’அட பார்த்துக்கலாம்..நாங்க இருக்கோம்’னு சொல்லுங்க : கொரோனாலிருந்து மீண்டவரின் பகிர்வு

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

‘’கொரோனா தனிமைப்படுத்தச் சொல்கின்றது ஆனால் தனித்துவிடச் சொல்லவில்லை. நிச்சயம் இந்த பேரிடரை நாம் அனைவரும் கூட்டாகவே எதிர்கொள்ள வேண்டும்’’ என்று வலியுறுத்தியுள்ளார் கொரோனா தொற்றிலிருந்து மீண்டவரான சிறார் எழுத்தாளர் உமாநாத் செல்வன்.


Advertisement

கொரோனா நோய்த் தொற்றை கூட்டாக எதிர்கொள்வது தொடர்பாக அவர் பகிர்ந்து கொண்டதாவது:-

image


Advertisement

”கொரோனா எங்க ஏரியாவுக்கு வந்துடுச்சு” “எங்க அப்பார்ட்மெண்ட்டில் ரெண்டு கேசு” என்ற பேச்சுக்கள் வெகு சாதாரணமாகிவிட்டது. ஆனால் தொடர்ச்சியாக கொரோனா வந்துவிட்டால் அவர்கள் ஏதோ பாவப்பட்டவர்கள், பாவம் செய்தவர்கள் போன்ற போக்கு எப்படியோ கட்டமைக்கப்பட்டுவிட்டது.

முதலில் யாருக்கு வேண்டுமானாலும் எந்த ரூபத்திலும் வந்து சேரலாம். அது ஒரு upgraded சளி. “நல்லா ஊர் சுத்தி இருப்பாங்க” “முகக்கவசம் போட்டிருக்க மாட்டாங்க அதான்” என்று பழி சுமத்தலாம். ஆனால் நோய் தொற்றியவர்களை எல்லாம் பார்த்தால் உங்கள் எண்ணம் மாறலாம்.

உங்கள் பகுதியில் யாருக்கேனும் நோய் தொற்று ஏற்பட்டால் அதனை எப்படி எதிர்கொள்வது?


Advertisement

நோய் தொற்று ஏற்பட்டவர்களுக்கு முதலில் தேவை உட்பலம். நம்பிக்கை. தைரியம். அதுமட்டுமில்லாமல் தன்னைச் சுற்றி இருப்பவர்கள் எப்படி நடத்துவார்கள் என்ற பயம். வீட்டில் சிலருக்கு தொற்று ஏற்பட்டால் இந்த Logistic பிரச்சனைகளை எதிர்கொள்வது எப்படி, யார் வெளியே சென்று காய்கறி, மளிகைப் பொருட்களை வாங்குவது என்ற பயங்களே தொற்றினைவிட அதிகமாக இருக்கும். இந்த பயங்களையும் கவலைகளையும் போக்கினாலே முழு கவனத்தையும் உடலில் செலுத்தி விரைவில் குணமாகலாம்.

அந்த குடும்பத்துடன் தொடர்பு இருந்தால் ஃபோனில் அழைத்து தைரியமூட்டுங்கள். “அட பார்த்துக்கலாம். என்ன உதவி வேண்டுமோ கேளுங்க. நாங்க இருக்கோம்” என்ற உரையாடல்கள் பெரிய உற்சாகம் தரும். அவர்கள் வீட்டிற்குள் சென்று அவர்களுக்கு உதவ வேண்டியதில்லை.

அவர்களுக்கு தேவையான பொருட்கள், மருந்து மாத்திரை, தழைகள், காய்கள், கனிகள், இதர பொருட்களை அவர்கள் வீட்டு வாசலில் வைக்கலாம். நிச்சயம் தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் தான். மீண்டும் மீண்டும் சொல்வது எப்படி வந்தது என விசாரித்து அவர்களை பின்னோக்கி அழைத்துச் செல்ல வேண்டியதில்லை.  அவர்களை முன்னோக்கி அழைத்துச் செல்லுங்கள். தொற்றிலிருந்து விடுபட்டவுடன் நாம எல்லாரும் சேர்ந்து சமைத்து உண்போம், தீபாவளியக் கொண்டாடுவோம் என அவர்களை முன்னோக்கி காட்சிப்படுத்துங்கள்.

image

பகுதியிலோ, அப்பார்மெண்டிலோ தொற்று இருக்கின்றது எனில் சின்னச் சின்ன சிரமங்கள் இருக்கவே செய்யும். பெரிய சிரமமாகவும் இருக்கும். நம் அரசுகள் நமக்கு ஏற்படுத்தாத சிரமங்களா? ரோட்டினை வெட்டிவிட்டு பல மாதங்கள் காணாமல் போகவில்லையா? ஏடிஎம் க்யூக்களில் நாட்கணக்காக நிற்கவில்லையா? சில சமயம் மழைக்கு காணாமல் போன சாலைகளைத் தேடவில்லையா? நம் சித்தப்பாவிற்கோ, மாமாவிற்கோ, அத்தைக்கோ, பாட்டிக்கோ, தாத்தாவிற்கோ சிக்கல் எனில் விட்டுவிடுவோமா? கவனமாக என்னெல்லாம் முடியுமோ அதையெல்லாம் செய்வோம் தானே?

இனி நம்மைச் சுற்றி இருப்பவர்கள் தான் நவீன சொந்தங்கள். அவர்களுக்கு ஒன்று என்றால் நாம் தான் ஓட வேண்டும். நமக்கு ஒன்று என்றால் நிச்சயம் வந்து நிற்பார்கள். வெவ்வேறு தளங்கள் வேறு வேறு அரசியல் நாடகங்கள் நடக்கட்டும். ஆனால் நாம் கவனமாக இருப்பது அவசியம். கொரோனா தனிமைப்படுத்தச் சொல்கின்றது ஆனால் தனித்துவிடச் சொல்லவில்லை. கூட்டான வளர்ச்சியும் எதிர்கொள்ளலுமே மனிதத்தின் தனித்தன்மைகள், அதனை இழந்துவிட வேண்டாம்.

நிச்சயம் இந்த பேரிடரை நாம் அனைவரும் கூட்டாகவே எதிர்கொள்ள வேண்டும். என்னென்ன வகையில் உடனிருக்க முடியுமோ அனைத்து வகையிலும் (பாதுகாப்புடன்) உடனிருப்போம்.’’

 

loading...

Advertisement

Advertisement

Advertisement