[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தமிழகத்தில் 2 நாட்கள் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
  • BREAKING-NEWS குழந்தைகளை கடத்தி வைத்த புகாரில் நித்தியானந்தா மீது கிரிமினல் வழக்குப்பதிவு
  • BREAKING-NEWS 2021-ஆம் ஆண்டு தேர்தலில் தமிழக மக்கள் அதிசயம் நிகழ்த்துவார்கள்: ரஜினிகாந்த்
  • BREAKING-NEWS தமிழகத்தின் 33‌-ஆவது மாவட்டமாக இன்று உதயமாகிறது தென்காசி

‘கண்ணே கலைமானே’ – திரைப்பார்வை

kanne-kalaimane-review

இயற்கையின் மீது பெரும் காதல் கொண்ட விவசாயி, தன் மனைவியின் மீதும் அதே அளவிற்கு காதலைப் பரப்பி உருகும் படமே ‘கண்ணே கலைமானே’.

தனது திரைப்படங்களின் மூலம் சமூகத்துக்கு அவசியமான கருத்துகளை தொடர்ச்சியாக சொல்லி வருபவர் இயக்குநர் சீனு ராமசாமி. நீர் பறவை, தர்மதுரை என அந்த வரிசையில் இப்போது இடம்பிடித்திருக்கும் திரைப்படம் ‘கண்ணே கலைமானே’. இயற்கை விவசாயம், குடும்ப உறவு, சுயத்தை போற்றும் பெண், காதல் போற்றும் இளைஞன் என சமூகம் சமகாலத்தில் மதிக்கும் எல்லா அம்சங்களையும் திரைக்கதையில் வைத்து திரைப்படமாக்கியிருக்கிறார்.

கல்லூரியில் வேளாண் பட்டம் பெற்று, இயற்கை விவசாயத்தை முன்னெடுக்கும் இளைஞன் உதயநிதி ஸ்டாலின். தான் மட்டுமின்றி, எல்லோருக்கும் அந்த முனைப்பு வேண்டும் என்ற அவசியத்தோடும் இயங்கும் கமலக்கண்ணன் எனும் கதாபாத்திரத்தில் நன்றாக பொருந்தியிருக்கிறார். அவருக்கு வங்கி மேலாளர் தமன்னாவுடன் நட்பு ஏற்பட்டு பிறகு காதலாய் மாறி திருமணமும் ஆக, அதன்பிறகான எல்லா நிகழ்வுகளிலும் தன் மனைவிக்கு ‘கண்ணே கலைமானே’ என உறுதுணையாய் இருக்கிறார். சில இடங்களில் உதயநிதியின் நடிப்பில் யதார்த்தம் மீறிய ஒரு நாடகத் தனம் இருப்பதையும் பார்க்கமுடிகிறது.

தமன்னா, வடிவுக்கரசி குறிப்பிடுவது போல ‘செவீர்’ நிறத்தில் வங்கி அதிகாரியாக வருகிறார். துளியும் கவர்ச்சியின்றி சுயத்தின் மீதும் பெருமதிப்பு கொண்ட பெண்ணாக அவரது கதாபாத்திரம் ரசிக்க வைக்கிறது. ‘பாரதி’ என பெயருக்கேற்ப தமன்னாவும் அதனை உணர்ந்து நடித்திருக்கிறார்.

உதயநிதியின் அப்பத்தாவாக வடிவுக்கரசி கச்சிதமான பொருத்தம். தன் பேரன் காதலிப்பது தெரிந்ததும் மென்மையான வில்லத்தனத்தை வெளிப்படுத்துவதும், ’ரசம்’ சாப்பிட்டுவிட்டு செல்லப் பொறாமைக் கொள்வதும், தமன்னாவிற்கு எண்ணெய் தேய்த்து விடுவதும் என கலக்கல். பூ ராம், வசுந்தரா, சாஜி, உதயநிதியின் நண்பர்கள் ஆகியோரும் தங்களுக்கு கொடுத்த வேலையை சரியாக செய்திருக்கிறார்கள்.

யுவன் ஷங்கர் பல இடங்களில் மவுனமாய் ரசிக்க வைக்கிறார். பின்னணி இசையும் ‘கண்ணே கலைமானே’ படத்திற்கு பலம். ஜலந்தர் வாசனின் ஒளிப்பதிவு பசுமையாக கண்களில் நிறைகிறது. காசி விஸ்வநாதனின் படத்தொகுப்பு கதை களம் தாண்டிவிடக்கூடாது என்பதற்காய் கச்சிதமாய் நறுக்கியிருக்கிறது. இயற்கை விவசாயியாக வரும் உதயநிதி கடனுக்கு பயந்து ஓடும் விவசாயியிடமும், வங்கிக் கடனுக்குக் கையெழுத்து கேட்டு வரும் மாணவி மூலமும் கொஞ்சம் அரசியலும் பேசியிருக்கிறார். 

சமூகத்துக்கு தேவையான அம்சங்கள் இருந்தாலும், ஒரு முழுமையான திரைப்படமாக ‘கண்ணே கலைமானே’-வில் எதிர்பார்த்தபடியே நகரும் திரைக்கதையும், சற்றே அதிகமான நாடகத்தனமும் சில இடங்களில் சலிப்பை ஏற்படுத்துகின்றன. அவற்றை எல்லாமும் சரி செய்து படத்தை உருவாக்கியிருந்தால், கதை மாந்தர்கள் தமன்னாவைக் கொண்டாடுவதைப் போலவே தமிழ் சினிமா ரசிகனும் படத்தை ‘கண்ணே கலைமானே’ எனக் கொண்டாடியிருப்பான். 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close