[X] Close
JUST IN
  • BREAKING-NEWS புவி வட்டப்பாதையில் இருந்து விலகிய சந்திரயான் -2, நிலவின் வட்டப் பாதையைச் சுற்றத் தொடங்கியது
  • BREAKING-NEWS பால் உற்பத்தியாளர்கள்-மக்கள் இடையே பிளவை ஏற்படுத்த முதல்வர் பழனிசாமி முயற்சிக்கிறார் - மு.க.ஸ்டாலின்
  • BREAKING-NEWS பரோலை மேலும் ஒரு மாதம் நீட்டிக்கக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் நளினி வழக்கு. கோரிக்கை குறித்து சிறைத்துறை பதிலளிக்க உத்தரவு
  • BREAKING-NEWS ஜம்மு காஷ்மீர் விவகாரம் தொடர்பாக 22ஆம் தேதி டெல்லியில் திமுக சார்பில் ஆர்ப்பாட்டம். அனைத்துக் கட்சி எம்.பி.க்கள் பங்கேற்பார்கள் என மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
  • BREAKING-NEWS 12 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தகவல்

கேரளாவில் தலித் இளைஞர் ஆணவக் கொலையா ? 

honour-killing-in-kerala-groom-abducted-killed

கேரள மாநிலம் கோட்டயம் பகுதியை சேர்ந்தவர் கெவின் பி ஜோசப். இவரும் கொல்லம் பகுதியை சேர்ந்த நீனு என்ற பெண்ணும் கடந்த இரண்டு வருடங்களாக காதலித்து வந்துள்ளனர். இருவரும் கோட்டயம் பகுதியில் தங்கி தங்கள் கல்லூரி படிப்பை படிந்து வந்துள்ளனர். அப்போதே இவர்கள் காதலர்களாக உலா வந்துள்ளனர். இவர்களின் காதல் விவகாரம் கெவின் வீட்டிற்கு தெரிந்துள்ளது. கல்லூரி படிப்பை முடித்த கெவின் வேலைக்காக துபாய் சென்றுவிட்டார். நீனு தனது வீட்டில் இருந்துள்ளார்.

துபாயில் இருந்து கடந்த ஜனவரி தனது சொந்த ஊருக்கு திரும்பிய கெவின் நீனுவை திருமணம் செய்துக்கொள்ள முடிவு செய்தார். நீனுவின் வீட்டிற்கு தெரியாமல் திருமணம் நடைப்பெற்றுள்ளது. இதனையடுத்து நீனு பெற்றோர்கள் காவல்நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளனர். அதன்படி திருமணம் செய்து கொண்ட காதல் ஜோடி காவல் நிலையம் அழைத்து வரப்பட்டு நீனுவை அவருடைய பெற்றோர்களுடன் வலுக்கட்டாயமாக அனுப்பிவைத்துள்ளனர். இதன்பின்னர் வீட்டில் தனியாக இருந்த கெவின் கடத்தப்பட்டு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இந்த விவகாரம் தற்போது பூதாகரமாக கிளம்பியுள்ளது. இதுதொடர்பாக தனிப்படை அமைத்து விசாரணை நடைப்பெற்று வருகிறது.

இதுகுறித்து காவல்துறை தரப்பில் கூறப்படுவதாவது, கெவின் கோட்டயம் பகுதியை சேர்ந்த தலித் கிறிஸ்துவ குடும்பத்தை சேர்ந்தவர். நடுத்தரமான குடும்ப பிண்ணனியை கொண்டவர். கெவின் டிப்ளமோ பிரிவில் எலக்ட்ரிக்கல் என்ஜீனியரிங் முடித்துள்ளார். வேலைக்காக துபாய் சென்ற கெவின் கடந்த ஜனவரி மாதம் தனது சொந்த ஊருக்கு திரும்பினார். நீனு கொல்லம் பகுதியை சேர்ந்தவர். இவர் வசதிப்படைத்த செல்வாக்குள்ள கிறிஸ்துவ குடும்பத்தைச் சேர்ந்தவர். நீனு தாயார் இஸ்லாம் மதத்தை சேர்ந்தவர். இவர்களின் காதல் விவகாரம் நீனு குடும்பத்தினருக்கு பிடிக்கவில்லை. குறிப்பாக நீனுவின் சகோதரர் ஷானு சாக்கோ கடுமையான எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளார். இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான ஷானுவை தற்போது தேடி வருகிறோம் என்றனர்.

