JUST IN

Advertisement

முதியவர்களை கொலை செய்யும் தலைக் கூத்தல் சடங்கு...! “பாரம்”

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

தமிழகத்தின் தென் பகுதிகளில் பெண்குழந்தைகளுக்கு கள்ளிப்பால் ஊற்றிக் கொலை செய்யும் குற்றம் இன்றளவும் நடந்து கொண்டு தான் இருக்கிறது. அதே போல
முதுமையின் காரணமாக உடல் செயலற்றுக் கிடக்கும் முதியவர்களை தலைக்கூத்தல் எனும் முறைப்படி கொலை செய்கிற வழக்கமும் தமிழகத்தின் பல கிராமங்களில்
உள்ளது. கரிசல்காட்டு எழுத்தாளர் கி.ராஜநாராயணன் இது குறித்து நிறைய பதிவு செய்திருக்கிறார். தென் தமிழகத்தில் மட்டுமல்ல வட தமிழகத்தின் சில பகுதிகளிலும் இந்த
தலைக்கூத்தல் முறையில் முதியவர்களை கொலை செய்யும் வழக்கம் இருப்பதாக சொல்லப்படுகிறது. 


Advertisement

“பெருசு இழுத்துகிருக்கு மனசுல என்ன கிடக்கோ., மண்ணோ பொண்ணோ தெரியல” என சாவு வீட்டில் ஒரு குரல் எழும் “சரி அவர் வாழ்ந்த வீட்டு மண்ணக் கரச்சு
கொஞ்சம் நாக்குல ஊத்துங்கப்பா” என இன்னொரு குரல் எழும். இப்படியாக முதியவர்கள் வாழ்ந்த வீட்டு மண்ணை கரைத்து வாயில் ஊற்றுவது, அவர்கள் வேலை செய்த
வயல் வெளி மண்ணை கரைத்து வாயில் ஊற்றுவது, நாணயத்தை மண்சட்டியில் தேய்த்து அந்த சிறு மணலை கரைத்து ஊற்றிக் கொல்வது. தங்கத்தை தரையில் தேய்த்து
நாக்கில் வைப்பது என இந்த தலைக்கூத்தல் எனும் கொலையினை செய்கிறவர்கள் தெரிந்தோ தெரியாமலோ பல வழிமுறைகளில் செய்து கொண்டிருக்கிறார்கள். நேரடியாக
ஊசி போட்டுக்கொல்வதும் உண்டு.

image


Advertisement

இந்தக் கருவை மையமாக வைத்து கடந்த ஆண்டு ‘பாரம்’என்ற ஒரு சினிமா வெளியானது. தேசிய விருது பெற்ற இத்திரைப்படம் தலைக்கூத்தல் கொடுமையினை வட
தமிழக மொழி வாசனையுடன் ஆழமாக பதிவு செய்தது. ஒரு கட்டிடத்தின் காவலாளியாக வேலை செய்யும் கருப்பசாமி எனும் கதாபாத்திரம் தான் கதையின் ஆன்மா. அந்த
கருப்பசாமியின் மூச்சு தலைக்கூத்தல் முறைப்படி நிறுத்தப்பட்ட சோகத்தைத் தான் டாக்கு டிராமா வடிவில் பேசுகிறது பாரம்.

கருப்பசாமிக்கு தன் தங்கை மற்றும் தங்கை மகன்கள் மீது கொள்ளைப் பிரியம். வேலை முடிந்த பிறகு தங்கை வீட்டுக்கு ஒரு எட்டு போகாமல் அவரது கால்கள் தன்
வீட்டுக்கு போவதில்லை. தங்கையின் மகன்களில் கடைசி மகன் வீரா என்றால் கருப்பசாமிக்கு கூடுதல் பிரியம். வீராவுக்கும் தாய்மாமன் என்றால் அத்தனை அன்பு.
தொழிற்சங்கவாதியான வீரா ஊரில் இல்லாத சமயத்தில்தான் கருப்பசாமி தலைக்கூத்தல் முறையில் கொல்லப்படுகிறார். உண்மையில் அவர் விஷ ஊசி போட்டு
கொல்லப்படுகிறார்.

