Published : 01,Dec 2020 07:35 PM
வேதாந்தா நிறுவனத்தின் மேல்முறையீட்டை தள்ளுபடி செய்யக்கோரி தமிழக அரசு கூடுதல் மனு

ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்கக் கோரும் வேதாந்தா நிறுவனத்தின் மேல்முறையீட்டை தள்ளுபடி செய்ய தமிழக அரசு கூடுதல் மனு தாக்கல் செய்துள்ளது.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி அப்பகுதி மக்கள் மிகப்பெரிய போராட்டம் நடத்தினர். அதில் போலீசார் துப்பாக்கியால் சுட்டதில் 13 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து ஸ்டெர்லைட் ஆலையை மூட தமிழக அரசு உத்தரவிட்டது. இதை எதிர்த்து வேதாந்தா நிறுவனம் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. ஆனால் தமிழக அரசின் உத்தரவுக்கு தடை விதிக்க உயர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்தது. தடை தொடரும் எனவும் உத்தரவிட்டு மனுவை தள்ளுபடி செய்தது.
இதையடுத்து வேதாந்தா நிறுவனம் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது ஆலையை திறக்க ஒருபோதும் அனுமதி வழங்க முடியாது என தமிழக அரசு திட்டவட்டமாக தெரிவித்தது. மேலும், ஆலையை இடைக் காலமாக திறக்க அனுமதி கோரக்கூட அந்நிறுவனத்திற்கு எந்தவிதமான முகாந்திரமும் கிடையாது எனவும் தமிழக அரசு குறிப்பிட்டது.
வேதாந்தா நிறுவனத்தை நடத்த தடை விதிக்கப்பட்டுள்ள சூழலில், நிறுவனத்தைத் திறப்பதற்கான அனுமதி வேண்டும் என்று, நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு விசாரணை நடைபெற்றுக் கொண்டுள்ளது. ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்கக் கோரும் இந்த வழக்கில், சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒருதலைப் பட்சமாக விசாரணை நடந்ததாகக் கூறி, வேதாந்தா நிறுவனத்தின் தரப்பில் மேல் முறையீடு செய்யப்பட்டிருந்தது.
இந்நிலையில், ஸ்டெர்லைட் விவகாரத்தில் உயர் நீதிமன்ற விசாரணையை விசாரிக்கும் வேதாந்தா மனுவை தள்ளுபடி செய்யவேண்டும் என தமிழக அரசு அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளது.