பிரதமர் நரேந்திர மோடியை கொல்ல சதி செய்ததாக எழுந்த புகாரில் மாவோயிஸ்ட் ஆதரவாளர்கள் மற்றும் சமூக செயற்பாட்டாளர்கள் வீடுகளில் இன்று போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.
1818-ம் ஆண்டு நடந்த போரின் நினைவாக கோரேகாவ் பீமா பகுதியில் இந்த ஆண்டும் ஜனவரி ஒன்றாம் தேதி நடைபெற்ற அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியில் வன்முறை வெடித்தது. இந்த வன்முறை சம்பவம் தொடர்பாக புனே போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பீமா கொரிகோன் போரின் 200ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி ஷனிவார் வாடா பகுதியில் கடந்த ஆண்டு டிசம்பர் 31ம் தேதி எல்கர் பரிஷத் என்ற நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஜிக்னேஷ் மேவானி, உமர் காலித் உள்ளிட்டோர் கலந்து கொண்டு பேசினர். இந்த எல்கர் பரிஷத் நிகழ்ச்சியில் பேசப்பட்ட விவரங்களையும் போலீசார் ஆய்வு செய்தனர். இந்நிகழ்ச்சியில் வன்முறையை தூண்டும் வகையில் சிலர் பேசியதாக போலீசார் தரப்பில் கண்டறியப்பட்டது. அதன்படி எல்கர் பரிஷத் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சிலரின் வீடுகளில் கடந்த ஜூன் மாதம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்தச் சோதனைகளின் போது பிரதமர் மோடியை கொல்ல சதித்திட்டம் தீட்டியது தொடர்பாக கடிதம் ஒன்றினை கைப்பற்றியதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அந்தக் கடிதம் தொடர்பாக 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
பின்னர், பிரதமரை கொல்ல மாவோயிஸ்ட்டுகள் சதி திட்டம் தீட்டுவதாக வந்த கடிதம் தொடர்பாக டெல்லியில் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் உயர்மட்டக்குழுக் கூட்டம் நடைபெற்றது. அப்போது, இதுதொடர்பாக விசாரணையை துரிதப்படுத்தப்பட்டு தொடர்புடையவர்கள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், இந்த விவகாரத்தில் பிரதமர் மோடியை கொல்ல சதித்திட்டம் தீட்டப்படுவது தொடர்பாக நக்சலைட்டுகளுடன் தொடர்புள்ளதாக கருதப்படும் பல்வேறு நபர்களின் வீடுகளில் நாடு முழுவதும் இன்று ரெய்டு நடைபெற்றது. அதன்படி ஐதராபாத்தில் உள்ள இடதுசாரி செயல்பாட்டாளரும், கவிஞருமான வரவர ராவ், மும்பையில் உள்ள செயல்பாட்டாளர்கள் வெர்னான் கோன்சர்வ்ல் மற்றும் அருண் பெர்ரெரா, தொழிற்சங்க செயல்பாட்டாளர் சுதா பரத்வாஜ், ராஞ்சியில் உள்ள சதன் சுவாமி, டெல்லியில் வசிக்கும் சிவில் உரிமை செயல்பாட்டாளர் நவலகா ஆகியோரின் வீடுகள் இந்தச் சோதனை நடத்தப்பட்டது. பலரும் கைது செய்யப்பட்டு அவர்கள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளனர்.
இதன் ஒருபகுதியாக, ஐதராபாத்தில் உள்ள வரவர ராவ் மற்றும் அவரது மகளின் வீடுகளில் இன்று காலை 7 மணி முதல் சோதனை நடத்தினர். ஐதராபாத்தின் அசோக் நகரில் உள்ள ஹிமசை பிளாட்டில் வரவர ராவ் மற்றும அவரது மகள் குடும்பத்தினர் தனித்தனியே வசித்து வந்தனர். ஏற்கனவே வரவர ராவ் வீட்டில் காவலில்தான் தான் உள்ளார்.
வரவர ராவை கைது செய்த போலிசார் முதலில் காந்தி மருத்துவமனைக்கு அவரை அழைத்துச் சென்று மருத்துவ பரிசோதனை செய்தனர். பின்னர், நம்பள்ளி கிரிமினல் நீதிமன்றத்தில் வரவர ராவை ஆஜர் படுத்தினர். இதனையடுத்து வரவர ராவை புனேவுக்கு கொண்டு செல்ல போலீசார் திட்டமிட்டுள்ளனர்.
வரவர ராவ் கைது தொடர்பாக அவரது உறவினரும் வீக்ஷனம் என்ற தெலுங்கு இதழின் ஆசிரியருமான வேணுகோபால் வையர் பத்திரிகைக்கு அளித்த பேட்டியில், “தலித்துக்கள் மற்றும் ஆதிவாசிகள் கொல்லப்படுவதற்கு எதிராக குரல் எழுப்புவர்களின் குரலை நசுக்கும் வகையில் இந்த முயற்சி உள்ளது. பிரதமர் மோடியை கொல்ல சதித்திட்டம் தீட்டிய புகாரில் வரவர ராவிற்கு தொடர்பு இருப்பதாக போலீசார் கதை கட்டுகிறார்கள். அதில் எவ்வித உண்மையும் இல்லை. வரவர ராவை தாண்டி அவரது இரண்டு மகள்கள் மற்றும் மருமகன்களையும் குறிவைக்கிறார்கள். அவர்களுக்கு வரவர ராவின் அரசியலில் தொடர்பு இல்லை” என்றார்.
திரைப்பட பாணியில் ஆசையைத் தூண்டி நூதன மோசடி ! ஓட்டல் உரிமையாளர் கைது
திருமண நாளை கொண்டாடுவதற்கு முன்பாக வீர மரணமடைந்த ராணுவ மேஜர்
எரிக்சன் நிறுவன வழக்கு ! அனில் அம்பானி குற்றவாளி: உச்சநீதிமன்றம் அறிவிப்பு
கர்ப்பப்பை புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு குழந்தை பிறந்தது !
''புல்வாமா தாக்குதலில் வலுவான ஆதாரங்கள் உள்ளன'' அமைச்சர் ரத்தோர் திட்டவட்டம்