image


Advertisement

ஒரு விபத்தில் முதுகுத் தண்டில் காயம் ஏற்பட்டு படுத்தபடுக்கையாகிப் போகும் கருப்பசாமிக்கு செலவு செய்து வைத்தியம் பார்க்க மகன் செந்தில் விரும்பவில்லை.
அதனால் அவ்வூரில் மருத்துவ உதவியாளராக வேலை செய்யும் ஒரு பெண்ணை வைத்து கருப்பசாமி விஷ ஊசி போட்டு கொலை செய்யப்படுகிறார். தலைக்கூத்தல்
சடங்கினை இப்படத்தின் மூலம் பதிவு செய்ய முயன்றிருக்கும் இயக்குநர் ப்ரியா கிருஷ்ணசாமி இங்கு தான் தனது தடத்தில் இருந்து தவறுகிறார். கருப்பசாமியின் மகன்
செந்தில் தன் தந்தைக்காக செலவு செய்ய விரும்பவில்லை என்பதால் தான் அந்தக் கொலை நடக்கிறதே தவிர வாழ்ந்து முடித்த முதியவர் அவர் என்பதால் அல்ல.
உண்மையில் கிராமங்களில் பெரும்பாலும் முதுமையால் கடைசி நாட்களை எண்ணிக் கொண்டிருக்கும் பெரியவர்களுக்குத் தான் இந்த தலைக்கூத்தல் செய்வார்கள்.,
என்றாலும் இந்த கருவை கையில் எடுத்து பேசியதற்காக இயக்குநருக்கு பாராட்டுகள்.

விஷ ஊசி போட்டு கொலை செய்யப்படும் கருப்பசாமியின் உடல் மறுநாள் காலை எந்த சலனமும் இன்றி அனைத்து சாவு சடங்குகளும் நிறைவேற்றப்பட்டு அடக்கம்
செய்யப்படுகிறது. தங்கை மகன் வீரா மாமன் சாவுக்கு நீதி கேட்டு காவல் துறையினை நாடினாலும் அது பலன் தரவில்லை. இது அவ்வளவு பெரிய குற்றம் இல்லை.
இதெல்லாம் கிராமத்தில் ஒரு வழக்கம் என்றளவில் முடிக்கப்படுகிறது கதை.

image

தலைக்கூத்தல் தொடர்பாக வீரா அக்கிராமத்தில் சிலரை சந்தித்துப் பேசுகிறார். அதில் ஒரு பெண் “நான் பலபேருக்கு தலைக் கூத்தியிருக்கேன் ., உடம்பு முடியாத ஆளுக
வீட்ல இருந்தா அந்த வீட்டு ஆளுங்க என்னைய கூப்பிடுவாங்க. நான் எண்ணெய் சீயக்கா சேச்சு ஊத்தி நல்லா நாலு எளனிய சீவி குடிக்க குடுப்பேன் முடியாதவுக போய் சேர
வேண்டிய இடத்துக்கு போய் சேந்திருவாக.” என்கிறார். “இதுக்கு எவ்ளோ கூலி வாங்கிறீங்க...?” என்ற வீராவின் கேள்விக்கு “அட காசு எல்லாம் வாங்க மாட்டேன். இத
ஒரு புண்ணியத்துக்காக பண்றேன்.” என்பார். எப்படிப் பாருங்கள்., நகர மனிதர்கள் மரணத்தை உள்வாங்கும் விதமும் கிராம மனிதர்கள் மரணத்தை உள்வாங்கியிருக்கும்
விதமும் எத்தனை வித்யாசமானது விசித்திரமானது. மாமன் சாவுக்கு நீதி கிடைக்க போராடும் வீராவின் குடும்பத்தை அக்கிராமம் வெறுத்து ஒதுக்குவதாக பதிவு செய்கிறார்
இயக்குநர். இது அதிர்ச்சியின் அடர்த்தியை மேலும் அதிகரிக்கிறது.

image

நம் வீடுகளில் ஒருவர் இயற்கையாக இறந்த பிறகு நடக்கும் சடங்குகளை இந்த தலைக்கூத்தலுடன் கொஞ்சம் ஒப்பிட்டுப் பார்த்தால் புரியும். ஒருவர் இறந்த பிறகு நீர்மாலை
எடுத்தல் என்ற வழக்கம் உண்டு இல்லையா. ஆண் இறந்தால் அவரது பங்காளிகளும் பெண் இறந்தால் அவரது கணவர் வீட்டாரும் இந்த நீர்மலை எடுக்கும் சடங்கை
செய்வார்கள். இந்த முறை காலகாலமாக நடைமுறையில் உள்ளது. இதன் பின்னனி தலைக்கூத்தல் எனும் சடங்கு தான் எனலாம். படுத்தபடுக்கையில் உயிருடன் இருக்கும்
முதியவர்களின் தலையில் குடம் குடமாக தண்ணீர் ஊற்றி மூச்சு திணறடித்து கொலை செய்வதும். ஜன்னியினை உருவாக்கும் அளவில் அதிகமாக இளநீர் கொடுத்து
அவர்களது உயிரை முடக்குவதும் என இந்த வழக்கம் ஆதிகாலம் தொட்டே இருந்திருக்க வேண்டும். அதன் தொடர்சியாகத் தான் இன்று இயல்பாக இயற்கையாக இறந்து
போகும் மனிதர்களின் சாவு சடங்குகளிலும் நீர்மாலை எடுத்தல் இளநீர் ஊற்றுதல் என்ற வழக்கம் அப்படியே தங்கியிருக்கிறது. எல்லா சடங்கு சம்பிரதாயங்களுக்கும் ஒரு
பின்னனி இருக்கும் இல்லையா அப்படியாக தலைக்கூத்தல் சடங்கின் தொடர்ச்சியாகவே இந்த நீர்மாலை எடுத்தலை பார்க்க வேண்டியிருக்கிறது.