இதுதொடர்பாக கெவினின் உறவினர் ராஜன் பேசுகையில், பெற்றோர்களின் எதிர்ப்பையும் மீறி கெவின் ஜோசப்பும் - நீனுவும் திருமணம் செய்துக்கொள்ள முடிவு செய்தனர். இதனையடுத்து கடந்த வெள்ளிக்கிழமை கோட்டயத்தை அடுத்த எட்டுமனூர் பகுதியில் உள்ள துணை சார்பதிவாளர் அலுவலகத்தில் பதிவு திருமணம் செய்து கொண்டனர். இந்த விவகாரம் நீனு குடும்பத்திற்கு தெரிய வர இதுதொடர்பாக காந்திநகர் காவல்நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளனர். மணமக்கள் இருவரும் காவல்நிலையம் அழைத்து செல்லப்பட்டனர். அங்கு நீனு கட்டாயப்படுத்தி அவரது குடும்பத்தினருடன் அனுப்பி வைக்கப்பட்டார். 

கெவின் தனது உறவினரான அனிஷ்  வீட்டில் தங்கினான். நீனு தங்கியிருந்த விடுதி அனிஷின் ஊருக்கு சற்று அருகாமையில் இருந்ததால் அங்கு தங்கியிருந்தான். ஞாயிற்றுக்கிழமை காலை ஒரு கும்பல் அனிஷின் வீட்டிற்கு வந்து கெவின் மற்றும் அனிஷை கடத்தி சென்றனர். அவர்களின் வீட்டையும் நொறுக்கினர். இதுகுறித்து தகவல் அறிந்தவுடன் காவல்நிலையத்தில் புகார் தெரிவித்தோம். ஆனால் துணை காவல் ஆய்வாளர் எங்கள் புகாரை அலட்சியப்படுத்தினார். அன்றைய தினம் முதலமைச்சர் பினராய் விஜயன் அரசு நிகழ்ச்சிக்காக அம்மாவட்டத்திற்கு வருவதாகவும் அதற்கான பணிகளில் தான் இருப்பதாகவும் துணை காவல் ஆய்வாளர் கூறினார். காலை 9.30 மணிக்கே காவல்நிலையம் சென்றுவிட்டோம். மதியவேளையில் அனிஷை மட்டும் அந்தக் கும்பல் வீட்டில் இறக்கிவிட்டு சென்றனர். கெவின் குறித்து அனிஷ் கேட்டதற்கு தங்கள் கட்டுப்பாட்டில் இருந்து தப்பிவிட்டதாக அவர்கள் கூறியுள்ளனர். மறுநாள் காலை தென்மலா காட்டுப்பகுதிக்கு அருகில் உள்ள கால்வாயில் கெவினை சடலமாகத் தான் பார்த்தோம் எனக் கூறினார்.

இந்த விவகாரம் அம்மாநில முதலமைச்சர் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. இதனையடுத்து கடமையை செய்யாத துணை காவல் ஆய்வாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.இச்சம்பவம் தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் இரு வாகனம் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் முதல்வர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக கேரள மனித உரிமை ஆணையம் காவல்துறை அறிக்கை கோரியுள்ளது. இது ஆணவக் கொலை என சந்தேகிக்கப்படுவதால் இதில் காவல்துறை ஏதாவது சமரசம் செய்துள்ளதா என்பது குறித்து காவல்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி மூன்று வாரத்தில் அறிக்கை சமர்பிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close