குவைத்திலிருந்து இந்தியாவுக்கு கச்சா எண்ணெய் ஏற்றி வந்த கப்பலில் திடீர் தீ விபத்து

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

குவைத்திலிருந்து இந்தியாவுக்கு கச்சா எண்ணெய் ஏற்றி வந்த இந்தியன் ஆயில் நிறுவன கப்பல் தீப்பிடித்துள்ள நிலையில் தீயை அணைக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன.


Advertisement

image
எம்.டி.நியூ டைமண்ட் என்ற பிரமாண்டமான கப்பல் 2 லட்சத்து 70 ஆயிரம் டன் கச்சா எண்ணெயுடன் குவைத்திலிருந்து புறப்பட்டு இந்தியா வந்து கொண்டிருந்தது. இலங்கை அருகே இக்கப்பல் வந்து கொண்டிருந்தபோது திடீரென தீப்பிடித்தது. இதையறிந்த இ‌லங்கை கடற்படையின் இரு கப்பல்களும் விமானம் ஒன்றும் தீயணைப்பு பணியை தொடங்கின. இதற்கிடையில் தீயணைப்பு பணிக்கு உதவ இந்திய கடலோர காவல் படையின் சவுர்யா, சாரங், சமுத்ர பெகர்தார் ஆகிய 3 கப்பல்களும் டோர்னியர் ரக விமானம் ஒன்றும் சம்பவ இடத்திற்கு விரைந்தன.

எம்.டி.நியூ டைமண்ட் கப்பல் கச்சா எண்ணெய் கொண்டு வருவதற்காக இந்தியன் ஆயில் நிறுவனம் வாடகைக்கு எடுத்த கப்பலாகும். குவைத்தின் மினா அல் அகமதி துறைமுகத்திலிருந்து புறப்பட்ட இக்கப்பல் ஹோர்முஸ் நீரிணைப்பு வழியாக அரபிக்கடலில் பயணித்து இலங்கையின் கொழும்பு துறைமுகத்துக்கு வந்தடைந்தது. அங்கிருந்து புறப்பட்டு இலங்கை எல்லையிலிருந்து 20 கடல் மைல்கள் தொலைவில் வந்து கொண்டிருக்கும்போது இன்று அதிகாலை 8 மணியளவில் தீப்பிடித்தது. தீ தற்போது ஓரளவு கட்டுக்குள் இருப்பதாகவும் கப்பலில் 23 பேர் இருந்ததாகவும் அதில் ஒருவருக்கு காயம் ஏற்பட்டுள்ளதாகவும் இலங்கை கடற்படை செய்தித் தொடர்பாளர் கேப்டன் இண்டிகா டிசில்வா தெரிவித்தார்.


Advertisement

image


இதற்கிடையில் கப்பலில் உள்ள கச்சா எண்ணெய் கசிந்து கடலில் பரவுவதை தடுக்க நடவடிக்கை எடுத்து வருவதாக இலங்கை கடல் பாதுகாப்பு ஆணையம் தெரிவித்துள்ளது. இந்தக் கப்பலில் இருந்த எண்ணெய் ஒடிஷா மாநிலம் பாரதீப் கொண்டு செல்லப்பட்டு அங்குள்ள ஆலையில் சுத்திகரிக்கப்பட இருந்தது.

loading...

Advertisement

Advertisement

Advertisement