பாரம் திரைப்பட இயக்குநர் ப்ரியா கிருஷ்ணசாமி மாற்று சினிமா தளத்தை கையாள்வதில் ஆர்வமும் திறமையும் கொண்டவர். இவர் இயக்கத்தில் இந்தி மற்றும் மராத்தி
மொழியில் வெளியான கங்கோபாய், பெர்சி ஆகிய படங்கள் முக்கியமானவை. ஏன் இந்த மாற்று சினிமாக்கள் எல்லாம் எப்போதும் சினிமா மொழியில் இருந்து விலகியே
நிற்கிறது என்ற குற்றச்சாட்டு நெடுநாட்களாக உள்ளது. பாரத்தின் மீதும் இந்த குற்றச்சாட்டு உண்டு. உண்மையில் பாரம் திரைப்படத்தின் அமெச்சூர் வகை ஒளிப்பதிவு தான்
அந்த கதையின் பாரத்தை வெகுமக்கள் மனதிற்கு எளிதாக கடத்தி இருக்கிறது என்று சொல்லலாம். ஜெயந்த் சேது மாதவனின் ஒளிப்பதிவில் இருந்த எதார்த்தம்
இத்திரைப்படத்தின் பலம். ஜெயந்த் சேது மாதவன் பார்வையாளனின் கரங்களை இறுக பற்றி தனது ஒளிப்பதிவின் மூலம் நம்மை அந்த கிராமத்திற்குள் அழைத்துச்
செல்கிறார். பார்வையாளன் ஒரு கொலைக் களத்திற்குள் அச்சமின்றி பயணிக்க அவரது ஒளிப்பதிவு உதவியிருக்கிறது.

image

பாரம் திரைப்படத்தில் கருப்பசாமியாக நடித்திருப்பவர் ‘புதுச்சேரி பல்கலைக்கழகத்தின்’ நாடகத் துறை தலைவர் ராஜு. இவர் தலைமையில் அத்துறையில் பயிற்சி பெற்ற
கலைஞர்கள் மட்டுமே இப்படத்தின் அனைத்து கதாபாத்திரங்களிலும் நடித்துள்ளனர். இப்படம் இயல்பாக அமைய இதுவும் ஒரு முக்கியக் காரணம். கடந்த ஆண்டு
நடைபெற்ற 66’வது தேசியவிருது வழங்கும் விழாவில் பாரம் திரைப்படம் தேசியவிருதினைப் பெற்றது. இயக்குநர் வெற்றிமாறன் இப்படத்தை வெளியிட்டார். நல்ல
விமர்சனமும் வரவேற்பும் கிடைத்த போதும் வசூல் ரீதியாக மாற்று சினிமாக்கள் சந்திக்கும் அதே பிரச்னையைத் தான் பாரமும் சந்தித்தது. என்றாலும் தமிழ்சினிமா இனி
முன்னெடுத்து பயணிக்க வேண்டிய பாதையினை தீர்மானிக்கும் படைப்புகளில் பாரமும் ஒன்று. நம்பிக்கை தரும் இந்தப் படைப்பு தற்போது அமேசான் ப்ரைமில்
கிடைக்கிறது.

பிறப்பைப் போலவே இறப்பையும் வாழ்வின் எதார்த்தமானதொரு நிகழ்வாக கருதும் கிராமிய மனோபாவத்தை நினைத்து வியப்பதா...? நோவதா...? முதியவர்களை கொலை
செய்யும் தலைக் கூத்தல் முறையினை தங்களது பண்பாட்டுக் கூறுகளில் ஒன்றாக நினைக்கும் எளிய மனிதர்களை இன்றளவும் தாங்கி இயங்குகின்றன இந்தியக் கிராமங்கள்.

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement