனால், பொங்கலுக்கு தியேட்டரிலேயே மாஸ்டர் படம் வெளியாகும் என்று தெரிகிறது. அதற்குள் கொரோனா கட்டுப்பாடுகளும் ஓரளவுக்கு முற்றிலுமாக தளர்த்தப்பட்டு அதிக அளவிலான ஆடியன்ஸ் அனுமதிக்கப்படுவார்கள் என்றே நம்பப்படுகிறது. அதனால், விஜய் ரசிகர்கள் திரையரங்குகளில் மகிழ்ச்சியுடன், ஆரவாரம் குறையாமல் மாஸ்டர் படத்தை பார்க்க முடியும் என்றே சொல்லலாம்.

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close