[X] Close >

‘காலத்தால் அழியாத பாடல்கள்’ .. என்றென்றும் பட்டொளி வீசும் கண்ணதாசன் !

Remembering-Kannadasan-on-his-death-anniversary

திரைப்படப் பாடல்களில் என்றென்றும் பட்டொளி வீசிப் பறப்பது கவிஞர் கண்ணதாசனின் கொடிதான் என்பதில் மாற்றுக்கருத்து இருக்க முடியாது. பிறப்பு, காதல், திருமணம்,  வாழ்க்கை, விரக்தி, அமைதி, தத்துவம் என அவர் தொடாத எல்லைகளே கிடையாது. காலத்தால் அழியாத பாடல்களைத் தந்த கவியரசர் கண்ணதாசனின் நினைவுதினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.


Advertisement

திரைப்பட பாடலாசிரியர்களில் கண்ணதாசனை முன்னோடி என்றே சொல்லலாம். எம்ஜிஆருக்கு கண்ணதாசன் எழுதிய வரிகள் எம்ஜிஆரின் அரசியல் வாழ்க்கைக்கும் பெரிய பலமாக இருந்தது என்பதை மறுக்க முடியாது. இன்றும் அரசியல் களங்களில் ஒலித்துக்கொண்டிருக்கும் எம்ஜிஆரின் சில புரட்சி பாடல்களுக்கு வரி கொடுத்தவர் கண்ணதாசன். எட்டாம் வகுப்பு மட்டுமே படித்துள்ள கண்ணதாசன் தமிழ் சினிமாவில் தத்துவப் பாடல்களுக்கு புதிய முகமாக விளங்கியவர். எம்.ஜி.ஆருக்கு மிகவும் பிடித்தமான பாடலாகக் கருதப்பட்ட ’அச்சம் என்பது மடமையடா’ பாடல் இவர் இயற்றியதே.


Advertisement

கண்ணதாசன் 1927ஆம் ஆண்டு ஜூன் 24-ல் சிறுகூடல் பட்டியில் பிறந்தார். கண்ணதாசன் கம்பரின் செய்யுளிலும், பாரதியாரின் பாடல்களிலும் மிகுந்த ஈடுபாடு கொண்டவர். பாரதியாரை மானசீகக் குருவாக ஏற்றுக் கொண்டவர். தான் பேசும் வார்த்தைகளே கவிதை தான், உதிர்க்கும் தத்துவங்களே பாடல் வரிகள் தான் என வாழ்ந்தவர் கண்ணதாசன். போகிறபோக்கில் வார்த்தைகளை கோத்து கவிதை மாலை தொடுத்த கண்ணதாசனை 'கவியரசர்' என உலகம் போற்றியதில் வியப்பேதுமில்லை. 

பாடல் எழுதுவது மட்டுமல்லாமல் சில படங்களிலும் தலையை காட்டிய கண்ணதாசனுக்கு காமராசரின் வாழ்க்கை வரலாற்றை படமாக எடுக்க வேண்டும் என்பது நீண்ட நாள் ஆசை. இதற்காக சில காட்சிகளையும் படமாக்கிய அவரால், இறுதிவரை அந்த ஆசையை நிறைவேற்ற இயலவில்லை.


Advertisement

திரைப்பாடல்கள், இலக்கியம், நாவல், மொழிபெயர்ப்பு என கண்ணதாசன் தொடாதே துறைகளே இல்லை. நான்காயிரத்திற்கும் மேற்பட்ட கவிதைகளையும், ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட திரைப்படப் பாடல்களையும் படைத்த தமிழன்னையின் தவப்புதல்வன். சண்டமாருதம், திருமகள், திரை ஒலி, தென்றல், தென்றல்திரை, முல்லை, கண்ணதாசன் ஆகிய இதழ்களின் ஆசிரியராக இருந்தவர். 

தமிழக அரசின் அரசவைக் கவிஞராகவும் கண்ணதாசன் பதவி வகித்தார். ’சேரமான் காதலி’ எனும் நாவலுக்காக சாகித்ய அகாடமி விருதினையும் கண்ணதாசன் பெற்றுள்ளார். இந்துமதம் குறித்து இவர் எழுதிய ’அர்த்தமுள்ள இந்துமதம்’ இன்றளவும் விற்பனையில் முன்னணியில் உள்ளது.

இவரின் பாடல் வரிகள் அனைத்தும் இதயத்தின் வலிகளை எல்லாம் காற்றோடு கரைத்திடும் வலு உடையது. பாடல் வரிகளால் இன்றும் வாழ்ந்து வரும் கண்ணதாசன், உடல்நலக்குறைவால் அமெரிக்காவின் சிகாகோ மருத்துவமனையில் 1981, அக்டோபர் 17-ல் மறைந்தார். கண்ணதாசன் நினைவைப் போற்றும் வகையில் சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் அரசு சார்பில் மணிமண்டபம் அமைக்கப்பட்டுள்ளது.

தனது கடைசி பாடலை மூன்றாம் பிறை படத்திற்காக எழுதினார் கண்ணதாசன். 'கண்ணே கலைமானே' எனத்தொடங்கும் பாடலில் அவர் எழுதிய 'உனக்கே உயிரானேன் என்னாளும் எனை நீ மறவாதே' என்ற வரியை இன்றும் தமிழ் சினிமாவும், கண்ணதாசன் ரசிகர்களும் இதயத்தில் வைத்திருக்கிறார்கள். ஆமாம். எந்த நாளும் மறக்க முடியாத நபர் தான் கண்ணதாசன்!
 

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close